Published:Updated:

``என் அப்பாவுக்கு இன்னும் ஓட்டுக்கு பணம் வரல!’’ - மாணவனின் பதிலும் ஆசிரியர் நடவடிக்கையும் #MyVikatan

Representational image
Representational image

வெறுமனே சொற்களால் அறிவுரை கூறுவது எல்லா நேரங்களிலும் பயனுடையதாய் இராது. செயல்பாடுகள் வழியே கற்றுக்கொள்ளுதலே சிலையில் எழுத்தாம்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான இரண்டு வாய்ப்புகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றன! ஒன்று, நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது அல்லது அவற்றைச் சரியானபடி மற்றும் பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்வது. சமுதாயத் தீமைகளைக்கண்டு வெறுமனே குறைகூறிப் புலம்புவதை விட, அதைச் சற்றேனும் மாற்றியமைக்க முயலுதல் சிறந்தது என்பர். ஏனெனில் தனி மனிதனைத் தவிர்த்தால் சமுதாயம் என்று தனியாக ஒன்றுமில்லை! அதிலும் சமுதாயத்தில் நேர்மறை மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஒரு ஆசிரியருக்குப் பெரும் பங்குண்டு.

Representational image
Representational image

எமது ஆசிரியப் பணியில் யாம் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்தது, ``குறிப்பேடு ஏன் வாங்கவில்லை?"என்ற எமது வினாவிற்கு ``பெற்றோரின் ஓட்டுக்கான பணம் கிடைத்தவுடன் குறிப்பேடு வாங்கி விடுகிறேன்" என்ற மாணவனின் பதில். இந்தப் பதில் எமக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. நிதர்சனம் அப்பட்டமாய்க் கண்முன் நின்றது. ஜனநாயகத்தின் தோல்வியும், இன்றைய மக்களின் செயல்பாடுகளால் அது கேலிக்கூத்தாக மாறி இருப்பதும் முகத்தில் அறைந்தது.

எவ்விதக் குற்றவுணர்வுமின்றி மாணவனால் கூறப்பட்ட பதில், பிஞ்சு மனங்களில் விதைக்கப்பட்ட நஞ்சை வெளிப்படுத்துவதாய் இருந்தது. இரு இரவுகள் உறக்கமின்றிக் கழிந்தன. வாக்கிற்கு பணம் பெறுதல் தவறு என்று உணராத இளைய தலைமுறையைக் கண்டு ஒரு ஆசிரியராகப் பெரும் குற்ற உணர்வு ஏற்பட்டது. கேள்விகளிலிருந்து மட்டுமல்ல; சில நேரங்களில் பதில்களில் இருந்தும் கூட மாற்றங்கள் பிறக்குமல்லவா? மாபெரும் விருட்சத்தின் விதை சிறியது அன்றோ? எமது மாணவர்களிடம் மன மாற்றத்தை ஏற்படுத்த முடிவு செய்தோம்!

Representational image
Representational image

மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல! மாபெருஞ்செயல்!

வெறுமனே சொற்களால் அறிவுரை கூறுவது எல்லா நேரங்களிலும் பயனுடையதாய் இராது. செயல்பாடுகள் வழியே கற்றுக்கொள்ளுதலே சிலையில் எழுத்தாம். எம் மாணவரைச் செயல்படவைக்க முடிவு செய்தோம். வாக்கு விற்பனையின் தீமைகள் குறித்து படக்காட்சிகள், உரைகள் உள்ளிட்டவை மூலம் மாணவர்களுக்குத் தெளிவை அளித்த பின், ஒரு குறிப்பிட்ட நாளில் மாணவர்களைத் தனித்தனியாக ``வாழ்த்து அட்டைகளைத்" தயாரிக்கச் செய்தோம். அவற்றில் தேர்தல் நாள் குறிப்பிடப்பட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்த படங்கள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் மாணவர்களால் எழுதப்பட்டன.

உச்சமாக ``வாக்கு விற்பனைக்கு அல்ல" எனும் வாசகம் வாழ்த்து அட்டைகளில் பெரிதுபடுத்தப்பட்டு மாணவர்களால் எழுதப்பட்டது. அவற்றை பெற்றோரிடம் அளித்து ``வாக்களிக்கப் பணம் பெறமாட்டோம்" எனும் உறுதி மொழியைப் பெறச் செய்தோம்! வாழ்த்து அட்டைகளை அளித்தவுடன் பெற்றோரின் பதில்கள் மற்றும் செயல்பாடுகளை அடுத்த நாள் மாணவர்கள் வகுப்பில் பகிர்ந்துகொண்டனர். ``கொடுப்பதினால் பெறுகிறோம்" என்பதில் தொடங்கி "இல்லாததால் பெறுகிறோம்"வரை கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

Representational image
Representational image

விமர்சனங்களைத் தாண்டி, இந்த விஷயத்தில் தாங்கள் செய்வது தவறு எனும் உணர்வு முதன் முறையாக மாணவர்களால் பெற்றோருக்கு ஊட்டப்பட்டது. தொலைபேசியிலும்,நேரிலும் இது குறித்து சில பெற்றோருடன் உரையாடிய போது, கண்கள் கலங்கிய வண்ணம் நெகிழ்வுடன் தம் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்! பிறர் அறிவுரையைக் கேட்டுப் பொங்கும் பெற்றோர் கூட, குழந்தைகளின் அன்புரையில் இருந்த நியாயத்தை உணர்ந்தனர். தம் குழந்தைகள் குறித்த பெருமித உணர்வு கொண்டனர்! அதன் பயனாய் வாக்கிற்குப் பணம் அளிக்க வீடுகளுக்கு வந்தோரைப் பெற்றோரும், பெற்றோர் அனுமதியுடன் மாணவர்களும் திருப்பி அனுப்பும் நிகழ்வுகள் வெற்றிகரமாகத் தொடர்ந்தன.

பெற்றோர் அனைவரும் வாக்களித்தனர் பணம் பெறாமல்! திருப்பூர் மாநகரின் மாற்றம் தரும் ஒரு நிகழ்வாய் மாணவர்களின் இச்செயல்திட்டம் மாறியது. அன்பு, கருணை, இரக்கம் ஆகிய அனைத்து நற்குணங்களின் ஆணிவேராய் இருப்பது நேர்மை. ஆனால், நேர்மை குணம் உடையோரை இந்தச் சமூகம் சற்று ஆச்சர்யத்துடனே உற்று நோக்குவது விந்தையானது! எதிர்கால இளைய தலைமுறை நேர்மையான மனிதர்களைக் கொண்டிருப்பின் இந்தப் பூமியே சொர்க்கப் பூங்காவாக மாறிவிடும்.

Representational image
Representational image

இன்றைய இளைய தலைமுறைக்குக் கற்பிக்க ஒரு ஆசிரியருக்கு மேம்பட்ட திறன்கள் தேவை. ஒரு ஆசிரியர் தனக்குத் தானே நேர்மையை வளர்த்துக்கொள்வதும், அது மாணவரிடம் வளரத் தேவையான செயல்பாடுகளைத் திட்டமிட்டு வடிவமைத்தலும் இன்றைய சூழலில் பெருங்கடமையாகிறது. ``நம்பிக்கையுடன் தொடர்ந்து விதைத்துக்கொண்டே இருப்போம்! முளைத்தால் மரம்! இல்லையேல் உரம்!" எனும் தோழர் சேகுவேராவின் வரிகளை ஒற்றி இனித் தேர்தல்கள் வரும்போதெல்லாம் இது போன்ற நிகழ்வுகளைத் திட்டமிட்டு நடத்த தீர்மானித்துள்ளோம்.

கோடானு கோடி நீர்த்துளிகள் சேர்ந்ததே பெருங்கடல். துளியான இந்நிகழ்வும் ஆழியாய் மாறுமென்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்! எமது வகுப்பறை சார்ந்த பிந்தைய நிகழ்வுகளுக்கு இந்நிகழ்வு ஒரு துண்டுகோலாய் அமைந்தது. நூறு சதவிகிதம் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எமது எண்ணத்தை மேலும் வலுப்படுத்தி உறுதிப்படுத்துவதாய், நேர்மை என்பது வெறும் சொல் அல்ல; பெருஞ் செயல்! என்பதை உணர்த்துவதாய் மாணவனின் பதிலும், அதையொட்டி நிகழ்த்தப்பட்ட செயலும் அமைந்தன என்றால் அது மிகையில்லை!

-அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு