Published:Updated:

பிரமாண்டமோ எளிய திருமணமோ முதலில் இதைச் செய்யுங்க..!- சட்டம் முக்கியம் பாஸ்

சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்பவர்கள் திருமணத்தைப் பதிவு செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் பதிவு செய்யாமல் விட்டுவிடுகிறார்கள்.

Representational Image
Representational Image

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். திருமணங்கள் எங்கு வேண்டுமென்றாலும் நிச்சயிக்கப்படலாம், ஆனால் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்கிறது சட்டம். பல லட்சங்கள் செலவு செய்து திருமணம் நடத்தினாலும் சரி, எளிய முறையில் திருமணம் செய்துகொண்டாலும் சரி பதிவு செய்வது அவசியம். திருமணம் பதிவு செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றி இளைஞர்களுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லை. தவிர, கடந்த சில வருடங்களாகச் சாதி மறுப்பு திருமணங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்பவர்கள் திருமணத்தைப் பதிவு செய்வதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் பதிவு செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். மேலும், திருமணப் பதிவு ஏன் செய்ய வேண்டும், செய்யாவிடில் ஏற்படும் சிக்கல்கள் என்ன, எப்படிச் செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

Representational Image
Representational Image

``இன்றைய காலகட்டத்தில் திருமணத்தைப் பதிவு செய்வது என்பது மிகமிக முக்கியமான ஒன்று. விசா, பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து நடைமுறைகளுக்கும் திருமணச் சான்றிதழ் கட்டாயம் வேண்டும். அரசு வழங்கும் சலுகைகளைப் பெறுவதற்குத் திருமணச் சான்றிதழ் அவசியம். உதாரணமாகப் பெண்களுக்கு திருமணத்துக்குத் தங்கம் வழங்குவது போன்ற அரசுத் திட்டங்களின் பயனைப் பெற திருமணச் சான்றிதழ் அவசியம். திருமணத்துக்குப் பிறகு குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பதற்கும் இந்த சான்றிதழ் அவசியம். குறிப்பாக அரசு வேலையில் இருப்பவர்கள் திருமணத்தைப் பதிவு செய்வது மிக மிக அவசியம்.  இப்படி பல்வேறு காரணங்களுக்காகத் திருமண சான்றிதழ் தேவைப்படுகிறது. லட்சங்கள் செலவு செய்து திருமணம் நடத்தினாலும், சட்டப்படி திருமணம் நடைபெற்றதற்கு ஆதாரங்கள் இல்லாத நிலையில், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாதுதானே. பிறப்பு இறப்பைப் போல நாட்டில் நடைபெறும் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று அரசாங்கம் கருதியதால், திருமணப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது ” என்கிறார் வழக்கறிஞர் சரவணன்.

திருமணம் பதிவு செய்யும் முறைகள்!

``தமிழ்நாட்டில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு {தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் (2009) } அமலுக்கு வந்தது. திருமணமான 90 நாள்களில் இதை மேற்கொண்டாக வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், மேற்கொண்டு அபராத கட்டணத்தோடு அடுத்த 60 நாள்களில் கட்டாயமாகப் பதிவு செய்தாக வேண்டும். அதாவது திருமணம் நடந்து 150 நாள்களுக்குள் தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம், 2009 சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ள வேண்டும். திருமணம் எந்த இடத்தில் நடந்ததோ அந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் எல்லை வரம்புக்கு உட்பட்ட அலுவலகத்தில் மட்டும்தான் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக மணமக்கள் வெவ்வேறு மாவட்டமாக இருந்து, திருமணம் மட்டும் சென்னையில் நடைபெற்றது எனில் சென்னையில்தான் பதிவு செய்ய வேண்டும். எந்த மதமுறைப்படி திருமணம் நடந்திருந்தாலும் தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்ள முடியும்.

வழக்கறிஞர் சரவணன்
வழக்கறிஞர் சரவணன்

மணமக்கள் இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் எனில் `இந்து திருமணங்கள் சட்டம் 1955' சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். கோயில் அல்லது மத வழக்கப்படி எங்கு வேண்டுமானாலும் திருமணத்தை மேற்கொள்ளலாம்.  

இருவருமே கிறிஸ்தவர் அல்லது ஒருவர் மட்டுமே கிறிஸ்தவர் எனில், கிறிஸ்தவ சட்டத்தின்படி மணமக்கள், குறிப்பிட்ட அந்த தேவாலயத்தில் திருமணம் செய்துகொள்ளமுடியும். 

இருவருமே இஸ்லாமியர் எனில் , குறைந்தது 2 சாட்சிகளுடன்கூடிய ஓர் ஒப்பந்தம் போதும். இடம் முக்கியமல்ல. கட்டாய திருமணப் பதிவுச் சட்டம்-2005, அமலுக்கு வந்துவிட்டதால், பள்ளிவாசல்களில் நடத்தப்படும் திருமணங்கள் அனைத்தையும் அரசாங்க கெஜட்டில் பதிவு செய்வது அவசியம்.

இந்த மூன்று மத திருமணச் சட்டங்கள் தவிர்த்து, தமிழகத்தில் சுய மரியாதை திருமணச் சட்டத்தின் கீழும் திருமணம் செய்துகொள்ள முடியும். எந்தவொரு சாதி, மதம் உள்ளிட்ட சமூகப் பிரிவுகளைப் பொருட்படுத்தாது, சடங்கு சம்பிரதாயங்கள் இன்றி திருமணப் பதிவாளர் முன்னிலையில் திருமண அங்கீகாரத்துக்கு வழி செய்யும் சிறப்பு திருமணச் சட்டமும் இருக்கிறது.

Representational Image
Representational Image

காதல் திருமணம் செய்துகொள்ளும் மணமக்கள் இருவேறு சாதி அல்ல‍து மதங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பின், அவர்கள் மேற்கண்ட திருமணச் சட்டங்களில் அவர்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்துகொள்ளலாம். இந்த திருமணத்துக்கு சட்ட‍ம் தடையாக இருக்காது. மதமோ சாதியோ அவை சட்டத்தின் கீழ் ஒரு பொருட்டல்ல. 

பொதுவாகத் திருமணப் பதிவு செய்ய, மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் புகைப்படம், புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் (ID Proof), தம்பதியின் வீட்டு விலாசத்துக்கான அடையாள ஆவணம், இரண்டு சாட்சி இருந்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது, பெற்றோர்கள் உடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இதனால்தான் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. திருமணத்தைப் பதிவு செய்ய சட்டப்படி பெற்றோர்கள் தேவையில்லை எனினும் சட்டத்துக்குப் புறம்பான திருமணங்களை தடுக்கும் நோக்கத்துடன் பதிவு அலுவலகங்களில் பெற்றோர்களை சாட்சியாக வர சொல்வது தற்போது வழக்கமாகியுள்ளது. குறிப்பாகப் பதிவுத் திருமணம் செய்ய வரும் பெண்களிடம் பதிவுத் துறை அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் திருமணப் பதிவு செய்வது மிகவும் அவசியம். பின் நாளில் மற்றவர்களால் பிரச்னை ஏற்பட்டால் திருமணச் சான்றிதழ் இருந்தால் மட்டுமே சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் மணமுடிப்பவர்களுக்கான சட்டப் பாதுகாப்பை திருமணப் பதிவு அளிக்கிறது.

மேற்கூறிய வழிமுறைகள் திருமணம் செய்த பின்னர் பதிவு செய்வதற்கான வழிமுறைகள். பதிவாளர் அலுவலகத்திலேயே திருமணம் செய்துகொள்ள முடிவெடுப்பவர்களுக்கு சிறப்பு திருமணச் சட்டத்தில் வழிமுறைகள் உள்ளன. அதில் எந்தச் சடங்கு சம்பிரதாயமும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

Representational Image
Representational Image

வெவ்வேறு மதம் / வெவ்வேறு சாதியைச் சேர்ந்த தம்பதிகள் நேரடியாக ரெஜிஸ்டர் அலுவலகம் வந்து பதிவு செய்து, 30 நாள் நோட்டீஸுக்கு சமர்ப்பித்து கையொப்பமிட்டு திருமணம் செய்து கொள்ளலாம்.  முன்பு மதம் மாறி திருமணம் செய்துகொள்வது சட்டப்படி அங்கீகரிக்கப்படாத திருமணமாக இருந்தது. மதம் மாறி திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால், அந்தத் திருமணங்களை சட்ட வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசின் சார்பில் சிறப்பு திருமணம் சட்டம்-1954 அமல்படுத்தப்பட்டது. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இருவர் மதம் மாறாமல் அவரவர் மதத்திலேயே நீடிக்க விரும்பினாலோ அல்லது மதத்தைப் புறக்கணித்து திருமணம் செய்ய விரும்பினாலோ அவர்களை சிறப்பு திருமணச் சட்டம் அரவணைக்கிறது.

சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சான்றிதழ் பெற சில நடைமுறைகள் உள்ளன. மணமக்களின் ஆவணங்கள் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின் அந்த அலுவலகத்தில் இன்னார் இன்னாரைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார் என்று புகைப்படங்களுடன் ஓர் அறிவிப்பு ஒட்டி வைக்கப்படும். மணமகள் வேறு ஊரைச் சேர்ந்தவராயின் அவ்வூரின் பதிவு அலுவலகத்திலும் இந்த அறிவிப்பு வெளியிடப்படும். இத்திருமணத்துக்கு சட்டரீதியான ஆட்சேபனை தெரிவிப்போர்  30 நாள்களுக்குள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், 30 நாள் கழித்து மணமக்கள் விரும்பும் தேதியில் திருமணம் பதிவு செய்து தரப்படும்.

Representational Image
Representational Image

மேலும், திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் பதிவு செய்யாதவர்கள் மற்றும் திருமணப் பதிவு சான்றிதழைத் தொலைத்தவர்கள் பலர் சான்றிதழ் வேண்டும் என்று பதிவாளர் அலுவலகம் நோக்கி ஓடுகிறார்கள். ஏனெனில், வெளிநாடு செல்வது, காப்பீட்டுத் தொகை, அலுவல் ரீதியான தேவைகள் என பல்வேறு காரணங்களுக்குத் திருமணச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கின்றனர். திருமணம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் முறையான ஆவணங்கள் இருப்பின் மீண்டும் பதிவு செய்ய முடியும் ’’ என்று விரிவாக விளக்கினார் வழக்கறிஞர் சரவணன்.

Representational Image
Representational Image

எந்த மதச் சடங்குகளும் இன்றி எளிய முறையில் திருமணம் செய்துகொள்ளும் போக்கு சமீப காலமாகவே அதிகரித்து வருகிறது. இதுகுறித்து LAWGIC திருமணப் பதிவு சேவை நிறுவனத் தலைவர் செல்வராஜ் பேசுகையில், ``எந்தச் சடங்கு சம்பிரதாயமும் இல்லாமல் இந்த ஒரு வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 20 திருமணங்கள் நடத்தியிருக்கிறோம். இதில் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் நடைபெற்றது என்பது பெருமைக்குரிய விஷயம். இதேபோன்று பிரமாண்ட திருமணத்தில் ஆர்வம் இல்லாமல் எளிய முறையில் திருமணம் செய்ய விரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அனைத்துச் சடங்கு சம்பிரதாயங்களுடன்  50,000 செலவில் திருமணம் நடத்தி முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எங்களைத் தேடி வருபவர்கள் அதிகரித்துள்ளனர்’’ என்று முடித்தார்.