`உங்க லக்கேஜில் துப்பாக்கி இருக்கு..!' - பிரான்ஸ் ஏர்போர்ட் திக் திக் அனுபவம் #MyVikatan

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்புபவர்கள் கோட் சூட்டில்தான் வந்திறங்க வேண்டும் என்பது எங்கள் ஊரின் எழுதப்படாத விதி..!
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
பயணம் என்றாலே பலருக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்ளும். கார், பஸ் தொடங்கி ரயில்வண்டி, விமானம் என நாம் போகும் வாகனத்துக்கும் தூரத்துக்கும் ஏற்ப பரபரப்பின் அளவும் கூடும். உடைமைகளின் எடையை சரிபார்ப்பது, சுங்கச் சோதனை, வெளிநாடு என்றால் குடியுரிமைச் சோதனை என விமானப் பயணம் பரபரப்பின் உச்சம். அத்துடன் பழக்கமின்மையும் அறியாமையும் சேர்ந்துகொண்டால் இன்னும் திண்டாட்டம். இது போதாதென்று நம்மவர்களுக்கு டெல்லி அல்லது மும்பையிலிருந்தே மொழிப் பிரச்னையும் சேர்ந்துகொள்ளும்.

பிரான்ஸ் வந்து ஒரு வருடம் கழித்து முதல் முறையாக ஊர் திரும்புகிறேன்... வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்புபவர்கள் கோட் சூட்டில்தான் வந்திறங்க வேண்டும் என்ற எங்கள் ஊரின் எழுதாத விதியின் பொருட்டு நண்பன் ஒருவனுடன் பாரீஸ் மாநகரெங்கும் கோட் சூட்டுக்காக அலைந்தேன். ஆரம்பகால வடிவேலு போன்ற எனது அன்றைய உடல்வாகுக்கு ஐரோப்பிய அளவு கோட்டுகள் பொருந்தவில்லை. ஒருவழியாக ஏதோ ஒரு கடையில் என் அளவு கோட் கிடைத்தது.
என் அளவு என்பதைவிட, " இந்த கோட்டில் நீங்கள் அச்சு அசல் ழாக் சிராக் போல இருக்குறீர்கள் முசியே! " என கடைக்காரி மைனஸ் டிகிரி குளிரிலும் டன் கணக்கில் ஐஸ் வைத்து என் தலையில், இல்லையில்லை என் உடம்பில் கட்டிவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் அந்த கோட் பெரியது. ழாக் சிராக் அன்றைய பிரான்சின் ஜனாதிபதி. இரண்டு மீட்டரை தொடும் உயரத்துக்கு ஆஜானுபாகுவான மனிதர். நானோ தென்னிந்தியர்களின் சராசரி அளவைவிடவும் சிறியவன். அன்று அவள் சொன்னதில் நானும் உச்சி குளிர்ந்தேனே... என்னத்த சொல்ல.

அம்மாவுக்கு, அப்பாவுக்கு, தம்பிக்கு, பாட்டிக்கு, சித்திகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு, நண்பர்களுக்கு எனப் பட்டியலிட்டு பரிசுப் பொருள்கள் வாங்கியதில் பெட்டிகளின் கணம் அதிகமாகிவிட்டது. அனுமதிக்கப்பட்ட 40 கிலோவைத் தாண்டி இன்னும் அதிகமாக 20 கிலோ...
பெட்டியை எடை பார்க்கும் இடத்திலேயே பிரச்னை ஆரம்பம்.
20 கிலோவை கழித்தே ஆக வேண்டிய கட்டாயம். அப்படிச் செய்தால் ஒரு சித்திக்குக் கொடுத்த பொருள் இன்னொரு சித்திக்கு இல்லாமல் பூகம்பம் வெடிக்கும் கூட்டுக்குடும்ப அபாயம்.
"பரவாயில்லை... அவங்க முன்னாடி எடுத்துடு... அப்புறமா கைப்பையில வச்சிக்கலாம்!"

