Published:Updated:

`எங்க கஷ்டத்த உணர்ந்து உதவி செஞ்சிருக்கீங்க!' -150 குடும்பங்களை நெகிழவைத்த முகம்தெரியாத 80 நண்பர்கள்

உதவிய இளைஞர்கள்
உதவிய இளைஞர்கள் ( என்.ஜி.மணிகண்டன் )

மதுரை தத்தனேரி, கணேசபுரம் பகுதியில், பாட்டில்களைப் பொறுக்கி, உதிரியான வேலைகளைச் செய்து அந்த வருமானத்தில் வாழ்ந்து வந்த 150 குடும்பத்தினர் கொரோனா ஊரடங்கால் ரொம்பவும் கஷ்டப்பட்டு வருவதை அறிந்து அவர்களுக்கு உதவத் திட்டமிட்டனர்.

``நாங்க எல்லோரும் பழைய பாட்டிலை பொறுக்கி எடைக்கு போட்டு, அதுல வர்ற காசுல அன்னாடம் குடும்பம் நடத்தறவங்க... ஒரு நாளைக்கு 100 ரூபாய் கிடைக்குறதே பெருசு... இப்ப அதுவும் இல்லாம தவிச்சுட்டு இருந்த எங்களுக்கு இம்புட்டு பொருள்களை பசங்க நீங்க கொண்டாந்துருக்கீங்க. எங்களுக்கு உதவி செஞ்ச உங்க எல்லாருக்கும் நன்றி" என்று நிவாரணப் பொருள்களை வாங்க வந்தவர் உணர்ச்சிகரமாகப் பேசியது, உதவி செய்த இளைஞர்களைக் கலங்க வைத்தது.

நிவாரண உதவி
நிவாரண உதவி

கல்லூரி மாணவர்கள், ஐ.டி உட்பட தனியார் துறையில் வேலை செய்யும் இளைஞர்கள் இணைந்து `படிக்கட்டுகள்' என்ற அமைப்பைத் தொடங்கி, மதுரை, சென்னை என்று அவர்கள் வேலை செய்யும் ஊர்களில் எல்லோரும் பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகினறனர்

பல்வேறு இயற்கைப் பேரிடர் உட்பட எந்த பாதிப்பு ஏற்பட்டாலும், பண்டிகை என்றாலும் ஆதரவற்றோர், முதியோர், காப்பக குழந்தைகள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் என கவனிக்கப்படாதவர்களைத் தேடிப்பிடித்து உதவுவதே இவர்களின் பணி. பெரும்பாலும் தங்கள் ஊதியத்தில் ஒரு பகுதியை இதற்காக செலவு செய்யும் இவர்கள், அதிகமாகத் தேவைப்படும்போது சமூக ஊடகங்களில் வெளிப்படையாக தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் உதவி பெற்று உதவுகிறார்கள். அதற்கான பில்களை உடனே அனுப்பி வைக்கிறார்கள்.

உதவிய இளைஞர்கள்
உதவிய இளைஞர்கள்
என்.ஜி.மணிகண்டன்

அந்த வகையில்தான் மதுரை தத்தனேரி, கணேசபுரம் பகுதியில், பாட்டில்களைப் பொறுக்கி, உதிரியான வேலைகளைச் செய்து அந்த வருமானத்தில் வாழ்ந்து வந்த 150 குடும்பத்தினர் கொரோனா ஊரடங்கால் ரொம்பவும் கஷ்டப்பட்டு வருவதை அறிந்து அவர்களுக்கு உதவ திட்டமிட்டனர். ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வீதம் 150 குடும்பங்களுக்கு ரூ.1,50,000 தேவைப்பட்டது.

உடனே `படிக்கட்டுகள்' இளைஞர்கள் தங்களுடைய ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் பகிர்ந்தனர். ஒரு குடும்பத்துக்கு ஒரு நபரோ, அல்லது இரண்டு நபர்கள் இணைந்தோ உதவ முன்வரலாம் என்று தெரிவித்ததால் ஒரே வாரத்தில் 80 நண்பர்கள் மூலம் 150 குடும்பத்துக்குத் தேவையான நிதி கிடைத்தது. உடனே, ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை அவர்கள் வசிக்கும் இடத்துக்கே சென்று மிகவும் பாதுகாப்பான முறையில் வழங்கினார்கள்.

நிவாரண உதவி
நிவாரண உதவி

``யாருமே எங்களைக் கண்டுகொள்ளாத நிலையில, சின்னப்பசங்க நீங்க எங்க கஷ்டத்த உணர்ந்து, நாங்க எதிர்பார்க்காத அளவுக்கு உதவி செஞ்சிருக்கீங்க, நல்லா இருப்பீங்க....'' என்று அந்த எளிய மக்கள் `படிக்கட்டுகள்' இளைஞர்களைப் பாராட்டினர். அந்த உற்சாகத்தோடு உதவி போய்ச்சேராத மக்களை அடுத்ததாகத் தேடி கிளம்பிவிட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு