Published:Updated:

தாத்தாவின் கனவு.. புது முயற்சி!- `மரம் தங்கசாமி'யை நினைவுகூரும் புதுக்கோட்டை தமிழழகன்

மரக்கன்று வழங்கும் மாணவன்
மரக்கன்று வழங்கும் மாணவன்

`இரண்டு வருஷத்துக்கு முன்னால பிறந்த நாளப்ப கொடுத்த, மரக்கன்று, மரமாகி காய்ச்சு பலன் தர்றதாக ஃப்ரண்ட்ஸ் சொல்லுவாங்க. ரொம்பவே சந்தோஷமா இருக்கும். நான் பதிலுக்கு விடாமல் மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றச் சொல்லுவேன்'.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே சேந்தன்குடியைச் சேர்ந்தவர் மரம் தங்கசாமி. மரங்கள் மீதான தீராக் காதலால் வானம் பார்த்த பூமிகளில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டத்தில் தன் வீட்டைச் சுற்றிலும் மரங்களால் ஆன குறுங்காட்டை உருவாக்கிக் காட்டினார். மிதிவண்டியில் பயணம் செய்து மரம் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவர் கலந்துகொள்ளும் அனைத்து விழாக்களிலும் நிச்சயம் மரக்கன்றுகள் நடப்படும். இவரால், வைக்கப்பட்ட மரங்கள் பலவும் இன்று வானளவு உயர்ந்து நிற்கின்றன.

மரக்கன்று நடுதல்
மரக்கன்று நடுதல்

மரம் தங்கசாமியின் மறைவிற்குப் பிறகு அவரின் கனவுகளை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றி வருகின்றனர். மரம் தங்கசாமியின் பேரன், தமிழழகனுக்கு பிப்ரவரி 1ம் தேதி பிறந்தநாள். தமிழழகன் சேந்தன்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் தான், தனது பிறந்தநாளை யொட்டி பள்ளியில் படிக்கும் சக மாணவ மாணவிகளுக்குப் பிறந்தநாள் பரிசாக மரக்கன்றுகளை வழங்கி அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பள்ளியிலும் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மரக்கன்றுகளைப் பெற்றுக் கொண்ட அனைவரும் தமிழழகனை வாழ்த்தினர்.

இதுபற்றி தமிழழகனிடம் பேசினோம், ``எங்க தாத்தாவுக்கு மரங்களென்றால் ரொம்பவே பிடிக்கும். எங்களை விட மரங்கள் கூடதான் அதிகமா இருப்பாரு. தாத்தா மாதிரி எங்க அப்பா தங்கக்கண்ணனும் மரங்களை நட்டு வளர்த்திக்கிட்டு வர்றாரு. அப்பா, தாத்தாவ பத்தியும், மரங்கள் வளர்ப்பதோட அவசியம் குறித்தும் சொல்லுவாரு. அப்பா சொல்றத எல்லாம் கேட்டு இப்போ எனக்கும் மரம் வளர்க்கணுங்கிற ஆசை வந்திருச்சு. ஒவ்வொரு வருஷமும் என்னோட பிறந்த நாளன்னைக்கும் இனிப்புக்குப் பதிலா, மரக்கன்றுகள் கொடுப்பேன். இந்த வருஷமும் அததான் செஞ்சிருக்கேன்.

மரக்கன்று வழங்கும் மாணவன்
மரக்கன்று வழங்கும் மாணவன்

நம்ம மட்டும் மரக்கன்றுகளை வளர்த்தால், பத்தாது. நம்மள சுத்தி இருக்கவங்களையும் வளர்க்க வைக்கணும். இரண்டு வருஷத்துக்கு முன்னால பிறந்த நாளப்ப கொடுத்த, மரக்கன்று, மரமாகிக் காய்ச்சு பலன் தர்றதாக ஃப்ரண்ட்ஸ் சொல்லுவாங்க. ரொம்பவே சந்தோஷமா இருக்கும். நான் பதிலுக்கு விடாமல் மரக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றச் சொல்லுவேன். இனிப்பு கொடுக்க மாட்டேன்னு தெரிஞ்சும் ஃப்ரண்ட்ஸ் ஆர்வமா மரக்கன்றுகளை வாங்கிக்கிட்டு வாழ்த்துவாங்க. ரொம்பவே சந்தோஷமா இருக்கும். இதேபோல, ஒவ்வொரு வருஷமும் மரக்கன்றுகள் கொடுக்கணும்" என்கிறார்.

பின் செல்ல