Election bannerElection banner
Published:Updated:

`பெர்ஃபெக்ட்' எதிர்க்கட்சி எம்.எல்.ஏ! - மீண்டும் மதுரை மத்திய தொகுதியில் PTR பழனிவேல் தியாகராஜன்

PTR பழனிவேல் தியாகராஜன்
PTR பழனிவேல் தியாகராஜன்

முதல்வன் படத்தில் மக்கள் தங்களின் குறைகளைச் சொல்ல, புகார் பெட்டி வைப்பார் அர்ஜூன். `இதெல்லாம் உண்மையில் நடக்காதா' என்று நீங்களும் நினைத்திருப்பீர்கள்.

மதுரையில் இது நடந்திருக்கிறது. மதுரை மத்திய தொகுதியின் (மதுரை சென்ட்ரல்) திமுக எம்.எல்.ஏ.வான PTR பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதியில் 25 இடங்களில் புகார் பெட்டிகளை நிறுவி, கடந்த 5 ஆண்டுகளாக 2700 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். சமீபத்தில் `தமிழ்நாட்டின் சிறந்த 10 சட்டமன்ற உறுப்பினர்'களுள் ஒருவர் என்ற எழுச்சி விருதுகளின் அங்கீகாரம் இவருக்குக் கிடைத்துள்ளது. மீண்டும் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் முனைவர் PTR பழனிவேல் தியாகராஜன் ஆற்றிய பணிகள் என்ன?

மூன்றாம் தலைமுறை அரசியல்வாதி.

சட்டமன்றத்திற்கும் PTR குடும்பத்திற்குமான தொடர்பு மிக நீண்ட வரலாறு கொண்டது. 1921ஆம் ஆண்டு சமூகநீதியை முன்னிறுத்திய `நீதிக்கட்சி' சென்னை மாகாணத் தேர்தலில் போட்டியிட்டு வென்றபோது சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற PT.ராஜன்-ன் பேரன்தான் PTR பழனிவேல் தியாகராஜன். கொறடாவாக, அமைச்சராக செயல்பட்டு அறநிலையத்துறைச் சட்டம் போன்ற பல முக்கிய சட்டங்கள் கொண்டு வரவும், கூட்டுறவுத்துறையை மேம்படுத்தவும் முக்கிய பங்காற்றியவர் PT ராஜன். அவரது காலத்திற்கு பின் அவரின் மகன் PTR பழனிவேல் ராஜன் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சபாநாயகராக பதவி வகித்தவர். இந்த வரிசையில் PTR பழனிவேல் தியாகராஜனும் தற்போது மக்கள் பணியாற்றி வருகிறார்.

`பெர்ஃபெக்ட்' எதிர்க்கட்சி எம்.எல்.ஏ! - மீண்டும் மதுரை மத்திய தொகுதியில் PTR பழனிவேல் தியாகராஜன்

கடந்த 5 வருடங்களில் இவர் செய்தது என்ன?

* சேட்டிலைட் மூலம் தண்ணீர் இருப்பை அறிந்து 41 போர்வெல்கள் மற்றும் தொட்டிகளைத் தேவைப்படும் இடங்களில் நிறுவியுள்ளார்.

* 72 புதிய பேவர்பிளாக் மற்றும் தார்ச்சாலைகள் அமைத்துத் தந்துள்ளார்.

* பாழடைந்த பழைய கட்டடங்களுக்கு மாற்றாக 4 புதிய நியாய விலைக் கடைகளைக் கட்டித் தந்துள்ளார்.

* ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நவீன ஸ்கேன் கருவிகள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கியுள்ளார்.

* தன் தொகுதியில், எளிய மக்கள் தங்கள் இல்ல நிகழ்வுகளை நடத்த 2 சமுதாயக் கூடங்களைக் கட்டித் தந்துள்ளார்.

* கண் சிகிச்சை, பொது சிகிச்சை & டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

* 5 பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள், புதிய கழிவறைகள், 13 அங்கன் வாடி கட்டடங்கள் கட்டியதோடு, மாணவர்கள் பயன்பெற தமிழ், ஆங்கில செய்தித்தாள், பொது அறிவு புத்தகங்கள் மற்றும் செய்முறை ஏடுகளை இலவசமாக வழங்கி வருகிறார்.

* தனிநபர் அட்டைக்கு நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்காமல் அரசு திடீரென நிறுத்தி வைத்தது குறித்து சட்டசபையில் இவர் கேள்வி எழுப்பிய பின், அடுத்த நாளே அவர்களுக்கு மறுபடியும் பொருட்கள் வழங்க ஆணையிட்டது தமிழக அரசு.

இவைபோல. இவர் செய்த பல விஷயங்களைக் குறிப்பிட முடியும்.

ஆளும் கட்சியைக் கேள்விகளால் துளைக்கும் எதிர்க்கட்சியின் குரல்!

சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடுவதில்லை PTR பழனிவேல் தியாகராஜன். போக்குவரத்து நெருக்கடி, சுகாதாரப் பிரச்னை, மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாக ஏற்படும் இடநெருக்கடி, நகரமயமாக்கலால் ஏற்படும் இதர பிரச்சனைகள், மேம்படுத்தப்பட வேண்டிய உட்கட்டமைப்பு வசதி குறித்து பல விஷயங்களைச் சுட்டிக்காட்டி அதற்கு அரசைத் தக்க நடவடிக்கைகள் எடுக்க வைத்த பெருமை இவருக்குண்டு.

* ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடங்கி உரையாற்றும் வாய்ப்பைத் திமுக தலைமை இவருக்கே வழங்கிவருகிறது. 2016, 2017, 2018, 2019, 2020 ஆண்டுகளில் சரிந்து வரும் தமிழக நிதிநிலைமை, பல மடங்கு அதிகரித்துள்ள கடன்சுமை, அதனால் மக்களுக்கு நலன் பயக்கும் புதிய நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலையைச் சட்டமன்றத்தில் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறியவர். குற்றம் சாட்டுவதோடு நில்லாமல் அதை சீர் செய்யவும் ஆலோசனைகள் வழங்கிவருகிறார்.

* சரிந்து வரும் தமிழகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த இவரின் முயற்சிக்கு பலனாக தற்போது அரசு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது.

`பெர்ஃபெக்ட்' எதிர்க்கட்சி எம்.எல்.ஏ! - மீண்டும் மதுரை மத்திய தொகுதியில் PTR பழனிவேல் தியாகராஜன்

* 14 தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்காக பட்டதாரிகள், எம்பிஏ, இன்ஜினீயரிங் போன்ற மேற்படிப்பு படித்தவர்கள் உள்ளிட்ட 4600 பேர் விண்ணப்பித்ததை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர். இந்தளவு வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருப்பதைச் சுட்டிக் காட்டி, இந்த நிலையை மாற்ற அரசு எப்படி பொறுப்புடன் வருவாயைப் பெருக்கி அதனைப் பொதுமக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதை எடுத்துக் கூறியவர்.

* நீட் தேர்வுக்குப்பின் மருத்துவக் கல்வி மாணவர்கள் சேர்க்கையின்போது இரட்டை இருப்பிடச் சான்றிதழ் குளறுபடி காரணமாக தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை வேற்று மாநிலத்தவர்கள் தட்டிச் சென்றனர். இது குறித்து இவர் அவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த பின், அந்த விவகாரத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மருத்துவக் கல்லூரி சேர்க்கை விதிகளில் அரசு மாற்றம் கொண்டுவந்தது.

* மத்திய மதுரை தொகுதிக்குட்பட்ட சுப்பிரமணியபுரம், ஜெய்ஹிந்த்புரம் பகுதிகளிலிருந்து, மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பழங்காநத்தம் இணைக்கும் மேம்பால பணிகள் 7 ஆண்டுகளாக நிறைவடையாமல் இருப்பது குறித்து நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

* மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டதா? கையகப்படுத்தி இருந்தால் அதனை இந்திய விமானநிலைய ஆணையத்திடம் அரசு எப்போது ஒப்படைத்தது? போன்ற கேள்விகளை எழுப்பி, அமைச்சருடன் இது குறித்த விவாதத்தில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டின் அவசியம் பற்றி எடுத்துரைத்தவர்.

* 2018 ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று, மத்திய அரசின் கூட்டாட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளை எதிர்த்து மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்.

* மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலை நிரந்தரமாகத் தீர்க்க மெட்ரோ சிஸ்டம் (Metro System) மற்றும் அர்பன் மாஸ்டர்பிளான் (Urban Master Plan) உருவாக்க வேண்டும் வலியுறுத்தி வருகிறார்.

* மதுரை காந்தி மியூசியத்திற்கு அரசிடமிருந்து வழக்கமாக வர வேண்டிய நிதி உதவி பல ஆண்டுகளாக வராமல் நிலுவையில் இருந்தது. இது குறித்து இவர் சட்டசபையில் பேசிய பின்னர், அதன் பலனாக பல ஆண்டு நிதி பாக்கியை உடனடியாக வழங்கிட அரசு உறுதி அளித்தது.

இவ்வாறு கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி பிரச்னைகளை சட்டமன்றத்தில் முன் வைத்து பலவற்றிற்கு தீர்வு கண்டதோடு, மாநில உரிமைகள், சமூகநீதி, தமிழ்நாட்டின் நிதிநிலை போன்ற மாநில அளவிலான முதன்மையான பிரச்சனைகளை சட்டமன்றத்தில் முன்வைத்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

திமுக ஆட்சி அமையும் பட்சத்தில் மாநில அமைச்சரவையில் PTR பழனிவேல் தியாகராஜன் கண்டிப்பாக இடம்பிடிப்பார் என்று தொகுதி மக்கள் கூறுகின்றனர். சட்டமன்ற உறுப்பினராக தனக்கு வாய்ப்பளித்த மதுரை மத்திய தொகுதி மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும், 3 தலைமுறைகளாக மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் கறைபடாத கரங்களுக்கு சொந்தமான PTR குடும்பத்தின் நன்மதிப்பைக் காப்பாற்றும் வகையிலும் பணியாற்றி வரும் பழனிவேல் தியாகராஜனுக்கு இதனால் மீண்டும் மதுரை மத்திய தொகுதியில் ஆதரவு பெருகி வருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு