Published:Updated:

`தோற்றுப்போனேன்.. ஆனாலும்!’ - திருப்பூர் கலெக்டரின் கிரிக்கெட் காதல் #MyVikatan

டாக்டர். க.விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.
டாக்டர். க.விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.

``1992-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முதன்முதலில் என் பாட்டி வீட்டில் பார்த்து கிரிக்கெட் என்ற விளையாட்டைப் பற்றி ஒவ்வொன்றாக நானே கற்றுக்கொண்டேன்.’’

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

1998, மதுரை, மகாத்மா பள்ளி

``என்னது 8-வது படிக்கிற பையன் அடிச்சு பஸ் கண்ணாடி உடைஞ்சிருச்சா? “ என ஆச்சர்யத்துடன் கேட்டார் அந்த ஆசிரியர்

``ஆமா மேடம் “

``இந்தப் பசங்க டென்னிஸ் பந்தில்தானே விளையாடுறாங்க? கிரிக்கெட் பந்தில் இல்லையே ?“

``ஆமா மேடம்.. டென்னிஸ் பந்துதான்! இந்தப் பையன் எப்பவுமே இப்படித்தான், அவன் அடிக்கற சிக்சர் ஒன்னு பஸ்ல போய் விழும், இல்ல ஸ்கூல் பக்கத்தில இருக்கிற ஏதாவது ஒரு வீட்ல போய் விழும். இதுக்குத்தான் No Cricket Only Kho-kho இல்ல basketball ன்னு நான் சொன்னேன். ஆனா, இந்தப் பசங்க பிரின்ஸிபல் ரூம் வரைக்கும் போய் பர்மிஷன் வாங்கிட்டு வந்திருக்காங்க. நீங்க கொஞ்சம் பிரின்ஸிபல்கிட்ட சொல்லுங்க மேடம்“

டாக்டர். க.விஜய கார்த்திகேயன்
டாக்டர். க.விஜய கார்த்திகேயன்

இப்படி எங்கள் வகுப்பாசிரியரிடம் வத்தி வைத்துக் கொண்டிருந்தார் எங்கள் பி.டி சார். அந்த பஸ் கண்ணாடியை உடைத்ததாக அவர் புகார் சொல்லிக்கொண்டு இருந்த அந்த 8-ம் வகுப்பு மாணவன் நானேதான்.

``கார்த்தி.. உனக்கு என்னப் பிடிக்கும்? “ என்று யாராவது கேட்டால் , பளிச்சென்று, `கிரிக்கெட்' என்று இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களைப்போல் சொல்லிக்கொண்டு சுற்றித்திரிந்த காலம் அது. பள்ளியில் பி.டி கிளாஸ் முடிந்து வகுப்புக்குப் போகும் வழியில் நண்பர்கள் யாரையாவது பார்த்தால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, `இன்னைக்கு எத்தனை சிக்ஸர்?' என்று.

எங்கள் பள்ளி மைதானத்துக்கு அருகில் உள்ள பள்ளி நூலகத்தில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வெளியில் உட்கார்ந்து படிப்பதைப் போல் எங்கள் மேட்சுகளைப் பார்த்தும், எனது சிக்ஸர்களுக்குக் கை தட்டிய நண்பர்களும் உண்டு.

அப்படி நண்பர்கள் கொடுத்த சந்தோஷமும் பெருமையும் உத்வேகமும் என்னை சில ஆண்டுகளுக்குப்பின் மதுரையில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான (under 15) அணியில் தேர்ந்தெடுக்கப்படும்வரை கொண்டு சென்றது.

1992-ம் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முதன்முதலில் என் பாட்டி வீட்டில் பார்த்து, கிரிக்கெட் என்ற விளையாட்டைப் பற்றி ஒவ்வொன்றாக நானே கற்றுக்கொண்டேன். பின் என் தந்தையிடம் கேட்டு வீரர்களைப் போல pad, gloves என்று அனைத்தையும் வாங்கி விளையாடத் தொடங்கியபோது எனக்கு வயது 6.

அப்போது என் தந்தை கண்ணன் அவர்கள் ஈரோடு மாவட்ட வன அதிகாரியாக பணியாற்றினார். அதே ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட கலெக்டர் அணிக்கும் மாவட்ட எஸ்.பி அணிக்கும் இடையே கிரிக்கெட் போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

ஐ.ஏ.எஸ் கிரிக்கெட் அணியுடன் டாக்டர். க.விஜய கார்த்திகேயன்
ஐ.ஏ.எஸ் கிரிக்கெட் அணியுடன் டாக்டர். க.விஜய கார்த்திகேயன்

அப்போதைய ஈரோடு மாவட்ட கலெக்டர் கண்ணன் அவர்களும், மாவட்ட எஸ்.பி காந்திராஜன் அவர்களும் அணிகளுக்குத் தலைமை தாங்கினர். என் தந்தை எஸ்.பி அணிக்கு விளையாடுவதாக இருந்தது. என் தந்தைக்கோ கிரிக்கெட் என்றாலே ஏழாம்பொருத்தம். `4-க்கும் 6-க்கும் என்னடா வித்தியாசம்?' என்று போட்டிக்கு முந்தைய நாள் என்னிடம் அவர் அவசர அவசரமாகக் கேட்டபோது வயிறு குலுங்க சிரித்தேன்.

`செல்லாத நோட்டுகளாக மாறிய சேமிப்புப் பணம்!' -கலங்கிய மூதாட்டிகளுக்கு கரம்கொடுத்த திருப்பூர் கலெக்டர்

``பேசாமல் உனக்குப் பதிலாக நானே விளையாடுறேன்” என்று அப்பாவிடமும் பின் அடுத்தநாள் கலெக்டரிடம் கெஞ்சினேன். இருவருக்கும் என்னை விளையாட வைக்க வேண்டுமென்று ஆசை இருந்தாலும் போட்டி விதிமுறைகள் நான் விளையாடுவதற்கு இடம் கொடுக்கவில்லை.

`` அதிகாரிகள் மட்டும்தான்பா இந்தப் போட்டியில கலந்துகொள்ள முடியும், போட்டி முடிந்ததும் நீ வேணும்னா கொஞ்ச நேரம் இதே மைதானத்தில் விளையாடு“ என்று அழுது கொண்டிருந்த என்னை சமாதானப்படுத்தினர்.

டாக்டர். க.விஜய கார்த்திகேயன்
டாக்டர். க.விஜய கார்த்திகேயன்

அன்று 6 வயதான எனக்கு மனதில் அழுத்தமாக சற்று வித்தியாசமாக ஒன்று தோன்றியது. `என்றாவது ஒருநாள் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும்' என்றுதான் எல்லோரும் நினைப்பார்கள். நானோ, `என்றாவது ஒருநாள் பெரிய அதிகாரி ஆகி இந்த மாதிரி ஒரு மேட்ச்சை விளையாடனும்' என்று கண்ணீர் கலந்த மனதோடு அன்று நினைத்தேன்.

2015, ஜனவரி 24, குருநானக் கல்லூரி மைதானம், சென்னை.

தமிழகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கும் கிரிக்கெட் போட்டி துவங்கி நடந்து கொண்டிருந்தது. ஐ.ஏ.எஸ் அணியினர் முதலில் பேட் செய்து கொண்டிருந்தனர். போட்டிக்குச் சற்று தாமதமாக வந்த என் தந்தை அவசர அவசரமாக வண்டியை விட்டு இறங்கிக் கொண்டிருந்தபோதே மைதானத்திலிருந்து ஒரு பந்து வந்து அவர் வந்த வண்டி மீது `டம்' என்று அடித்தது.

`உன் பையன் அடிச்ச சிக்ஸர்தான்பா' என்று அங்கிருந்த அதிகாரி ஒருவர் கூற, அவசர அவசரமாக உள்ளே ஓடி வந்தார் அப்பா. அன்று தமிழக ஐ.ஏ.எஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் நான். 47 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உட்பட நான் அடித்த ரன்கள் 84.

``உலகத்தில் நிறைவேற்ற முடியாத கனவு என்று எதுவுமில்லை, எந்தவொரு கனவையும் நாம் நினைத்தால், உழைத்தால் அடைய முடியும்" (Every dream is possible) என்று நான் உணர்ந்த தினம் அன்று.

டாக்டர். க.விஜய கார்த்திகேயன்
டாக்டர். க.விஜய கார்த்திகேயன்

இப்படி என் வாழ்க்கையில் என்னோடு சேர்ந்து பயணித்த கிரிக்கெட் எனக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. ஒவ்வொரு ரன் ஓடும்போதும் நாம் நமது `பார்ட்னரை' நம்பித்தான் ஓடுகிறோம். இன்னும் சொல்லப் போனால் ரன் ஓடும்போது நமது `விக்கெட்’, நமது பார்ட்னர் கையில்தான் உள்ளது. அப்படி ஓடும் அந்த ரன்களில் ஒவ்வொரு முறையும் நமது நம்பகத்தன்மையும் சில நேரங்களில் விசுவாசமும்கூட வெளிப்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன்.

ஒருமுறை நான் படித்த சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் கிரிக்கெட் போட்டி நடந்துகொண்டிருந்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்த எங்கள் அணிக்கு இலக்காக 20 ஓவர்களில் 178 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சுமார் 90 ரன்களை எடுத்திருந்தபோது எங்கள் அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. நான் ஒருபுறம் விளையாடிக்கொண்டிருக்க இன்னொரு புறம் எனது நெருங்கிய நண்பன் களத்தில் இறங்கினான். இருவரும் எதிரணியினரின் இக்கட்டான பந்து வீச்சையும் சமாளித்து எங்கள் அணியின் ஸ்கோரை மளமளவென ஏற்றினோம். நண்பர் வருவதற்கு முன்பு நாங்கள் தோற்பதுபோல் இருந்த சூழல், கடைசி 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று மாறியது.

நமது `விக்கெட்’ நமது பார்ட்னர் கையில்தான் உள்ளது. அப்படி ஓடும் அந்த ரன்களில் ஒவ்வொரு முறையும் நமது நம்பகத்தன்மையும் சில நேரங்களில் விசுவாசமும்கூட வெளிப்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன்.
விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.
`ஒரே கமென்ட்; பிரச்னைக்கு இன்ஸ்டன்ட் தீர்வு!’ - திருப்பூர் கலெக்டருக்குக் குவியும் பாராட்டு

`எப்படியும் ஜெயித்துவிடலாம்' என்று நினைத்துக்கொண்டு ரன் ஓடியபோது ஏற்பட்ட ஒரு கவனச் சிதைவினால் நாங்கள் இருவரும் ஏறத்தாழ பிட்ச்சின் ஒரே பக்கத்தில் நின்றுகொண்டிருந்தோம். பந்து எதிரணி ஃபீல்டரின் கைகளில் இருந்தது. அவரும் ரன் அவுட் செய்ய குறி பார்த்துக்கொண்டிருந்தார். என்ன செய்ய என்று தெரியாமல் நான் திகைத்து நின்றுகொண்டிருக்க, என் நண்பரோ சற்றும் யோசிக்காமல் மறுமுனைக்கு ஓடி தனது விக்கெட்டைத் தியாகம் செய்தார்.

டாக்டர். க.விஜய கார்த்திகேயன்
டாக்டர். க.விஜய கார்த்திகேயன்

`நீ நின்னா ஜெயிச்சிரலாம்டா. ஜெயிச்சுட்டு வாடா' என்று நம்பிக்கையோடு சொல்லிவிட்டு தன் விக்கெட்டைத் தியாகம் செய்ததைப் பெரிதாக்காமல் பெவிலியன் திரும்பினார் நண்பர். அன்று எனக்கு நம்பிக்கை மற்றும் விசுவாசத்துக்கான அர்த்தங்கள் தெளிவாகப் புரிந்தன. அன்றைய போட்டியில் வெற்றிக்கான ரன்களைக் கண்ணீரோடு சேர்த்து அடித்தது இன்றும் மனதில் நிற்கின்றது. அந்த நண்பனும் இன்றும் என்னோடுதான் நிற்கின்றான்.

பொறுமை, விடாமுயற்சி, நேர்மை, நடுநிலை தவறாமை எனப் பல பாடங்களை எனக்கு தந்தது கிரிக்கெட். என்னதான் `விளையாட்டு ‘ என்று சொல்லப்பட்டாலும், வெற்றி தோல்விகளை ஒரே கோட்டில் பார்க்கும் மனப்பாங்கை வளர்த்துக்கொண்டாலும் கிரிக்கெட்டில் இந்தியா தோற்றாலும் சரி, நாம் விளையாடும் அணி தோற்றாலும் சரி, ஒவ்வொரு முறையும் மனது சற்று கனக்கத்தான் செய்கிறது.

டாக்டர். க.விஜய கார்த்திகேயன்
டாக்டர். க.விஜய கார்த்திகேயன்

சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகளை - ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ரயில்வே, கஸ்டம்ஸ், ஐ.ஆர்.எஸ், வருமானவரித்துறை எனப் பணிகளின் அடிப்படையில் 6 அணிகளாக பிரித்து தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் போட்டிகளை நடத்தியது. மிகுந்த மனஉளைச்சல் மற்றும் பணிச் சுமைகளுக்கு ஆளாகியுள்ள அதிகாரிகளுக்கு புத்துணர்வு ஊட்டும்விதத்திலும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கத்தோடும் போட்டிகள் நடத்தப்பட்டன. விறுவிறுப்பாக நடந்த லீக் போட்டிகளில் விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று எங்கள் ஐ.ஏ.எஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் நாங்கள் ஐ.ஆர்.எஸ் - இன்கம்டாக்ஸ் அணியுடன் மோதினோம். போட்டி நடந்ததோ நான் படித்து, பல வெற்றிகளைச் சந்தித்த ராமச்சந்திரா கல்லூரி மைதானத்தில்.

“ எப்படியும் ஒரு கை பார்த்துவிடலாம்“ என்று நம்பிக்கையோடு விளையாடிய அந்தப் போட்டியில் எங்களுக்குக் கிடைத்ததோ தோல்வி. தொடரில் எங்கள் அணிக்காக அதிக ரன்களை எடுத்தவராக நான் இருந்தாலும் ஃபைனலில் நான் அடித்ததோ 23 ரன்கள்தான்! ஆம், வாழ்க்கையைப் போல கிரிக்கெட்டிலும் எதுவும் நடக்கலாம். நாம்தான் மனதளவில் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்று மீண்டும் உணர்ந்தேன்.

டாக்டர். க.விஜய கார்த்திகேயன்
டாக்டர். க.விஜய கார்த்திகேயன்

சமீபத்திய அந்தத் தோல்வியை ஓரம் கட்டிவிட்டு, தினமும் எவ்வளவு வேலைச்சுமை இருந்தாலும் அவற்றையெல்லாம் செய்து முடித்துவிட்டு தினமும் கடினமாக உடற்பயிற்சி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிக்கெட் என அடுத்தடுத்த சவால்களுக்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறேன். என்னைப் பார்த்து என் 6 வயது மகனும் செல்போனை தூக்கிப்போட்டுவிட்டு கிரிக்கெட் மட்டையை இப்பொது கையில் எடுத்திருக்கிறான். அவனிடம் நான் தினமும் சொல்வது,

``உழைத்தால் முடியாதது எதுவுமில்லை, கிரிக்கெட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி!"

-திருப்பூர் ஆட்சியர் டாக்டர். க.விஜய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு