Published:Updated:

மாற்றத்தை ஏற்படுத்திய திறனாளி! கோடீஸ்வரியான கௌசல்யா கார்த்திகா...

காது கேளாமை எனும் கௌசல்யாவின் பின்னடைவே சிறப்பான கவனத்துடன் விளையாட அவருக்கு உதவியது என்றால் கொஞ்சமும் மிகையாகாது.

கௌசல்யா கார்த்திகா தனது முதல் கேள்விக்கே 'ஆடியன்ஸ் போல்' லைஃப்லைனைப் பயன்படுத்தியபோது யாரும் நினைத்திருக்கமாட்டார்கள் அவர் ஒரு கோடி ரூபாயை வெல்வார் என்று... காது கேட்காது, சரளமாகப் பேசமுடியாது, ஆனாலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் 'கோடீஸ்வரி' கேம்ஷோவில் ஒரு கோடி ரூபாய் வென்று, உலகத்திலேயே 'ஹூ வாண்ட்ஸ் டு பி எ மில்லியனர்' போட்டிகளில் வென்ற முதல் பெண் மாற்றுத்திறனாளி என்ற வரலாற்றை உருவாக்கிவிட்டார் இந்த வாவ் பெண்மணி.

பின்னடைவைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டவர்...

கோடீஸ்வரி
கோடீஸ்வரி

மதுரையைச் சேர்ந்த காது கேளாத, வாய் சரிவர பேசமுடியாத கௌசல்யா கார்த்திகா, தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எண்ணினார். தான் சிறுவயதில் படித்த காது கேளாதோர்/வாய் பேசமுடியாதோருக்கான சிறப்புப் பள்ளிக்குத் தன்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் எனவும் நிகழ்ச்சியின்போது தெரிவித்திருந்தார்.

கோடீஸ்வரி
கோடீஸ்வரி

அனைத்து புலன்களும் சிறப்பாக வேலை செய்பவர்கள்கூட, ஹாட் சீட்டில் உட்கார்ந்தவுடன் பதட்டத்தில் பல தவறுகளைச் செய்வதுண்டு... கௌசல்யாவிடமும் முதலில் அந்தத் தடுமாற்றம் காணப்பட்டது, முதல் கேள்விக்கே லைஃப்லைனைப் பயன்படுத்தி, பார்ப்போருக்குக் கொஞ்சம் அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அடுத்தடுத்த கேள்விகளுக்கு நிதானித்து பதில்களைக் கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மணித்துளிகள் கரையும் டைமரின் சத்தமும், பதட்டத்தை உருவாக்கும் பின்னணி ஓசையும் விளையாடுபவரின் மன ஒருமையை ஏதாவது ஒரு நொடிப்பொழுதில் ஆட்டி அசைத்துவிடும். ஆனால் காது கேளாமை எனும் கௌசல்யாவின் பின்னடைவே சிறப்பான கவனத்துடன் விளையாட அவருக்கு உதவியது என்றால் கொஞ்சமும் மிகையாகாது.

மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வரும் கௌசல்யாவின் பாதை அசாத்தியமானது. சிறப்புப் பள்ளியில் பயின்றபோது அவர் படிப்பில் காட்டிய ஆர்வத்தாலும் முன்னேற்றத்தாலும் சாதாரண பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள சக மாணவர்களுடனும் ஆசிரியருடனும் எளிதில் பேசமுடியாது, தான் சொல்ல நினைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் எழுதிக்காட்டுவார். பள்ளி-கல்லூரி நாட்கள் முழுக்க இப்படித்தான்! தமிழ்வழிக் கல்வியில் பயின்ற கௌசல்யா ஆங்கிலம் கற்க ஆரம்பித்ததே கல்லூரியில்தான், இன்றோ மூன்று பட்டப்படிப்புகள் படித்து முடித்துவிட்டார்!

வாய்ப்பு, அதுதானே எல்லாம்!

கோடீஸ்வரி
கோடீஸ்வரி

ராதிகா சரத்குமார் ஒரு கோடி ரூபாய்க்கான பதினைந்தாவது கேள்வியைக் கேட்க, தனக்கு அதற்கான பதில் தெரியவில்லை என ஒப்புக்கொண்ட கௌசல்யா, தன்னிடம் இருந்த கேள்வியை மாற்றிக்கொள்ளும் லைஃப்லைன் எனும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். இலக்கியம் சார்ந்த கேள்வியைத் தேர்ந்தெடுத்து, அதற்கான பதிலைச் சொல்லி ஒரு கோடி ரூபாயைத் தன் வசமாக்கிக்கொண்டார். கோடீஸ்வரி நிகழ்ச்சி தந்த வாய்ப்பு போலவே,கௌசல்யா எனும் மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்குக் கல்வி எனும் வாய்ப்பு கிடைத்தது. தன்னைச் சூழ்ந்தவர்களின் ஊக்கத்தோடு, மிகவும் சிரமப்பட்டு அந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டார் கௌசல்யா, அதனால்தான் அவரால் வாழ்விலும் கோடீஸ்வரியிலும் ஜெயிக்க முடிந்தது.

பெண்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் கல்வியையும் முறையான வாய்ப்புகளையும் வழங்கினால், அவர்களாலும் எந்த உயரத்தையும் தொடமுடியும் என கௌசல்யா கார்த்திகாவின் வெற்றி மூலம் மீண்டும் ஒருமுறை இந்த உலகத்துக்கு உணர்த்திவிட்டது கலர்ஸ் தமிழின் 'கோடீஸ்வரி'.

கோடீஸ்வரி நிகழ்ச்சியை திங்கள் - வெள்ளி, இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கண்டுகளிக்கலாம், Voot ஆப்பிலும் இந்நிகழ்ச்சியைக் காணமுடியும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு