Published:Updated:

ரூ.85 லட்சத்துக்கு ஏலம்போன ஒரு வாழைப்பழம்... நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்!

வாழைப்பழம்
வாழைப்பழம்

ஒரு வாழைப்பழம் இந்திய மதிப்பில் 85 லட்சம் ரூபாய் வரை ஏலம் போயுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கார்த்தியின் தோழா திரைப்படத்தில் கார்த்தி தவறுதலாக தெளித்த வண்ணங்களின் பிழையை கலையென கருதி பல லட்சம் கொடுத்து நாகர்ஜுனா வாங்குவார். இதை மிஞ்சும் வகையில் இதேபோல் அரங்கேறியுள்ளது உண்மை சம்பவம் ஒன்று. யுனைடெட் ஸ்டேட்ஸ் மியாமி நகரில் நடந்த கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு வாழைப்பழம் இந்திய மதிப்பில் 85 லட்சம் ரூபாய் வரை ஏலம் போயுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வாழைப்பழம்
வாழைப்பழம்

இத்தாலிய கலைஞரான மௌரிஷியோ என்பவர் வித்தியாச கலை பாடுகள் செய்வதில் வல்லவர். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். காரணம் எது செய்தாலும் அது ட்ரெண்டாகும். "அமெரிக்க 18 காரட் தங்க டாய்லெட் " என்ற ஒன்றை உருவாக்கியதன் மூலம் இவருக்கு ரசிகர் பட்டாளம் பரவலாக அதிகரித்தது எனலாம். இம்முறை ஒரு சாதாரண வாழைப்பழத்தை தன் படைப்புக்கு பயன்படுத்திய மௌரிஷியோ அதை கண்காட்சி நடந்த ஹோட்டல் அறையில் டேப் கொண்டு சுவற்றில் ஒட்டி வைத்துள்ளார். இது என்ன அதிசயமா? என்று நீங்கள் வினவினாலும், ஆம் அதிசயம் தான். இது ஒரு அற்புத படைப்பு என்கின்றனர், அந்த கண்காட்சியை பார்வையிட வந்தவர்கள்.

தான் உருவாக்கிய அந்த படைப்புக்கு "காமெடியன்" என பெயர் சூட்டியுள்ள மௌரிஷியோவை இத 85 லட்சம் கொடுத்து வாங்கியவர்தான் "காமெடியன் " என்று ஒரு தரப்பினர் இணையதளங்களில் இந்த வாழைப்பழ படைப்பை எதிர்த்து வரும் நிலையில், மற்றொரு தரப்பு "இது கலையின் உச்சம்" என்று கொண்டாடி வருகின்றனர். பிசின், வெண்கலம் முதலியவற்றை பயன்படுத்தி தனது படைப்புக்களை உருவாக்கிய மௌரிஷியோவிற்கு இந்த வாழைப்பழ படைப்பு சம அளவில் புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது எனலாம்.

மௌரிஷியோ
மௌரிஷியோ

இவரது வாழைப்பழ படைப்பை கலாய்க்கும் வகையில் ட்விட்டரில் ஏராளமானோர் பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை இவர் செய்தது போலவே சுவற்றில் டேப் அடித்து அதை புகைபடமெடுத்து இவை விற்பனைக்கு அல்லது ஏலத்திற்கு என்று பதிவிட்டு கிண்டலடித்து வருகின்றனர். சில இந்தியர்கள் இதை பார்த்து விட்டு வெங்காயத்தை அதே போல் சுவற்றில் டேப் செய்து ஏலத்திற்கு அணுகவும், என்றும் பதிவிட்டு வெங்காயத்தின் விலை உயர்வை சுட்டி காட்டியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு