Published:Updated:

`என்னையா கடிக்கிறாய்..!' - பாம்பைக் கடித்துத் துப்பிய போதை வாலிபர்

கலிலுல்லா.ச

தன்னைக் கடித்த பாம்பை போதையிலிருந்த வாலிபர் ஒருவர் திருப்பிக் கடித்துள்ளார். இந்த விநோதமான நிகழ்வு உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.

பாம்பு
பாம்பு ( ANI )

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஈடா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் வசித்துவருபவர் ராஜ்குமார். இவர் குடிபோதையில் வீட்டில் படுத்துக்கொண்டிருந்தார். அப்போது வந்த பாம்பு இவரை கடிக்க, ஆத்திரத்தில் அவர் பாம்பைக் கடித்து துண்டுதுண்டாக்கி இருக்கிறார். இதையடுத்து, உடனே அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

துண்டுதுண்டான பாம்பு
துண்டுதுண்டான பாம்பு

இது தொடர்பாக ராஜ்குமாரின் தந்தை கூறுகையில்,``என் மகன் குடித்திருந்தான். அப்போது எங்கள் வீட்டுக்கு வந்த பாம்பு என் மகனைக் கடித்தது. கோபமடைந்தவன், திருப்பி அந்தப் பாம்பை துண்டுதுண்டாக கடித்து துப்பினான். ஆனால், தற்போது என் மகனின் உடல்நிலை மோசமாக உள்ளது. எங்களிடம் அவனின் மேல்சிகிச்சைக்கான போதிய பணம் இல்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவர் பேசுகையில், ``பாதிக்கப்பட்டவர் என்னிடம் வந்து, `நான் பாம்பை கடித்துவிட்டேன்' என்று கூறினார். பாம்பு அவரைக் கடித்துள்ளதை தவறாகப் புரிந்துகொண்டதாக நான் நினைத்தேன். பிறகுதான் உண்மை புரிந்தது. அவரது உடல்நிலை மோசமாகத்தான் இருக்கிறது. மற்றொரு மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைத்துள்ளோம்” என்றார்.