Election bannerElection banner
Published:Updated:

தேஜா வூ உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா? - `எங்கேயோ பார்த்த மயக்கம்!’ : மர்மங்களின் கதை | பகுதி-9

மர்மங்களின் கதை
மர்மங்களின் கதை

பேட் லாங் ஓர் உண்மையை உணர்ந்தார். அவருடைய மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதிலிருந்தே வலிப்புநோய் அதிகரித்திருந்தது. தேஜா வூ அனுபவத்துக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு புலப்பட்டது.

- ஆர்.எஸ்.ஜெ

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மதியவேளை. ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த நேரம். சுற்றி மக்கள் இயங்கிக்கொண்டிருந்தனர். அவரவர் வேலை. அவரவர் வாழ்க்கை. ஆனால், அந்த மரத்தடியில் மட்டும் வேறொரு விஷயம் நிகழவிருந்தது. மரத்தடியில் அமர்ந்திருந்தவரின் பெயர் பேட் லாங். அவருக்கு நேரப்போகும் அனுபவம் அவர் வாழ்க்கைக்கே சவால் விடுக்கவிருந்தது. திடுமென உயரத்திலிருந்து கீழே விழுவதுபோல் உணர்ந்தார். அவரைச் சுற்றியிருந்த மக்கள் மறைந்தனர். புல்வெளியில் விரித்த படுக்கை மேல் படுத்திருந்தார். சுற்றி உயரமான கோதுமைப் பயிர்கள். பயிர்கள் அசைந்தாடிய சத்தத்தை அவரால் கேட்க முடிந்தது. சூரியனின் இள வெப்பத்தை அவர் கழுத்து உணர்ந்தது. வானில் பறந்த பறவைகளைப் பார்த்தார்.

தேஜா வூ
தேஜா வூ

உண்மையில் அப்படியோர் அனுபவம் நிகழவே இல்லை என்பதுதான் பிரச்னை. அதைவிட இன்னொரு முக்கியமான பிரச்னையும் இருக்கிறது. நிகழாத அந்த அனுபவத்தை நிகழ்ந்ததுபோல் உணர்ந்தது மட்டுமல்லாமல், அந்த அனுபவம் ஏற்கெனவே ஒரு முறை நடந்ததாகம், அதை அனுபவித்ததுபோலவும் அவர் உணர்ந்தார். அதாவது `இதே அனுபவம் இதற்கு முன்னும் தனக்கு நடந்திருப்பது’ போன்ற ஓர் உணர்வு! ஏதோ ஓரிடத்துக்குச் செல்லும்போது, யாரையேனும் எதிர்கொள்ளும்போது, எதையேனும் பேசும்போது நம் எல்லாருக்கும் அந்த இடத்துக்கு முன்னர் வந்ததைப் போன்ற எண்ணம் எழும். இடம், உரையாடல், அனுபவம் என ஒரு சூழலில் நிகழும் அனைத்துமே ஏற்கெனவே நடந்ததுபோல் தோன்றும். ஆனால் எப்போது நடந்தது, எதனால் நடந்தது என எதுவும் ஞாபகத்தில் இருக்காது. உலகிலுள்ள அனைவரும் அத்தகைய உணர்வை வாழ்க்கையில் ஒரு தடவையேனும் அனுபவித்திருப்பார்கள் என அறிவியல் கூறுகிறது. அத்தகைய அனுபவத்துக்கு ஒரு பெயரும் உண்டு.

தேஜா வூ!

`ஏற்கெனவே பார்த்தது!’

`தேஜா வூ’ என்பது பிரெஞ்சு மொழி வார்த்தை. `ஏற்கெனவே பார்த்தது’ என்பது அதன் அர்த்தம். சில கணங்கள் மட்டுமே நீடிக்கும் அனுபவம். தோன்றும் எண்ணம்! தேஜா வூ என்ற நிலையை பெரும்பாலான மக்கள் பூர்வ ஜென்ம நினைவாக எடுத்துக்கொள்கிறார்கள். முந்தைய பிறவியில் ஒரு பொழுதில், ஒரு சூழலில் இருந்திருக்கலாம் என்றும், மீண்டும் பிறந்து மறுபிறவி எடுத்து அதே சூழலை சந்திக்கும்போது, ஏற்கெனவே பரிச்சயமானது போன்ற உணர்வு ஏற்படலாம் என்றும் ஒரு கூற்று முன்வைக்கப்படுகிறது. இன்னொரு பக்கம், `அது ஒரு அரைகுறையான நினைவு’ எனவும் சொல்லப்படுகிறது. அதாவது, ஒரு சூழல் பரிச்சயமானதாக நமக்குத் தெரிந்தாலும் அதன் முடிவில் என்ன இருக்கிறது அல்லது எங்கே எப்படி முடியப்போகிறது என்பது தெரியாமல் இருப்பதால், அரைகுறை நினைவாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. என்றோ நடந்த சம்பவம், இப்பிறவியிலோ முப்பிறவியிலோ, அதன் முழுமை பெறாத நினைவால் இத்தகைய உணர்ச்சி ஏற்படலாம் எனவொரு வாதம்.

