Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: வீடியோ சர்ச்சையில் துரைமுருகன், கோவை மக்களின் அச்சம், 'சாதித்த' பொன்னார்!

ஜூ.வி பைட்ஸ்
ஜூ.வி பைட்ஸ்

அறிவாலயத்தைவிட்டு வெளியில் வந்த என்னை சாரதி குமார் அவமானப்படுத்தி, மீண்டும் கொலை மிரட்டல் விடுத்தார். என் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, கணவர் சாரதி குமாரைக் கைது செய்ய வேண்டும்

பெண் விவகாரத்தில் சிக்கி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருக்கு ஆதரவாக துரைமுருகன் பேசியதாக வெளிவந்திருக்கும் வீடியோ ஒன்று, வேலூர், திருப்பத்தூர் பகுதி தி.மு.க-வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர தி.மு.கழகப் பொறுப்பாளர் சாரதி குமார் மீது அவரின் மனைவி ரம்யா, பிப்ரவரி 21-ம் தேதி சென்னை பெருநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், 'நானும் சாரதி குமாரும் 2016-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டோம். பெண் குழந்தை பிறந்த நிலையில், சாரதி குமார் சேலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தவறான உறவு ஏற்படுத்திக்கொண்டார். குடும்ப கௌரவம் கருதி, இத்தனை நாள்களாகச் சகித்துக்கொண்டேன். சாரதி குமார் என்னுடைய 140 பவுன் நகை, 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தைப் பறித்து அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளார். இதுபற்றிக் கேட்டதற்கு, தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்.

ஜூ.வி பைட்ஸ்: வீடியோ சர்ச்சையில் துரைமுருகன், கோவை மக்களின் அச்சம், 'சாதித்த' பொன்னார்!

பிப்ரவரி 19-ம் தேதி, அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து சாரதி குமார் மீது புகார் கொடுத்தேன். நான் சொன்னதைக் கேட்டுக்கொண்ட அவர், விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார். அறிவாலயத்தைவிட்டு வெளியில் வந்த என்னை சாரதி குமார் அவமானப்படுத்தி, மீண்டும் கொலை மிரட்டல் விடுத்தார். என் உயிருக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, கணவர் சாரதி குமாரைக் கைது செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதையடுத்து, வாணியம்பாடி நகரப் பொறுப்பிலிருந்து சாரதி குமார் நீக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, சாரதி குமாரின் ஆதரவாளர்கள் துரைமுருகனை காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து, "சாரதி குமாருக்கு மீண்டும் நகரப் பொறுப்பு வழங்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது துரைமுருகன் பேசியதைத்தான் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதுதான் இப்போது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. அந்த வீடியோவில், "என்னைப் பொறுத்தவரை, சாரதி குமார் எனக்கு வேணும்னு நான் தளபதி கிட்ட சொல்லிட்டேன். அவன்தான் என் பையனை ஜெயிக்கவெச்சான்; கட்சியைக் காப்பாத்தி இருக்கான். வாணியம்பாடிக்கு சாரதி திரும்பவும் வேணும்னு தளபதிகிட்ட சொன்னதுக்கு 'நீங்க அமைதியா போங்க... பழையபடி பதவியைத் தந்துடுறேன்'னு சொல்லிட்டார்" என்கிறார் துரைமுருகன்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து துரைமுருகன் மீதும் சர்ச்சை கிளம்பியது. "பெண் விவகாரத்தில் சிக்கிய நிர்வாகிக்கு ஆதரவாக, கட்சியின் பொருளாளரே இப்படிப் பேசலாமா?" என்று தி.மு.க-வினர் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு நம்மிடம் துரைமுருகன் அளித்த பதில் உள்ளிட்ட பின்னணியை முழுமையாக வாசிக்க > "எவனோ ஒரு மடையன் வீடியோ எடுத்துப் போட்டிருக்கான்!" - வீடியோ சர்ச்சைக்கு துரைமுருகனின் பதில்... https://www.vikatan.com/news/politics/dmk-duraimurugan-controversy-video

கோவை மக்களிடம் இனம் புரியாத அச்சம்!

23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பதற்றத்தில் இருக்கிறது கோவை மாநகரம். குண்டு வெடிப்புக்குப் பிறகு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்த கோவை, அதிலிருந்து மீண்டு வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் சூழலில் இப்போது நடந்துவரும் விரும்பத்தகாத சம்பவங்கள் கோவை மக்களிடம் அச்சத்தை விதைத்துள்ளன.

சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, கோவையிலும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். பிப்ரவரி 19-ம் தேதியிலிருந்து ஆத்துப்பாலம் பகுதியில் 'ஷாஹீன் பாக்' பாணியில் தொடர்போராட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில், மார்ச் 2-ம் தேதி சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக கோவை காந்திபுரம் பகுதியில் தமிழ்நாடு ஹோட்டல் முன்பு, இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தினர். அதை வீடியோ எடுத்ததாகக் கூறி, ஷாகுல் ஹமீது என்கிற இஸ்லாமியரை இந்து அமைப்பினர் தாக்கியதாக புகார் எழுந்தது. இரு தரப்புக்கும் மோதல் ஏற்படாமல் தடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர் போலீஸார்.

ஜூ.வி பைட்ஸ்: வீடியோ சர்ச்சையில் துரைமுருகன், கோவை மக்களின் அச்சம், 'சாதித்த' பொன்னார்!

அடுத்து, மார்ச் 4-ம் தேதி நஞ்சுண்டாபுரம் மேம்பாலம் அருகே இந்து முன்னணிப் பிரமுகர் ஆனந்தன், மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். அன்றே இரண்டு இஸ்லாமியர்களின் ஆட்டோக்கள் உடைக்கப்பட்டன. மறுநாள், கணபதி அருகே பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆனந்தன் மீதான தாக்குலைக் கண்டித்து 6-ம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடத்துவதாக இந்து முன்னணி அறிவித்தது. 'அதே நாளில் நாங்களும் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்று இஸ்லாமிய அமைப்புகளும் அறிவித்தன. 'மார்ச் 6-ம் தேதி முகூர்த்த நாள் என்பதால், அன்றைய தினம் கடையடைப்பு வேண்டாம்' என்று கோரிக்கைகள் முன்வைக்கப்படவே, இரு தரப்புமே 7-ம் தேதி கடையடைப்பு நடத்தின. வீதிகளெங்கும் போலீஸார் குவிக்கப்பட்டனர். அன்று கோவை நகர வீதிகள் வெறிச்சோடின. மக்களிடம் இனம் புரியாத அச்சம் உருவானது.

இதுதொடர்பான முழுமையான பின்னணியுடன் கூடிய செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > ''இன்னொரு மதக்கலவரத்தை கோவை தாங்காது!'' - மக்களிடம் இனம் புரியாத அச்சம்... https://www.vikatan.com/social-affairs/crime/combatore-caa-protest-riot-issue

சத்தமில்லாமல் சாதித்துவிட்டார் பொன்னார்!

''தமிழக பா.ஜ.க தலைவராக முருகன் அறிவிக்கப்பட்டதில், தமிழக பா.ஜ.க தலைவர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கும் விஷயத்துக்கு வருகிறேன். பட்டியல் சமூகத்தில் ஒருவரை தலைவராக்கி இருப்பதன்மூலமாக, பட்டியல் சமூகத்தினரின் ஓட்டுகளை குறிவைத்து வியூகம் வகுத்திருக்கிறது பா.ஜ.க. ஆனால், தமிழக பா.ஜ.க-வில் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்தவர்களைவிட மலைத்தவர்கள்தான் அதிகம். பெயருக்கு வாழ்த்து சொன்னாலும், பதவியை எதிர்பார்த்துக் காத்திருந்த பலரும் கொந்தளிக்கிறார்கள்.''

''யாருடைய பரிந்துரையில் முருகனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது?''

''ஏற்கெனவே நயினார் நாகேந்திரன் பெயரை முரளிதர் ராவ் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், புதிதாக கட்சிக்கு வந்தவர் என்று அவரை பரிசீலிக்கவில்லையாம். ஹெச்.ராஜா தரப்பும் தலைவர் பதவிக்காக மல்லுக்கட்டியிருக்கிறது. ஆனால், சத்தமில்லாமல் சாதித்துவிட்டார் பொன்னார்!''

ஜூ.வி பைட்ஸ்: வீடியோ சர்ச்சையில் துரைமுருகன், கோவை மக்களின் அச்சம், 'சாதித்த' பொன்னார்!

''என்னது... பொன்னார் பரிந்துரையா?''

''முருகன், பொன்னாரின் தீவிர ஆதரவாளர். அவரின் பரிந்துரையில்தான் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியும் முருகனுக்குக் கிடைத்தது. தன்னுடைய கைக்கு அடக்கமான ஒருவர்தான் தலைவர் ஆக வேண்டும் என்றே திட்டமிட்டு காய் நகர்த்தி, முருகனை தலைவராக்கிவிட்டார் என்கிறார்கள்.''

''எப்படி?''

''டெல்லியில் உள்ள தன் சகாக்கள்மூலம் கட்சித் தலைமைக்கு முருகன் பெயரை பரிந்துரை செய்ததுடன், தெலங்கானா ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜனையும் பரிந்துரை செய்யச் சொல்லியிருக்கிறார். தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக நடக்கும் பிரசாரத்தை முறியடிக்க முருகன்தான் சரியான சாய்ஸ் என்று இரு தரப்பும் சேர்ந்து சொல்ல, முருகன் பெயரை 'டிக்' செய்திருக்கிறது டெல்லி. தவிர, முரசொலி அலுவலகம் - பஞ்சமி நிலம் தொடர்பான விவகாரத்தை விசாரணைக்கு எடுத்ததும் முருகன்தான். அதுவும் இவருக்கு பதவி கிடைக்க ஒரு காரணமாக இருக்கலாம்.''

''எல்லாம் இருக்கட்டும், அவரை சுதந்திரமாகச் செயல்பட விடுவார்களா?" | ''தி.மு.க தரப்பிலும் பதவிப் போட்டி அதிகமாகிவிட்டது போலிருக்கிறதே?'' | ''அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?'' - கழுகார் தந்த தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: பொன்னாரின் உதவி... முருகனுக்கு பதவி! - தி.மு.க தரப்பிலும் பதவிப் போட்டி...! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-mar-18-2020

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு