Published:Updated:

மகளிர் மட்டும்... ஹாட்சீட்... ராதிகா சரத்குமார்... 'கோடீஸ்வரி' ஸ்பெஷல்!

மைவிழி காணும் சின்ன சின்ன கனவுகளை நிறைவேற்றித் தர தயாராகியிருக்கும் கோடீஸ்வரி, வரும் திங்கள் முதல் (வெள்ளி வரை) இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

கோடீஸ்வரி
கோடீஸ்வரி

வீடு வீடாய்ச் சென்று தபால் டெலிவரி செய்யும் போஸ்ட்வுமன், பிறந்ததில் இருந்தே ராசியில்லை என ஒதுக்கப்பட்ட ஒரு பெண், குடும்ப நபர்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துவிட்ட திருமணமாகாத இளம் பெண்... கே. பாலச்சந்தர் படங்களின் பெண் கதாபாத்திரங்கள் அல்ல இவர்கள், நிஜமானவர்கள். இப்படிப்பட்டவர்களே, ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கவுள்ள புத்தம்புதிய 'கோடீஸ்வரி' நிகழ்ச்சியின் ஹாட்சீட்டில் அமர இருப்பவர்கள். மைவிழி காணும் சின்ன சின்ன கனவுகளை நிறைவேற்றித் தர தயாராகியிருக்கும் கோடீஸ்வரி, வரும் திங்கள் முதல் (வெள்ளி வரை) இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

முதன்முறை பெண்கள் மட்டும் பங்கேற்கும் 'கோடீஸ்வரி'

அமிதாப் பச்சன் தொகுத்து வழங்க, ஒட்டுமொத்த இந்தியர்களையும் தொலைக்காட்சியின் முன் கட்டிப்போட்ட நிகழ்ச்சிதான் 'கோன் பனேகா குரோர்பதி (KBC)'. இதைத்தொடர்ந்து பல இந்திய மொழிகளில் பல முன்னணி பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளனர். ஆனால் ஆசியாவிலேயே முதன்முறையாக இந்நிகழ்ச்சியை ஒரு பெண் தொகுப்பாளர் தொகுத்து வழங்கவுள்ளது இதுவே முதன்முறை, 'கோடீஸ்வரி' நிகழ்ச்சி மூலம் இந்தப் பெருமையை தனதாக்கிக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கோடீஸ்வரி
கோடீஸ்வரி

உலகிலேயே முதன்முறையாக பெண்களுக்கான KBC நிகழ்ச்சி 'கோடீஸ்வரி'தான் என்பது இந்நிகழ்ச்சியின் 22 ஆண்டுகால சரித்திரத்தில் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். 'வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடிப்பு, டைரக்ஷன், தயாரிப்பாளர், கிரியேட்டிவ் ஹெட் என 40 ஆண்டுகளாக பல வேலைகளைச் செய்துள்ளேன். ஆனால் ஒரு டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராக முதன்முறை 'கோடீஸ்வரி' மூலம்தான் அடியெடுத்து வைக்கிறேன். பல வேலைகளுக்கு நடுவில்தான் இந்த வாய்ப்பு வந்தது... இருந்தாலும் பெண்களுக்கான முதல் கோடீஸ்வரி என்பதாலும், பெண்களின் கனவுகளை நிறைவேற்ற உதவும் ஒரு களமாகவும் இந்நிகழ்ச்சி இருக்கப்போகிறது என்பதை அறிந்து தொகுப்பாளர் வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன்' என்கிறார் ராதிகா.

சின்ன சின்ன கனவுகளுக்காண களம்...

ஆயிரக்கணக்கான பெண் விண்ணப்பதாரர்களை ஆடிஷன் செய்து இறுதிக்கட்ட கோடீஸ்வரி போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளது கலர்ஸ் தமிழ். 'பெண்களின் ஆசை என்பது எப்போதுமே தங்களுக்கானதாக இருந்ததில்லை. குறிப்பாக குடும்ப உறவுகளுக்கு அதிகம் மதிப்பு கொடுக்கும் இந்தியப் பெண்களின் கனவுகள் எல்லாம் தங்களின் பிள்ளைகள், கணவர், பெற்றோர், உறவினர்கள் என்று அவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதாகவே இருக்கிறது. பிள்ளைகளைப் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும், கணவருக்கு வண்டி வாங்க வேண்டும், தன் குடும்பம் வாழவொரு சிறிய வீடு வேண்டும், வயதான பெற்றோரை கடைசிக் காலத்தில் கவனித்துக்கொள்ள வேண்டும், இப்படிப்பட்ட கனவுகளோடுதான் நகர்கிறது பெண்களின் உலகம். பெண்களின் கனவு சுயநலமானதல்ல, அவர்களின் கனவுகள் நிறைவேற்றப்பட்டால் நாளைய உலகம் இன்னும் சந்தோஷமானதாக மாறிவிடும். அதற்கான களத்தை அமைத்துத் தருவதே முற்றிலும் பெண்களுக்கான 'கோடீஸ்வரி' நிகழ்ச்சியின் நோக்கம். சின்ன சின்ன கனவுகள் சிறகடிக்க உதவ எங்களின் சிறு முயற்சிதான் இது.' எனக் கூறியுள்ளது கலர்ஸ் தமிழ்.

ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்க, பெண்கள் மட்டுமே பங்கேற்க இருப்பதால் கலகலப்பும், உணர்ச்சிகரமான பல சுவாரசிய தருணங்களும் நிறைந்த கலக்கல் காம்போவாக இருக்கப்போகிறது இந்தக் 'கோடீஸ்வரி'. இனி டிசம்பர் 23 முதல், திங்கள் - வெள்ளி, இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பெண்களுக்கான 'கோடீஸ்வரி' நிகழ்ச்சியைக் கண்டுகளிக்கலாம்!