தேஜா வூ பிரச்னையைத் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டிருந்த பேட் லாங்குக்கு எதை விடையாக எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை.

மற்றொரு வாதமும் இருக்கிறது. கனவுகள்! ஏதோவோர் இரவில், ஆழ்ந்த உறக்கத்தில் உதிக்கும் ஒரு கனவு கொண்டிருக்கும் சூழலை திரும்பச் சந்திக்கும்போது தேஜா வூ தோன்றக்கூடும் என ஒரு தரப்பு. அதாவது எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களையும், அதன் சூழல்களையும் முன் யூகிக்கும் சக்தி கொண்டு, அது மனதில் பதிந்து, நாம் உறங்குகையில் கனவாக உருவாக்கிக்கொடுப்பதாக நம்பிக்கை. முப்பது வயதுகளில் அவர் தலைவலியால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தார். எதிர்பாராத நேரங்களிலெல்லாம் தலைவலி எடுத்து அவரைப் பாடாகப் படுத்தியது. மருத்துவரிடம் சென்றபோது ஆரம்பகட்ட மருந்துகளைக் கொடுத்தனர். நோய் தீரவில்லை. நரம்பியல் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்துப் பார்த்தனர். ஒரு முக்கியமான விஷயம் தெரியவந்தது. அவரது மூளையின் வலது பக்கத்தில் ஒரு கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எலுமிச்சைப்பழ அளவுக்கான கட்டி. அறுவை சிகிச்சை செய்வது என முடிவு செய்யப்பட்டது. வலது மூளையிலிருந்த கட்டி வெற்றிகரமாக எடுக்கப்பட்டது. தலைவலி குணமானது. ஆனால் வேறொரு பிரச்னை ஏற்பட்டிருந்தது. ஒருமுறை சமையற்கட்டில் கண்விழித்திருக்கிறார். கண் விழிப்புக்குக் காரணம் அதற்கு முன் அவர் மயக்கம் போட்டு விழுந்ததே. ஏன் மயக்கம்? சமையற்கட்டில் இருக்கும்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு வலிப்பு வந்திருக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் இருந்தது. பேட் லாங்குக்கு வலிப்பு தொடங்குவதற்கு முன் அவருக்கு ஒரு மனநிலை உருவாகியிருக்கிறது. பேட் லாங் இருந்த சூழலில் ஏற்கெனவே இருந்ததைப் போன்ற உணர்ச்சி அவருக்கு எழுந்திருக்கிறது. இரண்டொரு மணித்துளிகள்தான். ஆர்வம் பொங்கி, அந்த மனநிலைக்குள் தன்னை ஒப்புவித்து, திளைக்கத் தொடங்கும்போது, சடாரென கை கால் இழுக்கத் தொடங்குகிறது. மயங்கி விழுந்திருக்கிறார் பேட் லாங்க். கிட்டத்தட்ட எது யதார்த்தம், எது கற்பனை எனத் தெரியாத வாழ்க்கையை எட்டியிருந்தார் பேட் லாங்க்.

தேஜா வூ
தேஜா வூ

தெரிந்த காட்டுக்குள் வழியை மறந்தநிலை தேஜா வூ நிலை!

தெரிந்த காடு தெரியாத பாதை!

பேட் லாங் ஓர் உண்மையை உணர்ந்தார். அவருடைய மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதிலிருந்தே வலிப்புநோய் அதிகரித்திருந்தது. தேஜா வூ அனுபவத்துக்கும், மூளைக்கும் உள்ள தொடர்பு புலப்பட்டது. நம் உடல் கொள்ளும் எல்லா அனுபவங்களையும் பிரித்து ஆராய்ந்து அர்த்தப்படுத்தும் நிலையம் மூளை. ஒவ்வொரு விநாடியிலும் பல கோடி நியூரான்கள் குறுக்கும் மறுக்குமாக ஓடிக்கொண்டிருக்கும் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு நியூரானும் இன்னொரு நியூரானுடன் மோதுகையில் எண்ணம் என்கிற பொறி உண்டாகிறது. அந்த எண்ணத்தை இன்னொரு நியூரான் தாங்கிக்கொண்டு, தான் கொண்டு வந்த அனுபவத்துடன் சேர்த்துக்கொள்கிறது. இப்படி ஒவ்வோர் அனுபவமும் ஒவ்வொரு எண்ணம் அல்லது உணர்வுடன் அடையாளப்படுத்தப்படுகிறது. பல எண்ணங்கள் பல உணர்வுகளுடன் சேருகின்றன. பல உணர்வுகள், பல அனுபவங்களுடன் சேருகின்றன. இந்த மொத்தமும் மூளையின் ஓர் அறைக்குள் குவிகின்றன. அந்த அறை ஒரு நம்பிக்கையாக மாறுகிறது.

இத்தனை நுணுக்கம் வாய்ந்த மூளையின் செயல்பாட்டுக்குள் சிறு அதிர்வு நேர்ந்தால் என்ன ஆகும்? ஒரு போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் குறுக்கே ஒரு மரம் விழுந்தால் என்ன ஆகும்? உங்கள் நம்பிக்கைகள் பொய்க்கும். புது நம்பிக்கைகள் தோன்றும். பரிச்சயமற்ற உணர்வுகள் உருவாகும். முன்னுக்குப் பின் முரணான எண்ணங்கள் தோன்றும். அவற்றை எதனுடன் தொடர்புபடுத்துவது எனத் தெரியாமல் நியூரான்கள், சம்பந்தமற்ற நம்பிக்கைகளின் அறைகளுக்குச் சென்று கதவுகளைத் தட்டும். பேட் லாங்குக்கு நேர்ந்ததும் இதுதான். அதை அவராலேயே புரிந்துகொள்ளவும் முடிந்தது. நியூயார்க் டைம்ஸில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்த அவருக்கு வேறு நம்பிக்கைகள் எதுவும் தடையாக இருக்கவில்லை. அறிவியலே உதவியது.

மூளை
மூளை

வலிப்புநோய் ஏற்படுவதற்குக் காரணம் மூளைதான். வலிப்புநோய்க்கு ஒரு பெயரேகூட இருக்கிறது. Temporal Lobe Epilepsy! Temporal Lobe என்பது மூளையின் அடியிலிருக்கும் பகுதி. பார்த்தல், கேட்பது, சுவாசம், பேச்சு, தொடுதல் முதலிய ஐம்புலன் உணர்ச்சிகளுக்குமான பகுதி இந்த அடிப்பகுதி மூளை. அங்குதான் மொழி, பார்த்த மற்றும் கேட்ட நினைவுகள், உணர்வுகள் போன்றவை உருவாகின்றன. பாதுகாத்தும் வைக்கப்படுகின்றன. அந்தப் பகுதியில் நேரும் கலவரம் புலனுணர்ச்சியைப் பதிவு செய்வதில் தாமதம் காட்டுகிறது. தனக்கு நேரும் அனுபவங்களைத் தொடர்ந்து பல ஆய்வுகளை பேட் லாங்க் மேற்கொண்டார். தனக்கு நேர்ந்த அனுபவங்களை பதிவுசெய்யத் தொடங்கினார். `பேய்களுக்கான உலகில்’ என்ற அர்த்தம்கொண்ட `Among A World of Ghosts’ என்ற தலைப்பில் புத்தகமும் எழுதத் தொடங்கினார். நினைவுகள் மற்றும் மனம் போன்ற விஷயங்களைப் பற்றிய அவரின் கோணத்துக்குப் புது அர்த்தங்கள் கிடைத்தன. புற்றுநோய் முற்றியதால் 2018-ம் ஆண்டில் பேட் லாங்க் இயற்கை எய்தினார்.

தொடங்கியது பரிசோதனை

பிரிட்டன் நாட்டிலிருக்கும் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் பரிசோதனை நடத்தியது. பலர் பரிசோதனையில் பங்கெடுத்தனர். படுக்கை, தலையணை, இரவு, கனவு போன்ற வார்த்தைகளைக் கொடுத்து நினைவில் வைத்துக்கொள்ளக் கூறினர். `S’ என்கிற எழுத்தில் தொடங்கும் வார்த்தை எதையாவது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுமாறு சொல்லப்பட்டதா எனக் கேட்கப்பட்டது. வந்திருந்தவர்கள் ‘இல்லை’ என்றனர். சற்று நேரம் கழித்து, சொல்லப்பட்ட வார்த்தைகளைத் திரும்ப சொல்லுமாறு கேட்கப்பட்டது. பரிசோதனைக்கு வந்திருந்தவர்களும் கூறினர். சொல்லப்பட்ட வார்த்தைகளைச் சரியாகக் கூறினர். இப்போது இன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது. தூக்கம் என்ற அர்த்தம் தொனிக்கும் Sleep என்கிற வார்த்தை, சொல்லப்பட்ட வார்த்தைகளில் இருந்ததா என்ற கேள்வி.

மூளைக்குள் மின்மினிகள் பறந்தன. நியூரான்கள் பட்டாசு வெடித்தன. அனைவருக்கும் அதே போன்ற கேள்வி முன்பு கேட்கப்பட்டதுபோல் தோன்றியது. `தேஜா வூ’ எனச் சொல்லப்படுகிற அதே அனுபவம் நேர்ந்தது.

தேஜா வூ
தேஜா வூ

எப்படி தெரியுமா?

படுக்கை, தலையணை, இரவு, கனவு யாவும் தூக்கம் என்கிற விஷயத்துடன் சம்பந்தப்பட்ட வார்த்தைகள். ஆனால் தூக்கம் என்ற வார்த்தையை குறிக்கும் Sleep என்ற வார்த்தை சொல்லப்படவில்லை. நான்கு வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளச் சொல்லும்போதே நம் மூளை இயல்பாக அவற்றுடன் தொடர்புடைய `தூக்கம்’ என்கிற வார்த்தையைத் தேடி எடுத்திருக்கும். அதை உறுதிப்படுத்த, அதாவது குழப்பிவிட இன்னொரு கேள்வியும் கேட்கப்படுகிறது. S என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தை சொல்லப்பட்டதா என்ற கேள்வி. உடனே மூளை S எழுத்தில் தொடங்கும் வார்த்தை என்றால் Sleep எனப் புரிந்து நினைவை உருவாக்கிக்கொள்கிறது. சற்று நேரம் கழிந்த பிறகு, வார்த்தைகள் கேட்கப்படுகின்றன. படுக்கை, தலையணை, இரவு, கனவு என வரிசையாகச் சொல்கிறார்கள். இப்போது குழப்புவதற்கான கேள்வி கேட்கப்படுகிறது. Sleep என்கிற வார்த்தை சொல்லப்பட்டதா என்ற கேள்வி.

பாலஸ்தீனத்தின் நைட்டிங்கேல்: களவாடப்பட்ட ஒரு நாடு - மர்மங்களின் கதை | பகுதி-8

ஏற்கெனவே தூக்கம் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் சொல்லப்பட்டதால் தூக்கம் என்ற நினைவை மூளை எடுத்து வைத்திருக்கிறது. S என்ற எழுத்தில் தொடங்கும் வார்த்தை சொல்லப்பட்டதா என க்ளூ கொடுத்து தூக்கம் பற்றிய நினைவை மூளை உறுதிபடுத்தவும் செய்துவிட்டோம். இப்போது தூக்கம் என்கிற வார்த்தை முன்பு சொல்லப்பட்டதா எனக் கேள்வி கேட்கப்பட்டதும், மூளையில் தூண்டுதலே இல்லாமல் உருவாகி நிற்கும் Sleep பற்றிய நினைவு கடகடவெனத் தந்தி அடித்து அனுப்பி, அவர்களை `ஆம்’ எனச் சொல்லவைத்துவிடுகிறது.

அவ்வளவுதான். மின்மினிகள் பறக்கின்றன. நியூரான்கள் புன்னகைக்கின்றன. அறிவியல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. நம்பிக்கைகள் உருவாகின்றன.

என்ன புரிகிறதா?

(தொடரும்)

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு