Published:Updated:

`கம்மல்களைவிட பூஞ்சியின் உயிர்தான் முக்கியம்' - புரசைவாக்கத்தில் நடந்த நெகிழ்ச்சிப் போராட்டம்

எஸ்.மகேஷ்

பூஞ்சி என்ற பிராய்லர் கோழியை புரசைவாக்கத்தில் குடியிருக்கும் ஒரு குடும்பத்தினர் செல்லமாக வளர்த்தனர். கம்மல்களை விழுங்கிய பூஞ்சியைக் காப்பாற்ற அந்தக் குடும்பத்தினர் போராடிய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

பூஞ்சி
பூஞ்சி

சென்னை புரசைவாக்கம் நெல்வயல் சந்துப் பகுதியில் குடியிருப்பவர் சிவக்குமார். இவர், மெடிக்கல்களுக்கு மருந்து சப்ளை செய்துவருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லை. சிவக்குமாரின் அக்காள் லதா. இவரின் மகள் தீபா (21). இவர், ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்து வருகிறார். கடந்த ஓராண்டுக்குமுன் சிவக்குமார், பிராய்லர் கோழி குஞ்சு ஒன்றை வீட்டுக்கு வாங்கிவந்தார். அதற்கு `பூஞ்சி' என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்துவந்தார். வீட்டில் மற்றவர்களைவிட பூஞ்சியை தீபா அக்கறையாக கவனித்துக்கொள்வார். இதனால் தீபா வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தால் பூஞ்சிதான் முதலில் அவரை வரவேற்கும்.

பூஞ்சியின் வயிற்றில் உள்ள கம்மல்கள்
பூஞ்சியின் வயிற்றில் உள்ள கம்மல்கள்

கடந்த சில தினங்களுக்கு முன் தீபா, காதில் அணிந்திருந்த கம்மலைக் கழற்றிவிட்டு தலைவாரிக்கொண்டிருந்தார். அப்போது பூஞ்சி அவரின் அருகில் நின்றுகொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் பளபளவென மின்னிய தங்கக் கம்மல்களை பூஞ்சி கொத்தியது. கண் இமைக்கும் நேரத்தில் இரண்டு கம்மல்களையும் பூஞ்சி விழுங்கிவிட்டது. அதைப்பார்த்த தீபா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக பூஞ்சியைத் தூக்கிக்கொண்டு வீட்டில் உள்ளவர்களிடம் விவரத்தைக் கூறினார். அதைக்கேட்டு அனைவரும் பதற்றமடைந்தனர்.

இதனால் பூஞ்சியை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். பூஞ்சியின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்த கால்நடை மருத்துவர் சொக்கலிங்கம், இரைப்பையில் கம்மல்கள் இருப்பதைக் கண்டறிந்தார். அப்போது என்ன சிகிச்சை அளிக்கலாம் என டாக்டரிடம் சிவக்குமார் கேட்டார். அப்போது கம்மலை எடுக்கவில்லையெனில் பூஞ்சியின் உயிருக்கே ஆபத்து என்று டாக்டர் தெரிவித்தார். அப்போது எங்களுக்கு கம்மலைவிட பூஞ்சிதான் முக்கியம் என்று சிவக்குமார் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதையடுத்து பூஞ்சிக்கு அறுவை சிகிச்சை செய்து கம்மல்களை எடுத்துவிட்டால் உயிருக்கு ஆபத்து இல்லை என்று டாக்டர் தெரிவித்தார். அதன்படி மயக்க மருந்து, செயற்கை சுவாசம் கொடுத்து பூஞ்சிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரைப்பையிலிருந்த கம்மல்களை டாக்டர் சொக்கலிங்கம் எடுத்தார். அதன்பிறகு திடீரென பூஞ்சியின் உடல்நிலை மோசமானது. பூஞ்சியைக் காப்பாற்ற சிவக்குமார் குடும்பத்தினர் பிரார்த்தனை செய்தனர். ஆனால், அரைமணி நேரத்தில் பூஞ்சி இறந்துவிட்டது.

இதனால் சிவக்குமார், தீபா மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். பிறகு பூஞ்சியின் சடலத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தனர். பூஞ்சியின் நினைவாக அதற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல் புரசைவாக்கம் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.