Published:Updated:

ஜூ.வி பைட்ஸ்: ஜி.கே.வாசனுக்கு 'நிபந்தனை', பெரிய கோயிலில் சித்திர'வதை', பெண் சிசுக் கொலை அவலம்!

ஜூ.வி பைட்ஸ்
ஜூ.வி பைட்ஸ்

முதலில் டெல்லி மேலிடத்தைத் திருப்திப்படுத்தியதன் மூலமாகக் கிடைக்கும் பலாபலன்கள்தான் அவர்களுக்கு முக்கியம். அடுத்து, காவிரி டெல்டா பகுதியில் படு வீக்காக இருக்கிறது அ.திமு.க.

"ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுத்ததற்கு அ.தி.மு.க-வுக்குள் எதிர்ப்பு எதுவும் கிளம்பவில்லையா?"

"கடும் அதிருப்தி. ஒரு வாரத்துக்கு முன்பு கே.பி.முனுசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட சில நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தபோது, 'மனோஜ் பாண்டியனுக்கு ஒரு சீட் கொடுக்கலாம். நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் பி.ஹெச்.பாண்டியன். அவர் மறைந்த பிறகு அவர் குடும்பத்துக்கு நாம் செய்யும் கௌரவமாக இருக்கும்' என்று கே.பி.முனுசாமி சொன்னாராம். 'பார்க்கலாம்' என்று சொன்னாராம் பன்னீர். அங்கிருந்து கே.பி.முனுசாமி நகர்ந்ததும் 'இவரோட சீட்டை மனோஜ் பாண்டியனுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதுதானே!' என்கிற கமென்ட் பன்னீர் முன்பாகவே வந்து விழுந்துள்ளது. முன்னாள் எம்.பி-யான மைத்ரேயன், 'தனக்கு வாய்ப்பு வேண்டும்' என்று பன்னீர் மற்றும் எடப்பாடி இருவரிடமும் கடிதமே கொடுத்தும் பலனில்லை..."

"ஜி.கே.வாசனுக்குப் பதவியைக் கொடுப்பதால், அ.தி.மு.க-வுக்கு என்ன லாபம்?"

"முதலில் டெல்லி மேலிடத்தைத் திருப்திப்படுத்தியதன் மூலமாகக் கிடைக்கும் பலாபலன்கள்தான் அவர்களுக்கு முக்கியம். அடுத்து, காவிரி டெல்டா பகுதியில் படு வீக்காக இருக்கிறது அ.திமு.க. அந்தப் பகுதியைச் சேர்ந்தவரான ஜி.கே.வாசனுக்குப் பதவியைக் கொடுப்பதன் மூலமாக ஏதாவது பலன் கிடைக்கக்கூடும் என்றும் கணக்குப்போடுகிறார்கள்."

"சரி, மத்திய அமைச்சரவையில் ஜி.கே.வாசனுக்கு இடம் கிடைக்குமோ?"

"அவரின் ஆதரவாளர்களுக்கு அப்படியும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. 'அடுத்து, அமைச்சர் ஆகப்போகிறார். மீண்டும் கப்பல் ஓட்டுவார்' என்று உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

ஜூ.வி பைட்ஸ்: ஜி.கே.வாசனுக்கு 'நிபந்தனை',  பெரிய கோயிலில் சித்திர'வதை', பெண் சிசுக் கொலை அவலம்!

ஆனால் அ.தி.மு.க தரப்பிலோ, 'கட்சியை மொத்தமாக பா.ஜ.க-வுடனோ அல்லது ரஜினி ஆரம்பிக்கப்போகும் கட்சியிலோ கரைத்துவிட வேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் இந்த வாய்ப்பை அவருக்கு பா.ஜ.க பெற்றுத் தந்திருக்கிறது. நமக்கு எந்தவிதத்திலும் லாபம் கிடைக்காது எனத் தெரிந்தும், ஜி.கே.வாசனுக்கு எதற்காக சீட் தர வேண்டும்?' என்கிற குமுறலும் ஒலிக்கிறது."

- அறிவாலயம் முதல் டெல்லி வரை முகாமிட்ட கழுகார் அடுக்கும் தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: முகர்ஜியின் முயற்சி... ஜி.கே.வாசனுக்கு ஜாக்பாட்! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-mar-15-2020

சித்திர'வதை' - தஞ்சை பெரிய கோயில் வேதனை!

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோயில் நம் கட்டடக் கலைக்கான சான்று என்றால், அதன் உள்ளே உள்ள சோழர் கால ஓவியங்கள் நம் ஓவியக் கலைக்கான சான்று.

உலகளவில் போற்றிப் புகழும் மோனாலிசா ஓவியம், அஜந்தா ஓவியங்களுக்கு சற்றும் குறைவில்லாதது தஞ்சை பெரிய கோயிலில் உள்ள சோழர் கால ஓவியங்கள். பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய அந்த ஓவியங்கள், திட்டமிட்டே சிதைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, தஞ்சை மக்களையும் வரலாற்று ஆய்வாளர்களையும் திடுக்கிடவைத்துள்ளது. "குடமுழுக்கு புனரமைப்புப் பணிகளின்போது, ரசாயனம் கலந்து சுத்தம் செய்ததாலேயே ஓவியங்கள் சிதைந்துவிட்டன. இது திட்டமிட்ட சதி" என்று கொந்தளிக்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

தமிழகத்தின் வரலாற்றுப் பாரம்பர்யம் மிக்க ஓவியங்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுவரும் 'எண்கண்' எழில்முருகன் இதுகுறித்து சற்று விரிவாகவே நம்மிடம் பேசினார்.

"அவ்வப்போது ஆய்வுக்காக தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் செல்வோம். ஆறு மாதங்களுக்கு முன்பு நான் அங்கு சென்றிருந்தபோது அந்த ஓவியங்களைப் பார்த்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தனவோ அதேபோன்று இருந்தன. ஆனால், குடமுழுக்குக்குப் பிறகு சென்று பார்த்தபோது, எனக்கு தூக்கிவாரிப்போட்டது. நல்ல நிலையில் இருந்த ஓவியங்கள், சிதைந்து சின்னாபின்னமாகி இருந்தன. 'சுத்தம் செய்கிறேன்' என்ற பெயரில் அதிக ரசாயனங்களைக் கலந்து ஓவியங்களைச் சிதைத்துவிட்டனர். அதைப் பார்க்கும்போது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது.

ஜூ.வி பைட்ஸ்: ஜி.கே.வாசனுக்கு 'நிபந்தனை',  பெரிய கோயிலில் சித்திர'வதை', பெண் சிசுக் கொலை அவலம்!

இப்போது 'அதை சரிசெய்கிறேன்' என்று, ஓவியங்களில் மேலும் ரசாயனங்களைப் பூசுவதற்குத் தயாராகிவருகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நம்மவர்களின் ஓவியக் கலையை உலகுக்குப் பறைசாற்றிக்கொண்டிருக்கும் சோழர் கால ஓவியங்கள் இதனால் முற்றிலுமாக அழிந்துவிடும் அபாயம் உள்ளது. தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இதைத் தடுக்க வேண்டும். துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களைக்கொண்டு, எஞ்சியுள்ள ஓவியங்களையேனும் பாதுகாக்கத்தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்றார் தவிப்புடன்.

"மத்திய தொல்லியல் துறையினர், திட்ட மிட்டே தமிழர்களின் பாரம்பர்யங்களை அழிக்க முயற்சி செய்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகக்கூட இந்த ஓவியங்கள் சிதைக்கப்பட்டிருக்கலாம்" என்று சொல்பவர் களும் உண்டு.

என்னதான் நடக்கிறது? - ஜூனியர் விகடன் செய்திக் கட்டுரையை முழுமையாக வாசிக்க > சித்திர'வதை' - தஞ்சை பெரிய கோயில் வேதனை! https://www.vikatan.com/news/temples/chola-arts-distorted-in-thanjavur-periya-kovil

மீண்டும் துளிர்விடும் பெண் சிசுக் கொலை!

"என்ன சொல்றதுன்னே தெரியல. தோண்டி அந்தக் குழந்தைய எடுத்தப்ப, எந்தச் சிதைவும் இல்லாம அப்படியே தூங்குவதுபோல இருந்துச்சு. பாத்ததும் மனசே நொறுங்கிப்போச்சு!"

- உடைந்து அழும் குரலில் பேசுகிறார், செக்கானூரணி இன்ஸ்பெக்டர் அனித்தா. புதைக்கப்பட்டுவிட்டது என நினைத்த பெண் சிசுக்கொலை மீண்டும் துளிர்விட்டிருப்பது, சமூக ஆர்வலர்களின் நெஞ்சில் சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள புள்ளேரிப்பட்டி கிராமத்தில் பிறந்து 33 நாள்கள் ஆன பெண் குழந்தை ஒன்று, மார்ச் 5-ம் தேதியன்று அதன் தாய், தந்தை மற்றும் தாத்தாவால் எருக்கம்பால் ஊற்றிக் கொல்லப்பட்டிருக்கிறது. குழந்தையைக் கொன்ற வைரமுருகன், சவுமியா மற்றும் வைரமுருகனின் தந்தை சிங்கம் ஆகியோர், இப்போது சிறையில் இருக்கின்றனர்.

ஜூ.வி பைட்ஸ்: ஜி.கே.வாசனுக்கு 'நிபந்தனை',  பெரிய கோயிலில் சித்திர'வதை', பெண் சிசுக் கொலை அவலம்!

30 ஆண்டுகளுக்கு முன்பு, இதே உசிலம்பட்டிப் பகுதியில்தான் பெண் சிசுக்கொலைகள் அதிகளவில் நடந்தன. அதை முதன்முதலில் அட்டைப்பட கட்டுரை மூலமாக வெளியுலகுக்குச் சொன்னது ஜூனியர் விகடன்தான். அதன் பிறகு தன்னார்வ நிறுவனங்கள் அங்கே குவிந்தன. விழிப்புணர்வுப் பிரசாரங்கள் நடந்தன. இயக்குநர் பாரதிராஜா இதை 'கருத்தம்மா' என்ற பெயரில் திரைப்படமாகப் பதிவுசெய்தார். அன்றைய முதல்வர் ஜெயலலிதா, 'தொட்டில் குழந்தை'த் திட்டத்தை அறிவித்தார். இதனால், ஏராளமான பெண் குழந்தைகள் காப்பாற்றப்பட்டன. 'சிங்கப்பெண்ணே...' என்று தமிழகமே பெண்களைப் போற்றும் இந்தச் சூழலில்தான் இப்படியொரு சம்பவம் நடந்து எல்லோரையும் அதிரவைத்திருக்கிறது.

"புள்ளைய வளர்க்கக் கஷ்டமா இருக்குன்னு சொல்லியிருந்தா நான் வளர்த்திருப்பேனே... பாவிமக்க பச்சப்புள்ளையை இப்படிப் பண்ணி ருச்சுகளே..." என்று கதறுகிறார் 80 வயதாகும் பொன்னாத்தா. பிறந்து 33 நாள்களே ஆன குழந்தையை எருக்கம்பால் கொடுத்துக் கொலை செய்த வைரமுருகன்-சவுமியா தம்பதியின் பாட்டிதான் இவர். கேட்பவர் நெஞ்சைக் கொதிக்க வைக்கும் செயலைச் செய்துவிட்டு பேரன், பேத்தியுடன் மகனும் சிறைக்குச் சென்றுவிட்ட நிலையில், அந்தச் சிறிய வீட்டில் தனியாக பேதலித்துக் கிடக்கிறார் பொன்னாத்தா.

- முழுமையான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > மீண்டும் துளிர்விடும் பெண் சிசுக் கொலை! - உசிலம்பட்டி அவலம் https://www.vikatan.com/social-affairs/crime/female-infanticide-in-usilampatti-march-15-2020

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு