Published:Updated:

'உடைத்தெறிய வேண்டிய அந்தச் சுவர்!' - பில் கேம்ப்பெல் என்னும் 'பிகில்' கூறும் மந்திரம்!

மனிதர்கள்தான் நிறுவனத்தின் வெற்றிக்கு அடித்தளமாவார்கள். நிர்வாகிகள், மனிதர்களுக்கு அடித்தளத்தை அமைப்பதில் உதவியாக இருக்க வேண்டுமே தவிர, உபத்திரவமாக இருந்துவிடக் கூடாது.

பில் கேம்ப்பெல்
பில் கேம்ப்பெல்

'பில் கேம்ப்பெல்லைப் பயிற்சியாளராகக் கொண்டிருக்காவிட்டால், ஒரு சிறிய ஸ்டார்ட்அப்பாக ஆரம்பிக்கப்பட்ட கூகுள், இவ்வளவு பெரிய வெற்றிகரமான கார்ப்பரேஷனாக உருவெடுத்திருக்க வாய்ப்பே இல்லை' என்று அடித்துக்கூறும் ஆசிரியர்கள், 'ஆயிரக்கணக்கானவர்கள் அவரிடம் பயிற்சி பெற்றபோதும் ஒவ்வொருவருமே அவரைச் சிறந்த நண்பராகவே கருதினர் என்பதுதான் தனிச்சிறப்பு' என்கிறார்கள். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2rulrR9

ஆரம்பகாலத்தில் பெரிய வசதி வாய்ப்புகள் இல்லாத பில் கேம்ப்பெல் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்துக் கிடைக்கும் பணத்தைக்கொண்டு மேற்படிப்பை முடித்தார். கால்பந்து கோச்சாக அவர் பெரிய அளவிலான சாதனைகளைச் செய்துவிடவில்லை. அதற்கான காரணத்தையும் அவரே சொல்லியிருக்கிறார்.

''கால்பந்தில் வெற்றி பெற குழுவின் அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிக அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். எல்லா அங்கத்தினரையும் அவரவரின் செயல்பாட்டுத் திறனின் எல்லைக்கே கொண்டுசெல்ல வேண்டி யிருக்கும். 'அவர் எப்பேர்ப்பட்ட வீரர், அவரைக் குழுவைவிட்டு நீக்குகிறோமே...' என்றெல்லாம் நினைக்கவே கூடாது. வெற்றி பெறத் தேவையான எல்லா வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கும். வயதானவரை வெளியேற்றி, இளைஞரை உட்புகுத்தித் தொடர்ந்து பர்ஃபாமென்ஸ் குறித்தே கவனம் செலுத்த வேண்டும்.

Trillion Dollar Coach
Trillion Dollar Coach

கால்பந்து கோச்சுக்குத் தேவையான எல்லா வேலைகளையும் ஈவு இரக்கமின்றி செய்துவிட்டு, அதீத அளவிலான சாந்தத்துடனிருக்கும் மனோதிடம் தேவைப்படும். அது எனக்குக் குறைவாகவே இருந்தது. அதே நேரத்தில், பிசினஸ் உலகத்தில் வெற்றி பெற, தங்கள் குழுவினரிடம் இரக்க (Compassion) சிந்தனை இருக்க வேண்டும். அதிக அளவிலான இரக்க சிந்தனை கொண்டிருந்ததாலேயே பிசினஸ் உலகில் பெரிய அளவிலான வெற்றியை நிறுவனங்கள் ஈட்ட உதவ முடிந்தது'' என்பாராம் அவர்.

''ஓர் அலுவலகத்தில் செயல்பாட்டுத்திறனை அதிகரிக்க நிர்வாகிகள் தேவை. நிர்வாகிகள் நேரடியாகக் களத்தில் இல்லாவிட்டாலும் அவர்கள் மூலமாகத்தான் களத்தில் நடப்பது கேட்டறியப்படுகிறது. இங்கேதான் சிக்கல்களே உருவாகின்றன. அதிலும், 'கிரியேட்டிவிட்டி அதிகம் தேவைப்படும் தொழில்களில் (கூகுளைப் போன்ற டெக்னாலஜி நிறுவனங்களில்) நிர்வாகிகள் செயல்பாட்டுத்திறனுக்குக் குந்தகம் விளைவிக்கிறார்களே தவிர, அதை அதிகப்படுத்துவதில்லை. அதனால்தான் கிரியேட்டிவிட்டிக்கும் செயல்பாட்டுத் திறனுக்கும் எப்போதுமே முட்டல் மோதல் நடப்பதைப் பார்க்க முடிகிறது'' என்பாராம் பில் கேம்ப்பெல்.

'அப்படியென்றால், ஒரு நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது என்ற மதிப்பீட்டைச் செய்வது எப்படி?' என்று கேட்டால், ''தனித்தனியாக செயல்பாட்டைப் பார்த்து அவர்களுடைய செயல்பாட்டைச் சிறப்பாக்குவது எப்படி என்ற ஆலோசனைகளைச் சொல்வதன் மூலமே அதைச் செய்ய முடியும். வெற்றிகரமாகச் செயல்படுபவர்கள் இணைந்தால் அவர்களாகவே நிறுவனத்தைச் சிறப்பாக நடத்திச் சென்றுவிடுவார்கள். குழுக் கலாசாரமே நிர்வாகத்தட்டுக் கலாசாரத்தைவிட சிறந்தது'' என்பாராம் அவர். இது குறித்து பல்வேறு உதாரணங்களையும் ஆசிரியர்கள் இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார்கள்.

''மனிதர்கள்தான் நிறுவனத்தின் வெற்றிக்கு அடித்தளமாவார்கள். நிர்வாகிகள், மனிதர்களுக்கு அடித்தளத்தை அமைப்பதில் உதவியாக இருக்க வேண்டுமே தவிர, உபத்திரவமாக இருந்துவிடக் கூடாது. மனிதர்கள் இயல்பாகவே, 'சிறப்பாகச் செயல்பட வேண்டும்' என்ற எண்ணம் கொண்டவர்களே. சரியான மனிதர்களை அடையாளம்கண்டு பணியிலமர்த்தி, சிறப்பான செயல்பாட்டை ஊக்குவிக்கும் சூழலை ஏற்படுத்திவிட்டால், அது மனிதர்களை இன்னமும் மேலான செயல்பாடுகளைச் செய்யும் வண்ணம் ஊக்குவிக்கவே செய்யும்.

நிர்வாகிகள் ஆதரவு, நம்பிக்கை மற்றும் மரியாதை போன்றவற்றை உருவாக்கித் தருவதுடன் நின்றுகொள்ள வேண்டும். ஆதரவு என்பது சரியான டூல்கள், தகவல்கள், பயிற்சிகளை வழங்குவதைக் குறிக்கிறது. தொடர்ந்து முன்னேற்றம் பெறுவதற்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவதே நிர்வாகியின் முதல் முக்கியப் பணி. அப்படி வழங்குவதன் மூலமே மனிதர்களை வளர்ச்சியடையச் செய்ய முடியும்.

மரியாதை என்பது தனிநபரின் கரியர் இலக்குகளைப் புரிந்துகொண்டும், அவர்களுடைய தனிப்பட்ட எண்ணங்களை மதித்தும் நடப்பதைக் குறிக்கிறது. நிறுவனத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அதே நேரத்தில் அவர்களுடைய தனிப்பட்ட வளர்ச்சியையும் எட்ட உதவுவதே நிர்வாகிகளின் இரண்டாவது முக்கியப் பணி. நம்பிக்கை என்பது மனிதர்கள் அவர்கள் செய்யும் பணியைச் சுயமாக முடி வெடுத்துச் செய்யும்படி நிறுவனக் கட்டுமானத்தை அமைப்பது. இதில் அடிப் படை என்பது, மனிதர்கள் சிறப்பாகச் செயல்படவே விரும்புவார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்கள் நிச்சயமாக அப்படிச் செயல்படுவார்கள் என்று நம்பிச் செயல்பட அனுமதிப்பதைக் குறிக்கிறது. ஒரு நிர்வாகியின் தலையாய பணி என்பது அவருடன் இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும்; வெற்றி பெற வேண்டும் எனப் பாடுபட வேண்டும்.

பில் கேம்ப்பெல்
பில் கேம்ப்பெல்

நிர்வாகி என்பவர் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் அது தொடர்பான அனைவரின் கருத்துகளையும் கேட்டு, கருத்தில்கொண்டு ஏதேனும் முட்டல் மோதல் இருந்தால் அதை முழுமையாகச் சரிசெய்ய வேண்டும். அதிலும் கடினமான முடிவுகள் எடுக்கப்படும்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். கடினமான முடிவுகளுக்கான நேரத்தில் மேலே சொல்லப்பட்ட அனைத்தும் நடைமுறையில் செய்யப்பட்டு விட்டன என்பதை அனைவரும் உணரும் வண்ணம் செயல்படுவதே நிர்வாகியின் வெற்றிக்கு வழிவகுக்கும்'' என்பாராம் கேம்ப்வெல்.

'வெற்றிகள் வரும்போது இவையெல்லாம் சரியாகப் போகும். தோல்வியோ அல்லது கஷ்ட காலமோ வரும்போது என்ன செய்வது?' என்று கேட்டதற்கு, ''சோதனைக் காலத்தில் குழுவிலிருப்பவர்கள் அதிக அளவிலான விசுவாசத்தையும், தீர்க்கமான முடிவுகளையும் தங்கள் தலைமையிடமிருந்து எதிர்பார்ப்பார்கள்'' என சொல்லியிருக்கிறார் கேம்ப்பெல்.

''ஒரு புரொஃபஷனலாக எந்த நிலையில் இருந்தாலும், மனிதர்கள் என்பவர்கள் மனிதர்களே. ஒரு குழுவாக இணைந்து செயல்படும்போது அவர்கள் மத்தியிலிருக்கும் வித்தியாசங்கள் எனும் சுவரை ஒரு நிர்வாகி வெற்றிகரமாக உடைத்தெறிய வேண்டும். அந்தச் சுவர் உடைக்கப்பட்ட மறுநொடியே அந்தக் குழு முழுமையான புரொஃபஷனல் குழுவாக மாறி நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதே பில் கேம்ப்பெல்லின் தாரக மந்திரம்'' என்று சொல்லி முடிக்கின்றனர் ஆசிரியர்கள். நிர்வாகம் தொடர்பான தீர்க்கமான சிந்தனைகளை பில் கேம்ப்பெல் என்னும் 'பிகில்' மூலம் சொல்லப்பட்ட 'டிரில்லியன் டாலர் கோச்' என்னும் இந்தப் புத்தகத்தை வெற்றிகரமான நிறுவனங்களை நடத்த நினைக்கும் நிர்வாகிகள் அனைவரும் ஒருமுறை படிக்கலாம்.

- இந்தப் புத்தகம் குறித்து நாணயம் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > கூகுள்... ஆப்பிள்... பிரமாண்ட சாம்ராஜ்யங்கள் உருவாக உதவிய பிகில்! https://www.vikatan.com/news/general-news/nanayam-book-self-trillion-dollar-coach

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > 'ஈஸி - நியூஸி' மாதாந்திர பேக் ரூ.99 மட்டுமே. > சப்ஸ்க்ரைப் செய்ய> https://bit.ly/2KccySR