முன் அனுபவமிக்க நண்பர்களின் யோசனை.
பயண நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது... கைப்பையிலோ ஏற்கெனவே கணம் அதிகம். இதில் எங்கே இன்னொரு 20 கிலோவை திணிப்பது?!
முடிந்தமட்டும் திணித்து, கோட் பாக்கெட்டுகளிலெல்லாம் பொருள்களை நிரப்பிக்கொண்டு, வழியனுப்ப வந்திருந்த தாத்தாவின் முன்னால் படுடென்ஷனாய் சட்டென குனிந்து அவரின் கால்களைப் பட்டென தொட்டு வணங்கினேன்.
"கோட்டும் சூட்டுமா விரைப்பா தாத்தாவோட காலுக்கு சல்யூட் வச்சீங்களே தம்பி..." கூட வந்திருந்த சித்தப்பாவின் நண்பர் இன்றுவரை சொல்லிக்காட்டி கடுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்.
அடுத்ததாகப் பெட்டிகளைச் சோதனையிடும் படலம்...
"கைத்துப்பாக்கி வைத்திருக்கிறீர்களா..?!"
ஸ்கேனரில் அமர்ந்திருந்த பெண் அதிகாரி சலனமற்ற முகத்துடன் கேட்க, எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
நொண்டிக்குதிரையாக இருந்தாலும் பரவாயில்லை, கொஞ்சம் கற்பனைக் குதிரையில் ஏறுங்கள்.

…பங்க் கிராப்பும் வழியும் மீசையுமாய், கறுப்பாய், ஒல்லியாய், அவன் உருவத்துக்குக் கொஞ்சமும் பொருந்தாத நான்கு பட்டன் பிளேசர் கோட் அணிந்த இளைஞன். மேல்கீழ் பாக்கெட்டுகளிலெல்லாம் ஏதேதோ பொருள்களுடன் பிதுங்கிய கோட் ஏற்ற இறக்கமாகத் தொங்கிக்கொண்டிருக்கிறது. பெட்டியில் துப்பாக்கி..!
"இ... இல்லையே!"
"இருக்கிறதே!"
மானிட்டரை பார்த்தபடி அவள் அழுத்திக் கூற, என் கை கால்கள் தந்தியடிக்கத் தொடங்கின!
"இ... இருக்க முடியாது..."
"உங்கள் பெட்டியில் இருக்கிறது முசியே... இதோ இங்கே!"
மணிரத்னம் பட வசனம்போல ஓடிக்கொண்டிருந்த உரையாடலை முடிக்க விரும்புபவள்போல கடுமையாய் கூறி, என் பெட்டியின் ஒரு பகுதியை அழுத்தியபடி, மானிட்டரை என் பக்கம் திருப்பினாள். சென்ட், சோப்பு, சாக்லேட், விளையாட்டுப் பொருள்கள் என அனைத்தும் குழம்பி கறுப்புவெள்ளையாய் தெரிந்த அந்த ஸ்கேனர் காட்சியில் தெளிவாய் ஒரு துப்பாக்கி வடிவம்.
என் கண்கள் இருண்டு காதுகள் அடைத்தன.
"படிச்சி பெரியாளா வருவான்னு பிரான்ஸ் அனுப்புனா... பாவி, ஆயுதம் கடத்தி மாட்டிக்கிட்டானே..."
என் குடும்பத்தினரின் தமிழ் சினிமா புலம்பல் அசரீரியாய் காதுகளில் ஒலித்தது.

"இனி அவன் நம்ம வீட்டு வாசலை மிதிக்கக் கூடாது ஆமா."
சொம்பு தண்ணீரைக் குடித்துவிட்டு, துண்டை உதறியபடி குடும்ப நாட்டாமை தாத்தா தீர்ப்பு வாசிக்கும் காட்சி மனதை உலுக்கியது.
காலம், சத்தியம் பண்ண குழந்தையைத் தாண்டும் பாக்யராஜ் பட கதாநாயகியின் கால்களைப்போல ஸ்லோ மோஸனில் வழுக்க, கைகள் நடுங்க பெட்டியைத் திறக்க எத்தனித்தபோது அடுத்த சிக்கல் ஆரம்பம். இரண்டு பெட்டிகள், கைப்பைகள் என அனைத்துப் பூட்டுகளின் சாவிகளும் ஒரே சாயல். பயத்திலும் பதற்றத்திலும் எது எந்த பூட்டுக்கான சாவி என்பதில் தடுமாற்றம்.
"உங்கள் பெட்டிதானே ? சீக்கிரம்..."
அதிகாரியின் அதட்டல்.
"பாரு ! சாவிகூட இல்லை... ஏதாவது கடத்தலா இருக்கும்!"
ஒற்றைத் தோள்பையுடன் ஒரு வாரத்துக்கு இந்தியா கிளம்பிய நடுத்தர வயது பிரஞ்சு ஜோடி எனக்குப் பின்னாலிருந்து புலம்பியது!
ஒருவழியாகத் திறந்தேன்.
"இதோ!"
எனக்கு முன்னரே என் பெட்டியில் கைவிட்ட அதிகாரி அதை எடுத்து என் முகத்துக்கு நேராக நீட்டினாள்.
அந்தப் பொருளைப் பார்த்ததும் அதுவரையில் ஓடிய பேதாஸ் சீன் மாறி பாரதிராஜா பட வெள்ளுடை தேவதைகள் என்னைச் சுற்றி லலலா பாடத் தொடங்கினார்கள் ! அது ஏனோ பிரான்ஸ் ஏர்போர்ட்டிலும் என் கற்பனையில் பாரதிராஜா பெண்கள்தான்.

அனைவருக்கும் பரிசுப்பொருள்கள் வாங்கிய நான், நண்பர்களுக்காக விதவிதமாய் சிகரெட் லைட்டர்கள் வாங்கியிருந்தேன்... அவற்றில் ஒன்று அச்சு அசலாய் துப்பாக்கியைப்போல.
100 அடிக்கு முன்னால் போலீஸைக் கண்டாலே காரணமில்லாமல் கால்கள் நடுங்கும் "ரொம்ம்ம்ப பயந்த" பையன் நான். அப்படிப்பட்ட என்னிடம் துப்பாக்கி வைத்திருக்கிறாயா எனக்கேட்டதும் அனைத்தும் மறந்து தொலைந்ததால் வந்த வினை.
"பாருங்கள் ! சொன்னேனில்லையா..?"
"முசியே என்ன செய்கிறீர்கள்? இங்கு நெருப்புக் கொளுத்தக்கூடாது என்று தெரியாதா? சரி சரி ! நீங்கள் கொண்டு செல்லலாம்..."
அதீதமான ஆர்வக்கோளாறில் அந்த லைட்டரை பெண் அதிகாரியின் முகத்துக்கு நேராகக் கொளுத்திக்காட்ட, அடுத்த அலம்பல் !

பதற்றமாய் விலகி கூறியவளிடம் பெரிய கும்பிடாய் போட்டுவிட்டு,
"நீயே வைத்துக்கொள்" என்றேன் !
"நோ, நோ! எனக்குத் தேவையில்லை."
கேட்காமலேயே எடுத்துக்கொள்ளும் நம் ஊரின் சில அதிகாரிகளைப்போல் இல்லாமல் அவள் பதற, தலையைச் சுற்றாமல் பக்கத்திலிருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டேன்.
இன்று நினைத்தாலும் "உஸ்ஸ்... அப்பாடா..." என வடிவேலுவைப்போலவே தலையை உலுக்கிக்கொள்வேன். இந்தச் சம்பவம் நடந்தது 20 வருடங்களுக்கு முன்பு. அதுவே பாதுகாப்பு கெடுபிடிகள் தூள் பறக்கும் இன்று நடந்தால்...
"ஒரு நிமிடம் முசியே..."

மெல்லிய சிரிப்புடன் பெண் அதிகாரி இன்ட்டர்போனை உசுப்பியிருப்பாள். அடுத்த ஓரிரு நிமிடங்களில் சென்ட்ரல் போலீஸும் ராணுவமும் இணைந்த பாதுகாப்புக் குழு காவலர்கள் பாய்ந்து வந்து என்னை குப்புறத்தள்ளி விலங்கு பூட்டியிருப்பார்கள்.
பி.கு ! : சில நாள்களுக்கு முன்னர் பணி சார்ந்த பயிற்சி வகுப்பு ஒன்றுக்காக கோட் அணியும் தேவை ஏற்பட்டது...
"வாவ் ! உனது உடலமைப்புக்கு பொருந்தும்படியான மாடலில், கலரில் மிக அழகாக இருக்கிறது!"
என்னுடன் பணிபுரியும் பெண் சிலாகித்தாள் ! அவள் சிலாகித்தது என் கோட்டை மட்டும்தான்!
அனுபவமும் காலமும் உடை தேர்வு பற்றிய என் ரசனையை எவ்வளவோ மேம்படுத்தியிருந்தாலும், மேற்கூறிய சம்பவத்திலிருந்து இன்றுவரை விமான பயணத்துக்கு ஜீன்ஸ் டீ சர்ட்தான் !
- காரை அக்பர்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.