Published:Updated:

`எங்க அம்மா நிச்சயம் கிடைப்பாங்க'-பாசப் போராட்டம் நடத்தும் சாந்தகுமாருக்கு நம்பிக்கை கொடுத்த செய்தி!

'அம்மா, உங்களைத் தேடி உங்க மகன் வந்திருக்கேன். எங்கம்மா இருக்க வாம்மா' என டென்மார்க்கைச் சேர்ந்த டேவிட் சாந்தகுமார் என்ற இளைஞர் தமிழில் பேசியபடி தஞ்சாவூர் பகுதியில் தன் தாயைத் தேடிவருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேவிட் சாந்தகுமார்
டேவிட் சாந்தகுமார்

'அம்மா, உங்களைத் தேடி உங்க மகன் வந்திருக்கேன். எங்கம்மா இருக்க வாம்மா' என டென்மார்க்கைச் சேர்ந்த டேவிட் சாந்தகுமார் என்ற இளைஞர், தமிழில் பேசியபடி தஞ்சாவூர் அம்மாப்பேட்டை பகுதியில் தன் தாயைத் தேடிவருவது அனைவரையும் உருக்கத்தில் ஆழ்த்தியது.

டேவிட் சாந்தகுமார்
டேவிட் சாந்தகுமார்

வறுமையின் காரணமாகப் டென்மார்க்கைச் சேர்ந்த தம்பதிக்கு சிறு வயதிலேயே பெற்றோரால் தத்து கொடுக்கப்பட்ட குழந்தை, தற்போது இளைஞராக வளர்ந்து 39 வருடங்களுக்குப் பிறகு தன்னை தத்துக் கொடுத்த உண்மையான பெற்றோரைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

தற்போது டென்மார்க்கில் இருக்கும் இவர், கை நிறைய சம்பளம் வாங்குவதுடன் கல்யாணமாகி குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், தன் உண்மையான பெற்றோரைக் காண வேண்டும் என ஆசைப்பட்டு, அவர்களை முதலில் சென்னைப் பகுதியில் தேடிப்பார்த்துவிட்டு, பிறகு தற்போது தஞ்சாவூர் பகுதியில் தேடி வருகிறார். இதுகுறித்து விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். தாயைத் தேடி டென்மார்க் டு தஞ்சாவூர்... சினிமாவை மிஞ்சும் 39 வருட பாசப்போராட்டம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதைப் படித்த வாசகர்கள், 39 வருடங்களுக்குப் பிறகு தாயைத் தேடிவந்திருக்கும் இளைஞரை நினைத்து நெகிழ்ச்சியடைந்தனர்.

தாயைத் தேடும் டேவிட் சாந்தகுமார்
தாயைத் தேடும் டேவிட் சாந்தகுமார்

இந்த நிலையில், இன்றும் தனது தாயைத் தேடி டேவிட் சாந்தகுமார் அம்மாப்பேட்டை பகுதிக்கு வந்தார். அப்போது, ``அம்மா உங்களைத் தேடி உங்க மகன் வந்திருக்கேன். எங்கம்மா இருக்க வாம்மா'' எனத் தமிழில் பேசிக்கொண்டே தேடினார். அதைக் கண்ட அனைவரும் அவரின் நிலையை எண்ணி நெகிழ்ந்தனர். மேலும், `டேவிட் சாந்தகுமாரின் தாய் சீக்கிரமே கிடைக்க வேண்டும்; அதுதான் எல்லோருடைய ஆசையும்' என தெரிவித்தனர்.

`அம்மா அப்பா... பொய் சொன்னது போதும்..!’ - இதயங்களை வென்ற 9 வயதுச் சிறுமியின் கடிதம்

குறிப்பாக, அம்மாப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்திற்குச் சென்று, தன்னிடம் இருந்த ஆவணங்களைக் கொடுத்தார் சாந்தகுமார். அதன்பிறகு, அங்கு பணியில் இருந்தவர்கள் பழைய கோப்புகளை எடுத்துப் பார்த்தனர். அப்போது, டேவிட் சாந்தகுமாரின் பெற்றோர் வாடகை வீட்டில் குடியிருந்ததும் அந்த வீட்டின் உரிமையாளர் பெயரும் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெயரில் உள்ளவர்கள் அங்கு இல்லை என்றும் தெரியவந்தது. அப்போது சாந்தகுமார், `எங்க அம்மா நிச்சயம் கிடைப்பாங்க என்ற நம்பிக்கை இருக்கு. அவங்க கிடைத்ததும் அவங்கள மகாராணி போல வச்சு பார்த்துக்கணும்' எனக் கூறியிருக்கிறார். அதைக் கேட்ட அனைவரும்,''நாங்க கடவுளை வேண்டிக்கிறோம் உங்க அம்மா கிடைச்சிடுவாங்க' என நம்பிக்கை கொடுத்துத் தேற்றினர்.

தாயை தேடும் டேவிட் சாந்தகுமார்
தாயை தேடும் டேவிட் சாந்தகுமார்

இதுகுறித்து டேவிட்சாந்தகுமாருக்கு உதவியாக வந்திருக்கும் டிரைவர் பழநியிடம் பேசினோம், ``டேவிட் சாந்தகுமாரின் தாயைத் தேடி நாங்களும், டென்மார்கைச் சேர்ந்த வழக்கறிஞர், மற்றொரு வழக்கறிஞர் அஞ்சலி பவார் ஆகிய நான்கு பேரும் வந்தோம். அம்மாப்பேட்டை பகுதியில் பல இடங்களில் தேடினோம். அப்போது, தன் அம்மாவின் புகைப்படத்தை வைத்து கொண்டு, சாந்தகுமார் அடிக்கடி தொட்டுத் தொட்டு முத்தம் கொடுத்துகொண்டே இருந்தார்.

மழை... அம்மா... துள்ளல்..! #MyVikatan

அதைப் பார்த்ததும் எனக்கு கண்கள் கலங்கின. ஏனென்றால் எனக்கு அம்மா அப்பா இல்லை. அதனால் ஏற்படும் வேதனையை நான் அறிவேன். அப்போ, உங்க அம்மா சீக்கிரமே கிடைச்சுடுவாங்கன்னு தட்டிக்கொடுத்தேன். அதற்கு, அந்த நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது என்றார். இதேபோல் பேரூராட்சி அலுவலகத்திற்குச் சென்று எங்களிடம் இருந்த ஆவணங்களைக் காண்பித்து உதவி கேட்டோம்.

தாயை தேடும் டேவிட் சாந்தகுமார்
தாயை தேடும் டேவிட் சாந்தகுமார்

விலை மதிக்க முடியாத அன்பின் மகத்துவத்தை உணர்ந்த அவர்கள், எந்தத் தாமதமும் செய்யாமல் உடனே பெயர் மற்றும் முகவரியை வைத்து தேடினர். சாந்தகுமாரின் தாய் வாடகை வீட்டில் குடியிருந்ததும், அந்த வீட்டின் உரிமையாளர் பெயரும் கண்டுபிடித்தனர். ஆனால், அவர்கள் அந்த வீட்டில் இல்லாதது கொஞ்சம் பின்னடைவைத்தந்தது. அப்போது, தன் தாயின் முகத்தை எப்போது பார்ப்போம் என்ற ஏக்கம் சாந்தகுமார் முகத்தில் தெரிந்தது. இருப்பினும், இந்த நம்பிக்கையை வைத்து மீண்டும் தேடிக்கொண்டிருக்கிறோம்.

இதையடுத்து, ஆர்சுத்திப்பட்டு என்ற கிராமத்தில் சாந்தகுமாரின் தாய் போல் ஒருவர் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அப்போது சாந்தகுமார் முகத்தில் ஒரு பரவசம் தெரிந்தது. அங்கேயும் சென்று பார்த்தோம். ஆனால் பலனில்லை. அவருக்கே குழந்தைகள் உள்ள நிலையில், தன் தாயைப் பார்ப்பதற்காக சாந்தகுமார் குழந்தைபோல் தவித்துகொண்டிருக்கிறார்.

பேரூராட்சி அலுவலகத்தில்
பேரூராட்சி அலுவலகத்தில்

`அம்மா உங்களைத் தேடி உங்க மகன் வந்திருக்கேன் எங்கம்மா இருக்க, வாம்மா'' எனத் தமிழில் பேசிக்கொண்டே தேடுகிறார். நிச்சயம் அந்த அன்பு மகனின் ஆசை நிறைவேறும்; அந்த நம்பிக்கை எங்களைவிட அவருக்கு நிறைய இருக்கிறது'' என்றார்.

நிறைய மிரட்டல்கள் வந்தது உண்மைதான்! - நக்கலைட்ஸ் தனம் அம்மா