06.04.2022 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில், 'தினசரி 3 காட்சிகள் - எண்ணம், எழுத்து, இயக்கம் - ஹரிஹரன்' என்ற கட்டுரை வெளியாகியிருந்தது. திருச்சியிலிருந்து வந்து ஆர்.சி.சக்தி உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் வசன உதவியாளராகவும் பணியாற்றிய ஹரிகரன் குறித்த அந்தக் கட்டுரை, வாசகர்கள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றது. 42 ஆண்டுகளை சினிமாவில் தொலைத்து இன்னும் வாய்ப்புகளை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ஹரிகரனின் கதை பலரை நெகிழ வைத்தது.
ஏப்ரல் 26ம் தேதியன்று 'ஹரிகரன் The Director' என்ற ஹரிகரன் பற்றிய ஆவணப்படம் ஆனந்த விகடன் யூடியூப் சேனலில் வெளியானது. 3.62 லட்சம் பார்வைகளைக் கடந்து பரவலாக பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது அந்த வீடியோ.

உதவி இயக்குநர் ஹரிகரன், ஆவணப்படத்திலும் ஆனந்த விகடன் நேர்க்காணலிலும் மாற்றுத்திறனாளியான தன் மனைவி குறித்துப் பேசியிருந்தார். கட்டுரையும் வீடியோவும் வெளிவந்த நிலையில் வாசகர்கள் பலரும் ஹரிகரனுக்கு உதவிகள் செய்ய முன்வந்தார்கள். ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் நிறுவனம், ஹரிகரனின் மனைவி கன்னிலெட்சுமிக்கு 85,000 ரூபாய் மதிப்புள்ள, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான டிவிஎஸ் ஸ்கூட்டி பெப் ரெட்ரோ ஃபிட்மெண்ட் ஸ்கூட்டர் ஒன்றை வழங்கியது.
ஆனந்த விகடன் யூடியூப் சேனலில் வெளியான ஆவணப்படம் மூலம் கிடைத்த தொகையும் உதவி இயக்குநர் ஹரிகரன் மனைவி கன்னிலெட்சுமியிடம் வழங்கப்பட்டது.
