`கே.ஜி.எஃப்’ நடிகர் யாஷ், பா.ஜ.க-வுக்குப் பிரசாரம் செய்தாரா... வைரலாகும் புகைப்படம் - உண்மை என்ன?

2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் யாஷ் பிரசாரம் செய்தது உண்மைதான். ஆனால், அவர் பா.ஜ.க வேட்பாளருக்கு மட்டும் ஆதரவு தரவில்லை..!
கன்னட நடிகர் யாஷ் நடித்த `கே.ஜி.எஃப்’ படம் கன்னட மொழியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஹிட் அடித்தது. கடந்த வாரத்தில் வெளியான `கே.ஜி.எஃப் இரண்டாம் பாக’த்தின் டீஸரும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில் கடந்த இரு தினங்களாக நடிகர் யாஷ் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.

தமிழகத்திலுள்ள பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துவருகின்றனர். அவர்களில் சிலர், ``பவர்ஃபுல் பீப்புள் கம்ஸ் ஃப்ரம் பவர்ஃபுல் பிளேஸ்'', ``2021 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக நடிகர் யாஷ் பிரசாரம் செய்யவிருக்கிறார்'' எனப் பல கருத்துகளைப் பதிவிட்டு இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துவருகின்றனர்.
உண்மையிலேயே நடிகர் யாஷ் பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தாரா..?
2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக நடிகர் யாஷ் பிரசாரம் செய்தது உண்மைதான். ஆனால், அவர் பா.ஜ.க வேட்பாளருக்கு மட்டுமல்ல, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளருக்கும் பிரசாரம் செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்குக்கூட பிரசாரம் செய்திருக்கிறார் நடிகர் யாஷ். இது குறித்துப் பல செய்தி நிறுவனங்கள் அவர் பிரசாரம் செய்த சமயத்திலேயே செய்தி வெளியிட்டிருக்கின்றன.
2018 பிரசாரம்!
2018 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் எஸ்.ஆர்.மகேஷை ஆதரித்து கிருஷ்ண ராஜா நகர் தொகுதியில் பிரசாரம் செய்திருக்கிறார் நடிகர் யாஷ். அதே தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ராம்தாஸ் என்பவரை ஆதரித்து மைசூரில் பிரசாரம் செய்திருக்கிறார் அவர். இது குறித்து கன்னட, ஆங்கிலச் செய்தி ஊடகங்கள் அந்தச் சமயத்தில் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

சில ஆங்கில ஊடகங்கள், 2018 சட்டமன்றத் தேர்தலில் யாஷ் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒருவருக்கும் பிரசாரம் செய்யவிருப்பதாகக்கூட செய்தி வெளியிட்டிருக்கின்றன.
பல கட்சி வேட்பாளர்களுக்கும் பிரசாரம் செய்வது குறித்து அந்தச் சமயத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த யாஷ், ``வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு நான் பிரசாரம் செய்வதால், வாக்காளர்களுக்குக் குழப்பம் ஏற்படும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நல்ல வேட்பாளர்கள், வளர்ச்சிக்காகப் பாடுபடுபவர்களுக்கு நான் பிரசாரம் செய்வேன்'' என்று கூறியிருக்கிறார். மேலும்,
நான் எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்காகவும் பிரசாரம் செய்யவில்லை. நல்ல வேட்பாளர்களுக்கு மட்டுமே பிரசாரம் செய்கிறேன்.யாஷ், கன்னட நடிகர்
2019 பிரசாரம்!
2019 நாடாளுமன்றத் தேர்தலில், மாண்டியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார் நடிகையும் அரசியல்வாதியுமான சுமலதா அம்பரீஷ். இவருக்கு ஆதரவளித்தும் பிரசாரம் செய்திருக்கிறார் நடிகர் யாஷ். இந்தத் தேர்தலில், சுமலதாவை எதிர்த்து போட்டியிட்டார் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில். யாஷ் உள்ளிட்ட நடிகர்களின் ஆதரவோடு போட்டியிட்ட காரணத்தால் மாண்டியா தொகுதியில் வெற்றிபெற்றார் சுமலதா.

முடிவு!
நமக்குக் கிடைத்த செய்திகளைவைத்துப் பார்க்கும்போது `நடிகர் யாஷ் பா.ஜ.க ஆதரவாளர்' என்று பரவிய தகவல்கள் போலியானவை. அவர் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவானவராக இல்லை என்பதும், வேட்பாளர்களை மனதில்வைத்தே பிரசாரம் செய்தார் என்பதும் யாஷ் அளித்த பேட்டியின் மூலமே தெளிவாகிறது.