Published:Updated:

``இன்ஜினீயருக்குப் படிச்சிட்டு ஏன் பூக்கடை வெச்சிருக்கன்னா..." சுவாரஸ்யம் பகிரும் குளித்தலை இளைஞர்!

இன்ஜினியர் பூ கடை
இன்ஜினியர் பூ கடை ( நா.ராஜமுருகன் )

வித்தியாசமாக தனது கடைக்கு, `இன்ஜினியர் பூ கடை' என்று பெயர் வைத்துள்ள அவர், கூடவே `கஸ்டமரே துணை' என்று எழுதி, குளித்தலைப் பகுதி மக்களைக் கவர்ந்து வருகிறார். கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் அருகில் இருக்கிறது, அந்த `இன்ஜினியர் பூ கடை!'.

லட்சக்கணக்கில் செலவழித்து, இன்ஜினீயர் படித்த இளைஞர்களில் சிலர், `வேலை கிடைக்கவில்லை' என்றோ `படிப்புக்கேத்த சம்பளம் இல்லை' என்றோ புலம்பும் காலமிது. ஆனால், இன்ஜினீயர் படித்துவிட்டு, தனியார் கம்பெனி ஒன்றில் ரூ.17,000 வரை சம்பளம் வாங்கிய குளித்தலை இளைஞர் ஒருவர், வேலைப்பளு காரணமாக அந்த வேலையிலிருந்து விலகி, பூ விற்பனை, பூ கொண்டு மேடை அலங்காரம் செய்யும் தொழிலில் இறங்கி, மாதம் ரூ 60,000 வரை சம்பாதிக்கிறார். வித்தியாசமாக தனது கடைக்கு, `இன்ஜினியர் பூ கடை' என்று பெயர் வைத்துள்ள அவர், கூடவே `கஸ்டமரே துணை' என்று எழுதி, குளித்தலைப் பகுதி மக்களைக் கவர்ந்து வருகிறார். கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் அருகில் இருக்கிறது, அந்த `இன்ஜினியர் பூ கடை!'.

இன்ஜினியர் பூ கடையில் கார்த்திக்
இன்ஜினியர் பூ கடையில் கார்த்திக்
நா.ராஜமுருகன்

கார்த்திக் என்ற இளைஞர்தான், இப்படி பூக்கடை தொழிலில் கலக்கி வருகிறார். குளித்தலைப் பக்கமுள்ள, தாளியாம்பட்டிதான் கார்த்திக்கின் சொந்த ஊர். தந்தை, தாய், இரண்டு அண்ணன்கள் என எல்லோரும் பூக்கட்டி விற்கும் தொழிலைக் கவனித்து வருகின்றனர். `கார்த்திக்கையாச்சும் இன்ஜினீயராக்கி, வேலைக்கு அனுப்புவோம்' என்று நினைத்து, ஆறு லட்சம் வரை கடன் வாங்கி, அவரை மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்க வைத்திருக்கிறார்கள். ஆனால் இவரோ, வேலையை விட்டுட்டு பூ விற்கும் தொழிலில் இறங்க, குடும்பமே சேர்ந்து கடுமையாக எதிர்த்ததாம்.

தொடர்ந்து நடந்தவை பற்றி, பூக்கட்டும் வேலைக்கு இடையே நம்மிடம் பேசினார் கார்த்திக்.

``நான் 2016-ம் ஆண்டு என்னோட படிப்பை முடிச்சதும், சென்னையில் உள்ள ஒரு டயர் கம்பெனியில் ரூ.15,000 சம்பளத்துக்கு வேலை பார்த்தேன். அப்புறம், 2018-ம் ஆண்டு, ஜனவரி மாதம் கோவையில் உள்ள ஒரு பைப் கம்பெனியில் ரூ.17,000-க்கு வேலைக்குச் சேர்ந்தேன். ஆனால், வேலைப்பளு, மனஉளைச்சல், நல்ல சாப்பாடு இல்லாததுனு வாழ்க்கை ரொம்பவே போரடிச்சது. உடனே, `இங்க இருந்தா நெனச்ச வாழ்க்கையை வாழ முடியாது. அதுக்கு சொந்தமா தொழில் செஞ்சாதான் உண்டு'னு தோணுச்சு. உடனே, வேலையை விட்டுட்டேன். வீட்டுல ஒரே களேபரம்.

கார்த்திக்
கார்த்திக்
நா.ராஜமுருகன்
Vikatan

`உன்னைக் கஷ்டப்பட்டு இன்ஜினீயராக்கினது, இப்படி எங்களை மாதிரி பூக் கட்டுறதுக்கா?. ஒழுங்கா வேலைக்குப் போ'னு அம்மா, அப்பா, அண்ணன்கள்னு எல்லோரும் காச்மூச்னு கத்துனாங்க. சொந்தகாரங்க, ``இப்படி, பூக் கட்டிக்கிட்டு இருந்தா, பொண்ணு கிடைக்காது தம்பி"னு சொன்னாங்க. ஆனால், எதையும் நான் காதுல வாங்கலை. பாரதி, ஹரிஹரன், கோபி இளமுருகன்னு மூணு நண்பர்களைத் துணைக்கு வெச்சுகிட்டு, ஒரு லட்சம் முதலீட்டுல இந்தத் தொழிலைத் தொடங்கினேன். 2018-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம்தான் கடையை ஆரம்பிச்சேன்.

முதல்ல, கண்ணைக் கட்டி காட்டுல விட்டாப்புல இருந்துச்சு. ஆனால், கடைக்கு `இன்ஜினியர் பூ கடை'னு பேர் வெச்சது, பலரையும் கவனிக்க வைத்தது. அதோடு, `கஸ்டமரே துணை'னு போர்டுல போட்டிருந்ததும், பலபேரை என் கடையை ஏறெடுத்துப் பார்க்க வைத்தது. குளித்தலைப் பகுதியைச் சுற்றி, பூ உற்பத்தி நடப்பதால், இங்கேயே ஆரம்பத்துல பூ வாங்க ஆரம்பித்தேன். பிறகு, ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டுல பேசி, தேவைக்கு ஏற்ப பூ வாங்க ஆரம்பித்தேன். மல்லி, முல்லையும் எங்க தோட்டத்திலேயே விளைந்தது. அதனால், மாலை கட்டத் தேவைப்படும் விரிச்சி பூ, கோழிக் கொண்டை பூ, கனகாம்பரம், ரோஜா உள்ளிட்ட மலர்களை ஸ்ரீரங்கம் மார்க்கெட்டுல வாங்க ஆரம்பித்தேன்.

இன்ஜினியர் பூ கடை
இன்ஜினியர் பூ கடை
நா.ராஜமுருகன்

முதல் மாசம் நட்டம்தான் வந்துச்சு. `ஆழம் பார்க்காம காலை வைத்துவிட்டோமோ'னு ஒருகணம் கலங்கிப் போனேன். ஆனால், அடுத்த நொடியே, `என்ன நடந்தாலும் முன்ன வைத்த காலை பின்னே வைப்பதில்லை'னு மனசுக்குள்ள வைராக்கியத்தை வளர்த்துக்கிட்டு, தொழிலைத் தொடர்ந்தேன். அடுத்தடுத்த மாசத்துல லாபம் கிடைக்க ஆரம்பித்து. இப்போ மாதம் ரூ.60,000 வரை லாபம் எடுக்கிற அளவுக்கு தொழில்ல வளர்ந்திருக்கிறேன்.

இதோடு நிற்காமல், அடுத்து நண்பர்களோடு இணைந்து ஹோட்டல், டிராவல்ஸ் மற்றும் கார் பேட்டரிகளுக்குப் பயன்படுத்தும் வாட்டர் தயாரிக்கும் தொழில்களிலும் கால்பதிக்க இருக்கிறேன். அந்தத் தொழில்களிலும் வெற்றிக்கொடி நாட்டுவேன். ஏன்னா, இந்தப் பாதை நானாக விரும்பித் தேர்ந்தெடுத்தது.
கார்த்திக்

ஆரம்பத்துல, மணமக்களுக்குத் திருமண மாலைகள் செய்றது, வளைகாப்பு செய்யப்படும் பெண்களுக்குத் தேவையான ஜடை தாண்டா உள்ளிட்டவற்றை மட்டும் செஞ்சுக்கிட்டு இருந்தோம். ஆனால் இப்போ, திருமண மேடை அலங்காரமும் செய்றோம். அதுக்குத் தேவையான டைசி உள்ளிட்ட ஐந்து வகை பூக்களை பெங்களூரு, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாங்குறோம். திருமண மாலைன்னா, குறைந்தது ரூ.1,500 ல் இருந்து ரூ.15,000 வரையிலான மதிப்பில் தயாரித்து தருகிறோம். அதேபோல், மேடை அலங்காரத்தை குறைந்தது ரூ.5,000 ல் இருந்து அதிகப்பட்சம் ரூ.1,00,000 வரையிலான மதிப்பில் செய்றோம்.

இன்ஜினியர் பூ கடையில் கார்த்திக்
இன்ஜினியர் பூ கடையில் கார்த்திக்
நா.ராஜமுருகன்

தவிர, சுத்துப்பட்டில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கோயில்களில் நடக்கும் பூஜைகளுக்கு எங்க கடையில் இருந்துதான் பூ போகுது. அதிகப்பட்சமா குளித்தலை அய்யப்பன் கோயில் பூஜைக்கு ரூ.60,000 வரை பூ ஆர்டர் கிடைத்தது. அதேபோல், மார்ச் மாதம் நடக்கும் ஒரு திருமணத்துக்கு மேடை அலங்காரம் செய்ய ரூ.86,000 க்கு ஆர்டர் எடுத்திருக்கிறோம். அதேபோல், ஆன்லைன் மூலமா இந்தத் தொழிலைச் செய்ய ஆரம்பித்தபிறகுதான், இவ்வளவு வருமானம் வருது.

சமீபத்தில்கூட சென்னையிலிருந்து இரண்டு ஆர்டர் கிடைத்தது. இரண்டு பெண்களைப் பூ கட்ட வேலைக்கு வைத்திருக்கிறேன். கடையைப் பார்த்துக்கொள்ள ஒருவரை ரூ.6,000 சம்பளத்தில் வேலைக்கு வைத்திருக்கிறேன். தேவைக்கு ஏற்ப பெரிய அளவில் மேடை அலங்கார ஆர்டர் கிடைத்தால், பத்து ஆள்கள் வரை வேலைக்கு நாள் சம்பளத்துக்கு அழைத்துக்கொள்வேன். தவிர, டோர் டெலிவரி பண்ணவும் ஆள் வைத்திருக்கிறேன்.

நான் இன்ஜினீயர் படிச்சுட்டு அதுசம்பந்தமா வேலை பார்த்தப்பகூட, நான் இன்ஜினீயர்னு சொந்தக்காரங்க, நெருங்கிய ஃப்ரெண்ட்ஸ்களைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போ, இன்ஜினியர் பூ கடை வைத்தபிறகு, பலருக்கும் இந்த இன்ஜினியர்ங்கிற வார்த்தை பரீட்சையமாச்சு. இதனால், எனக்குள்ள அளவில்லாமல் தலைமைப் பண்பு வளர்ந்திருக்கு. ஆனால், ஆரம்பத்துல நான் தவறான முடிவெடுத்துவிட்டதாக என்மீது கோபமா இருந்த என்னோட பெற்றோர், நான் கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்ததைப் பார்த்தபிறகு, என்னை இப்போ கோபமா பேசுறதில்லை.

இன்ஜினியர் பூ கடை
இன்ஜினியர் பூ கடை
நா.ராஜமுருகன்

ஆனால், இன்னமும் அவங்களுக்கு என்மீது முழுமையா நம்பிக்கை வரவில்லை. இன்னும் நான்கே மாதத்தில் என் மாத வருமானத்தை ஒரு லட்சத்தை கடக்க வைத்து, என்மீது அவர்களுக்கு 100 சதவிகிதம் நம்பிக்கையை ஏற்படுத்துவேன். இதோடு நிற்காமல், அடுத்து நண்பர்களோடு இணைந்து ஹோட்டல், டிராவல்ஸ் மற்றும் கார் பேட்டரிகளுக்குப் பயன்படுத்தும் வாட்டர் தயாரிக்கும் தொழில்களிலும் கால்பதிக்க இருக்கிறேன். அந்தத் தொழில்களிலும் வெற்றிக்கொடி நாட்டுவேன். ஏன்னா, இந்தப் பாதை நானாக விரும்பித் தேர்ந்தெடுத்தது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு