Published:Updated:

`வீட்டுக்கு அருகே இருந்த கல்லூரியில் சேர இதுதான் காரணம்'... இஸ்ரோ தலைவர் சிவன்

வீட்டுக்கு அருகே இருந்த கல்லூரியில் சேர என்ன காரணம் என்பதைத் தெரிவித்திருக்கிறார் சிவன்

இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான் 2 விண்கலம் ஒரு வழியாக கடந்த 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு விட்டது. 15-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி-மார்க் 3- எம்-1 ராக்கெட்டில் ஏற்பட்ட சிறிய கோளாறால் ராக்கெட் ஏவப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.

சந்திரயான் 2
சந்திரயான் 2

அதன் பின்னர் 22-ம் தேதி மதியம் 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. முதல் முறை தடங்கல் ஏற்பட்டபோது அது தொடர்பான கூடுதல் விவரங்களை இஸ்ரோ வெளியிடவில்லை. இஸ்ரோ தலைவர் சிவனும் பேட்டி கொடுப்பதைத் தவிர்த்து விட்டார்.

ஜி.எஸ்.எல்.வி-மார்க் 3- எம்-1 ராக்கெட்டில் இருந்த கிரையோஜெனிக் இன்ஜின் எதிர்பார்த்தைவிடவும் சிறப்பாக செயல்பட்டதாலும், சந்திரயான் 2 விண்கலம் இயல்பாகச் செயல்பட்டு வருவதாலும் மகிழ்ச்சியில் இருக்கிறார் சிவன். அதைத் தொடர்ந்து பல ஊடகங்களுக்குப் பேட்டியும் கொடுத்து வருகிறார்.

K.sivan
K.sivan

அப்படி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் அவரது கல்லூரிக் காலம் தொடர்பான சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிவித்திருக்கிறார்.

`` கல்லூரியில் படிக்கும்போது வயலில் அப்பாவுக்கு உதவியாக வேலைகளைச் செய்வது எனது வழக்கமாக இருந்தது. அதன் காரணமாக வீட்டுக்கு அருகே இருந்த கல்லூரியில் சேர அனுமதித்தார். என் குழந்தைப் பருவம் முழுவதையும் செருப்பில்லாமல்தான் கழித்தேன். கல்லூரிக்குச் செல்லும் வரை வேட்டி கட்டிக்கொண்டுதான் செல்வேன். MIT-யில் சேரும் போதுதான் முதல் முறையாக பேன்ட் அணிந்தேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

K.sivan
K.sivan

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரக்கல்விளைதான் சிவனின் சொந்த ஊர். முழுக்க தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை முடித்தவர். அதன் பின்னர் நாகர்கோவிலில் உள்ள இந்துக் கல்லூரியில் சேர்ந்தார். சிவனின் சகோதரரும், இரண்டு சகோதரிகளும் வறுமையின் காரணமாக உயர்படிப்பை முடிக்க முடியாமல் போனது. அவரின் குடும்பத்தில் சிவன்தான் முதல் தலைமுறை பட்டதாரி.

Source: Times Of India