Published:Updated:

`தெனாவெட்டாக திரிந்த தாதா மனம்மாறி என்னை வாழ்த்தினார்!’ - நெகிழும் காரைக்குடி டிராஃபிக் போலீஸ் #MyVikatan

விகடன் வாசகர்

``நான் இப்படி ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்வதை சிக்னலுக்கு காத்திருக்கும் பலபேர் செவிமெடுத்துக் கேட்கிறார்கள்''

ராபின்சன் பிலிப்
ராபின்சன் பிலிப்

சார்.. நீங்க போட்டிருக்கும் உடை அழகு, உங்கள் வண்டி அழகு.. நீங்கள் அழகு. ஆனால் நீங்க வண்டி ஓட்டுறதுதான் படுமோசமா இருக்கு…..”

``எல்லைக்கோட்டுக்கு உள்ளே நிக்கிற அந்த மேடத்தை பாருங்க.. சூப்பர்… வாழ்த்துகள் மேடம்..”

`` வேகமா எங்கே சார் போறீங்க..? முதல் பரிசு யாரும் கொடுக்கிறதா சொல்லி இருக்காங்களா..?

ஒரு சாக்லேட் கூட கிடைக்காது.. பொறுமை.. பொறுமை.. வாழ்க்கை ரொம்ப தூரம் சார்..” இப்படி மைக் மூலம் வாகன ஓட்டிகளுக்கு அன்பாகவும் அக்கறையாகவும் பேசி காரைக்குடியில் அசத்தி வருகிறார் ராபின்சன் பிலிப் எனும் போக்குவரத்து தலைமைக் காவலர்.

ராபின்சன் பிலிப்
ராபின்சன் பிலிப்

சாலைவிதிகளை பின்பற்றச் சொல்லி இவர் எடுத்துவரும் `ஆன் தி வே' வகுப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிக்னலுக்குக் காத்திருக்கும் வேளையில் இவரின் சாலை விதி பரப்புரைகளை வாகன ஓட்டிகள் கூர்ந்து கவனிக்கின்றனர். சொல்ல வேண்டிய கருத்துகளை நகைச்சுவை, சினிமா பன்ச், பாடல் வரிகள், புதுக்கவிதைகள், பழமொழிகள் இப்படி கலந்து கட்டி தமிழிலும் ஆங்கிலத்திலும் கலக்கி வருகிறார் இந்த காக்கி உடைக்காரர்.

தேவகோட்டையை சொந்த ஊராகக் கொண்ட இவர் இதற்கு முன்னர் ராணுவத்தில் பணிபுரிந்திருக்கிறார். அதன்பின்னர் 1997-ல் தமிழக காவல்துறையில் சேர்ந்திருக்கிறார். கொட்டும் மழை, கொளுத்தும் வெயில், காது பிளக்கும் வாகனச் சத்தம்… இப்படி நெருக்கடியான பணிச்சூழலைக்கூட எவ்வித டென்சனும் இல்லாமல் இயல்பாய்க் கடந்துவருகிறார். வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டின் அவசியம், சாலை விதிகளின் முக்கியத்துவம் இவற்றை எல்லாம் ஒரு நெருக்கமான நண்பனைப்போல் ஒலிபெருக்கி மூலம் உற்சாகமாய் எடுத்துச்சொல்லி வருகிறார். காரைக்குடி பெரியார் சிலை சந்திப்பில் உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் மத்தியான நேரத்தில் இவருக்கு வாழ்த்துச் சொல்லி பேசத் தொடங்கினோம்.

ராபின்சன் பிலிப்
ராபின்சன் பிலிப்

``ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பு, அவர்களை இழந்து தவிக்கும் உறவினர்களின் தவிப்பு இவை எல்லாம் என் மனதை ரொம்ப பாதிச்சது சார். வாகன ஓட்டிகளுக்கு சாலைவிதிகளைப் பற்றிய முறையான ஞானமும், புரிதலும் இல்லை. ஹெல்மெட்டை வாங்கி வண்டியில் வைத்துக் கொண்டு பயணம் செல்பவர்கள்தான் அதிகம். அது தலைக் கவசம் என்பதையே மறந்துவிடுகிறார்கள். வாகன ஓட்டிகளின் அலட்சியமும், பொறுமை இல்லாததும்தான் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம்.

நான் இப்படி ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்வதை சிக்னலுக்கு காத்திருக்கும் பலபேர் செவிமெடுத்துக் கேட்கிறார்கள். இப்போது ஏராளமான பெண்கள் வாகனங்களை ஓட்டுகின்றனர். நான் சொல்லும் சாலை விதிகளை பெண்களும் இளையோரும் கூர்ந்து கவனிக்கிறார்கள். செய்யும் தவறுகளை அடுத்து நிகழா வண்ணம் பார்த்துக்கொள்கிறார்கள். நான் கடினமான வார்த்தைகளை எப்போதும் உபயோகிப்பதில்லை. அவர்களுக்கு அன்பாய்ச் சொல்லும்போது, அவர்கள் நலனில் அக்கறை கொண்டு சொல்லும்போது அவர்கள் அதை நன்றாக உள்வாங்கிக் கொள்கிறார்கள். விபத்துகள் இல்லா சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.

எதையும் பக்குவமாய்ச் சொல்லும்போது அதை பொதுமக்களும் அன்போடு ஏற்றுக்கொள்கின்றனர்.
டிராஃபிக் போலீஸ் ராபின்சன் பிலிப்

அதற்காகத்தான் நான் பணிக்குச் செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வாகன விதிகளை வலியுறுத்தி என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகளும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். என்னுடைய இப்பணிக்காக இதுவரை 26 விருதுகள் வாங்கி இருக்கிறேன். மாவட்ட அளவிலான காவல்துறை உயர் அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் நான் சாலைவிதிகள் பற்றி எச்சரித்துக்கொண்டிருக்கும் இடங்களுக்கே நேரடியாக வந்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

என்னுடைய இந்த சாலை விதி எச்சரிக்கைப் பணியை செவிமெடுப்போரில் நிறைய பேர் என்னைப் பார்த்து கட்டை விரலை உயர்த்திக் காட்டி புன்னகையுடன் கடந்து செல்வது மனதுக்கு இதமளிக்கிறது. எதையும் பக்குவமாய்ச் சொல்லும்போது அதை பொதுமக்களும் அன்போடு ஏற்றுக்கொள்கின்றனர்.

Representational Image
Representational Image

ஒரு காலத்தில் காரைக்குடியில் பெரிய தாதாவாக வலம் வந்த நபர் ஒருவர், எந்த சிக்னல்களிலும் நிற்பதில்லை. சாலைவிதிகளை மதிப்பதில்லை. தெனாவெட்டாக திரிந்த நபர் அவர். நான் பணியில் நின்று இப்படி எச்சரிக்கை செய்யும்போதும் தன்னுடைய பெரிய புல்லட் வண்டியில் ரெண்டு மூன்று நாள்கள் என்னைக் கடந்துதான் சென்றுகொண்டிருந்தார். அவர் வருவதைப் பார்த்தால் இந்தச் சாலை விதி பாதுகாப்பு யாருக்கு? உனக்கும் உன் குடும்பத்தின் நலனுக்காகவும்தான் என்பதை அந்த நபர் நன்கு புரியும்படி சொல்லிக்கொண்டிருந்தேன். ஒருநாள் தன்னுடைய புல்லட்டை என் அருகில் கொண்டு வந்து நிறுத்தி என் கைகளைப் பிடித்து வாழ்த்துச் சொன்னார். இதுவரை சாலை விதிகளை மதிக்காமல் சென்றமைக்கு வருத்தம் தெரிவித்தார். என்னுடைய குடும்பம், என் உயிர் , சாலைப் பாதுகாப்பின் அவசியம் ஆகியவற்றைப் புரிந்துகொண்டேன் என்று என் கைகளைப் பிடித்துக் குலுக்கியது நான் இப்படி மைக்கில் கத்திய குரலுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகவே கருதுகிறேன்.

நம் வார்த்தையை செவிமெடுத்து நான்கு பேர் விபத்தில்லா வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும் …: என்று சொல்லிவிட்டு மைக்கில் தனது சாலைப் பாதுகாப்பு குரலை ஒலிக்கத் தொடங்குகிறார் ராபின்சன் பிலிப்.

-பழ.அசோக்குமார்