Published:Updated:

தோண்டத் தோண்ட பிணக்குவியல்கள்... - தக்கிகள் ஒழிக்கப்பட்ட வரலாறு!

தங்க வேட்டை
தங்க வேட்டை

பிறகு, தக்க நேரம் வரும்போது சத்தமில்லாமல் ஒருவரின் பின்பக்கமாகச் சென்று கழுத்தில் சிறு துணியோ அல்லது கயிற்றையோ வீசி இறுக்கிக் கொன்றுவிடுவார்கள்.

ஃப்ரிங்கா... இந்தியாவில் கொள்ளையர்கள் தொடர்பான வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் தவிர்க்க இயலாத பெயர் இது. 18-ம் நூற்றாண்டின் தொடக்கங்களில் வட இந்தியாவில் கோலோச்சிய பிரபல தக்கி, இவன். ஃப்ரிங்கா, ஒரு ராஜபுத்திர இளைஞன். ராஜஸ்தானின் மியோ பகுதியின் கோட்டை அதிபதிகளான மேவாட்டி இன அரசர்களின் அரண்மனைப் பூசாரிகளாக இருந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவன். டெல்லிக்கு ஒருமுறை சென்றபோது தக்கிகளுடன் தொடர்பு ஏற்பட்டு தானும் தக்கியாக மாறியதாக, பிற்பாடு ஒரு வாக்குமூலத்தில் சொல்லியிருக்கிறான் ஃப்ரிங்கா.

இவன் தலைமையில் பர்கானா, முர்னே, ஒமுரு, சிந்தோஷ், சுர்ஷி ஆகியோர் அடங்கிய தக்கிக் கூட்டம், ராஜஸ்தானில் 1800-களின் தொடக்க ஆண்டுகளில் உருவானது. ஏழாவது தலைமுறைத் தக்கிகள் இவர்கள். காலப்போக்கில் ஃப்ரிங்கா தக்கி குழுவினர் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகினர். அவர்கள் தனித்தனியாகப் பிரிந்து, பல குழுக்களாக வலுவடைந்தனர். இப்படியாக அந்தக் காலகட்டத்தில் ராஜஸ்தானில் சுமார் 500 தக்கி குடும்பங்கள் உருவாகின. சுமார் 32 கிராமங்களைச் சேர்ந்த இவர்களே, நாடு முழுவதும் கொள்ளையில் ஈடுபட்டனர். இவர்களின் பிரதான குறி, தங்கநகைகள்தான். இதற்காக அன்றைய மராட்டிய மன்னனான சிந்தியாவுக்கு இந்தக் குடும்பங்கள் ஒவ்வொன்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தலா (24 ரூபாய்) 8 அணா வரி செலுத்தின. இதற்கு உபகாரமாக, சிற்றரசர்களுக்குக்கீழ் இருக்கும் ஜமீன்தார்கள் இவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். பிரிட்டிஷ் அதிகாரிகள் இவர்களைத் தேடி வரும்போதெல்லாம், தகவல் கொடுத்து தப்பிக்கவைத்தனர். தலைமறைவு வாழ்க்கைக்கு அடைக்கலம் கொடுத்தார்கள்.

தோண்டத் தோண்ட பிணக்குவியல்கள்... - தக்கிகள் ஒழிக்கப்பட்ட வரலாறு!

இப்படியான தக்கிகளிடையே கதாநாயக பிம்பத்துடன் வலம்வந்தவன்தான் ஃப்ரிங்கா. பெரும்வியாபாரிகள், ஜமீன்தார்கள், செல்வந்தர்கள் நடைபயணமாகப் பயணிக்கும்போது, அவர்களின் மெய்காப்பாளர்களாகவோ சகபயணிகளாகவோ ஊடுருவி கொலைகளைச் செய்து, கொள்ளையடிப்பது இவனது வழக்கம். இதற்கு துப்புக்கொடுக்க தனிக்குழு உண்டு. துப்புக்குத்தக்க கூலியும் உண்டு. வழிப்போக்கர்களின் பயண வழித்தடத்தை முன்கூட்டியே அறிந்துகொண்டு, அந்தக் கூட்டத்தில் யார் யாரை எங்கெங்கு கொலை செய்ய வேண்டும் என்றெல்லாம் பக்காவாக ஸ்கெட்ச் போட்டுவிடுவார்கள். கானகத்தில் புதர்களுக்கு இடையே ஆங்காங்கே ஆட்களைப் புதைப்பதற்காகக் குழிகளைத் தோண்டித் தயாராக வைத்திருப்பார்கள்.

பிறகு, தக்க நேரம் வரும்போது சத்தமில்லாமல் ஒருவரின் பின்பக்கமாகச் சென்று கழுத்தில் சிறு துணியோ அல்லது கயிற்றையோ வீசி இறுக்கிக் கொன்றுவிடுவார்கள். பெரும்கூட்டம் ஒன்று நகர்ந்துகொண்டிருக்கும்போது, ஓரிரு நொடிகளில் ஓர் ஆளை அக்கம்பக்கம் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் முடிக்க வேண்டும். இதுதான் ஒரு தக்கியின் வாழ்நாள் லட்சியமும்கூட. அந்தத் திறமையுடன் ஏழெட்டு கொலைகளைச் செய்துவிட்டால், அவனே அந்தத் தக்கி குழுவின் தலைவன்.

இப்படி எதிராளியின் கழுத்தைச் சுற்றி கயிற்றை இறுக்கும்போது, குரல்வளை நொடியில் உடைந்து சிறு முக்கல், முனகல்கூட எழுப்ப இயலாமல் தலை உடனடியாகத் தொங்கிவிடும். பிறகு, கூட்டத்தில் யாருக்கும் தெரியாமல் இழுத்துச் சென்று ஏற்கெனவே தயாராக வெட்டி வைத்துள்ள குழிகளில் புதைத்துவிடுவார்கள். துப்புக் கொடுக்க, குழி தோண்ட, புதைக்க என ஒவ்வொன்றுக்குமே தனித்தனிக் குழுக்கள் இருந்தன. இப்படி கொள்ளையின் பொருட்டு ஃப்ரிங்கா கொலை செய்த ஆட்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்துக்கும் அதிகம்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தக்கிகளை ஒழிக்க நிறைய தனிப்படைகளை அமைத்திருந்தனர். அதில் பிரதான படையின் உயர் அதிகாரி ஸ்லிமன். மற்றொரு பக்கம், நிஜாம் அரசாட்சியிலும் தக்கிகள் ஒழிப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதில் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் கேப்டன் பிலிப் மெடோஸ் டெய்லர். 1800-களின் தொடக்கங்களில் பிரிட்டிஷ் இந்தியாவில் தக்கிகளைப் பற்றி இவர் எழுதிய 'Confessions of a Thug' (ஒரு தக்கியின் வாக்குமூலம்) நூல் மிகப் பிரபலம்.

இவர்கள் இருவருமே பிரபல தக்கியான ஃப்ரிங்காவைத் தேடித் தேடி அலைந்தார்கள். இதில் ஸ்லிமனின் தனிப்படை, தக்கிகள் கூட்டத்தினரைத் தேடித் தேடி அழிப்பதில் முன்னிலைவகித்தது. மிகப்பெரிய தக்கிக் கூட்டங்கள் அடுத்தடுத்து பிடிப்பட்டன. ஆனால், ஃப்ரிங்காவை மட்டும் நெருங்கவே முடியவில்லை என்பதுடன், 'ஃப்ரிங்கா ஒரு பேய், அவன் பூதம்... அவனைத் தேடிச் சென்றாலே அவன் அருவமாக மறைந்துவிடுவான். தேடிவரும் படையினரையும் துப்பு கொடுக்கும் மக்களையும் கொத்துக் கொத்தாக ரத்தம் கக்கவைத்துச் சாகடிப்பான்' என்றெல்லாம் ஏராளமான வதந்திகள் பரவிவந்தன.

இவ்வளவு இடர்ப்பாடுகளையும் கடந்து ஒருமுறை ஸ்லிமனின் படை, ஃப்ரிங்கா தங்கியிருப்பதாகக் கூறப்பட்ட கிராமத்து வீட்டை முற்றுகையிட்டது. தடபுடலாக கறி விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஃப்ரிங்கா, சில நிமிடங்களுக்கு முன்புதான் அங்கிருந்து தப்பியிருந்தான். அவன் விட்டுச் சென்ற தட்டில் பாதி உணவு மிச்சம் இருந்தது. அவனுடைய தாய், மனைவி, குழந்தைகள் மட்டும் பிடிபட்டனர். அவர்களை விசாரித்தபோது, 'ஃப்ரிங்கா ஒரு தக்கியே அல்ல' என்று தங்கள் குழந்தைகளின் மீது சத்தியம் செய்தார்கள். உண்மையில் அவன் ஒரு தக்கி என்பது தனிப்படையினர் சொல்லித்தான் அவர்களுக்கே தெரிந்தது.

அப்போது ஃப்ரிங்காவின் ஒன்றுவிட்ட சகோதரன் ஜிர்து என்பவன் தக்கியாகப் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவன் முன்பாக ஃப்ரிங்காவின் தாயைக் கொண்டுச் சென்று நிறுத்தினார் ஸ்லிமன். அவன், தாய் முன்பாக மண்டியிட்டு `'அம்மா என்னை மன்னித்துவிடு. நம் குலம் நேரடி தக்கிக்குலம் அல்ல. எப்படியோ தக்கிகள் பிடியில் சிக்கி, அவர்களாகவே ஆகிவிட்டோம். ஃப்ரிங்கா ஒரு தக்கிதான்'' என்று தன் அம்மாவிடம் அழுதான்.

தோண்டத் தோண்ட பிணக்குவியல்கள்... - தக்கிகள் ஒழிக்கப்பட்ட வரலாறு!

இந்தத் தகவல்கள் எப்படியோ ஃப்ரிங்காவிடமும் சென்று சேர்ந்தன. கடும் மனச்சோர்வடைந்தான் அவன். கொஞ்சம் கொஞ்சமாக அவனது கொள்ளைகள் மட்டுப்பட்டன. நடமாட்டங்கள் குறைந்தன. அடுத்தடுத்து அவனுடைய சகாக்கள் பிடிபட்டனர். சில வாரங்கள் கழித்து ஜான்சி அருகில் இருக்கும் ஐந்து கிராமங்களில் ஒன்றில் ஃப்ரிங்கா பதுங்கியிருப்பதாக ஸ்லிமனுக்குத் தகவல் கிடைத்தது. ஐந்து கிராமங்களிலுமே ஸ்லிமனின் தனிப்படையினர் வேட்டை நடத்தினர். இதில் அப்ரூவர் சோகார் என்பவன் காட்டிக்கொடுத்த கிஷ்ராய் கிராமத்தில் ஒரு வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த ஃப்ரிங்காவை தனிப்படை போலீஸார் கைதுசெய்தனர். 1830-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அது. எதிர்ப்பு எதுவும் காட்டாமல் சரணடைந்த அவன், சாகர் நகரின் சிறையில் அடைக்கப்பட்டான். சில வருடங்கள் வழக்கு விசாரணை நடந்தது.

ஸ்லிமனே பல்வேறு வழக்குகளில் நீதிபதியாகவும் இருந்தார். ஃப்ரிங்காவின் கைதுக்குப் பிறகுதான் ஆயிரக்கணக்கில் தக்கிகள் பிடிபட்டனர். தக்கிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, வட இந்தியாவில் ஏராளமான இடங்கள் தோண்டப்பட்டன. தோண்டத் தோண்ட பிணக்குவியல்கள்!

அந்த வாக்குமூலங்களின்போது பொதுவாக தக்கிகள் பலரும் ஒரேமாதிரியாக சொன்ன ஒரு விஷயம், 'தேவியின் ஆணைப்படிதான் இதையெல்லாம் செய்கிறோம். எங்களால் கொல்லப்படும் நபர்களை காளிதேவி சொர்க்கத்துக்கு அனுப்புகிறாள். இது ஒரு புனித வாழ்க்கை' என்கிறார்கள். ஒருவழியாக 18-ம் நூற்றாண்டின் இறுதியில் தக்கிகள் மொத்தமாக ஒழிக்கப்பட்டார்கள். அதன் பிறகு தொடங்கியது பவேரியாக்களின் ஆட்டம்!

தோண்டத் தோண்ட பிணக்குவியல்கள்... - தக்கிகள் ஒழிக்கப்பட்ட வரலாறு!

- இந்தியாவில் கொள்ளையர்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதுடன், சமீபத்தில் கோவையில் நடந்த சில தங்கநகைக் கொள்ளைகளின் பின்னணித் தகவல்களையும் விவரிக்கும் ஜூனியர் விகடன் மினி தொடர் பகுதிக்கு > க்ளிக் செய்க >

அடுத்த கட்டுரைக்கு