Published:Updated:

நம்மை இயக்கும் ஒரு எஜமான்! - வாசகர் பகிர்வு #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

"தொழில்நுட்பம், ஒரு மிகச்சிறந்த வேலையாள். ஆனால் அதே சமயம், மிக ஆபத்தான எஜமான் !" - Lous Lange

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

உள்ளங்கைக்குள் உலகம் என்ற cliche' மொழி முழுவதுமே மெய்யாகிவிட்ட ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தோராயமாகக் கடந்த 50 ஆண்டுகளுக்குள் வந்த விஞ்ஞான கதைகள் மற்றும் படங்களில் சொல்லப்பட்ட அல்லது யூகிக்கப்பட்ட பெரும்பாலான தொழில்நுட்பங்கள் இன்று நடைமுறைக்கு வந்தேவிட்டன.

இந்த நொடிகூட பல புது பொழுதுபோக்குத் தொடர்களும் படங்களும் உலகம் முழுவதும் பார்க்கப்பட்டுக்கொண்டும் பேசப்பட்டுக்கொண்டும், விவாதிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன பல லட்சம் மனிதர்களால். (இந்தக் கட்டுரையை எப்போது படித்தாலும் பொருந்துகிற விஷயம் இது).

Representational Image
Representational Image
Credits : Pixabay

பொழுதுபோக்கு என்பது பொழுதைப் போக்குவதற்காக, அதுவும் உழைத்து களைத்துப்போன மனித சமுதாயத்தின் ஓய்வுக்காகத் தானாகச் சிறிது சிறிதாக வடிவமைத்துக் கொள்ளப்பட்ட ஒரு மரபு சார்ந்த நிகழ்ச்சி...

இது எங்கிருந்து தொடங்கியிருக்கும் என்று பார்த்தால்... கண்டிப்பாக மனிதன் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்த காலம் தொட்டு தோன்றிய எண்ணங்களின் வழியாக விதைக்கப்பட்டிருக்கும். பொழுதைப் போக்க இவன் செய்த செயல்கள்தான் இன்றைய நாகரிகத்தின் முன்னோடி, கூட்டு சமுதாய வாழ்வின் அடித்தளம் என்றுகூட கூறலாம். பேச்சாக, பாட்டாக, கதையாக, கவிதையாக, வேட்டையாக, விளையாட்டாக, கூத்தாக.. ஏன், இன்றைய உலகை ஆளும் தொழில்துறை சாம்ராஜ்ஜியங்கள்கூட பொழுபோக்குக்காகத் தொடங்கப்பட்டு காலத்தால், பரிணாம வளர்ச்சிகளுக்கு உட்பட்டு வளர்ந்த பயணமே..

Representational Image
Representational Image
Credits : Pixabay

ஆனால், கால ஓட்டத்தில் எண்ணங்களின் மாற்றத்தில் வாழ்க்கையை நாம் வேறாகப் புரிந்துகொண்டு தனி அறிவுள்ள மனிதனாக, குடும்பமாக, சமுதாயமாக, ராஜ்ஜியங்களாக, அரசர்களாக, சாமான்யர்களாக வாழ ஆரம்பித்து சில ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன.

'வாழ்வதற்காக வேலையா, வேலைக்காக வாழ்க்கையா' என்ற விவாதங்களைக் கடந்து பார்க்கையில்... இன்றைய மனித வாழ்க்கையின் அடித்தளமே உழைப்பும் அதைச் சார்ந்த ஆரோக்கியமான வாழ்க்கையுமே. இது மொழி, இனம், நாடு கடந்து அனைத்து மனிதர்களுக்கும் பொருந்தும். பல சமயம், பிற உயிரினங்களுக்கும் இது பொருந்திப்போவதை ஆழ்ந்து கவனித்தால் உணரலாம்.

இவ்வாறாக உழைத்து களைத்துப்போன உடம்புக்கும், மனதின் ஓய்வுக்குமான பொழுதுபோக்கு என்னும் மகா அமிர்தம் இன்று அளவை மிஞ்சிய விஷமாகவே எஞ்சியுள்ளது. என்றாவது ஒரு நாள் பாட்டு, கூத்து என்று இருந்து வந்த கலை சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இன்று வாழ்வின் இன்றியமையாத ஓர் அங்கமாக மாறி பல ஆண்டுகள் கடந்துவிட்டன.

Representational Image
Representational Image

வரலாறு என்னும் நீண்ட நெடிய பெரிய ஆற்றில், மிகச்சிறிய தூரங்களைக் கொஞ்சம் படகோட்டிப் பார்த்தால் மாலை நேரம் மட்டுமே வந்த தொலைக்காட்சி, வாரம் ஒரு முறை மட்டுமே பார்த்த ஒளியும் ஒலியும், தொலைதூரம் பறந்து வந்த வானொலிகள், பண்டிகைக்கால திரைப்படங்கள், வி.சி.ஆர், வாரம் முழுதும் அழுது வடியும் தொடர்கள், சிடி, வாராவாரம் திரைப்படங்கள், டிவிடி, டோர்ரென்ட் மற்றும் பல எனத் தாண்டி ஓடிவந்து இன்று OTT என்னும் பெருவெள்ளமாக மாறி பாய்ந்துகொண்டிருக்கிறது.

இத்தனையும் 30 ஆண்டுகளுக்குள் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கும் வளர்ச்சியே (!?) யாருக்கு வளர்ச்சி. இதைத் தொழில் சார்ந்து, கலை சார்ந்து செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் மிக நிச்சயமாக ஒரு அசுர வளர்ச்சிதான். ஆனால், சாமான்ய மக்களுக்கும் அவர்களின் வாழ்வுக்கும் இது மிக நிச்சய சாபம்.

இரண்டு மாத ஐ.பி.எல், 100 நாள் பிக் பாஸ், வருடம் முழுவதும் சீரியல், எண்ணற்ற youtube சேனல், பட விமர்சனங்கள், அதைத் தொடரும் லட்சக்கணக்கான netizen-கள், சோசியல் மீடியா விவாதங்கள், செய்தி சேனல்-கள், TikTok காட்சிகள், வாட்ஸ் அப் அஞ்சல்கள், மீம்ஸ், netflix, hotstar, prime etc..etc... என உங்கள் வாழ்க்கை மொத்தத்தையும் திரைக்கு முன்னே குத்தகைக்கு எடுத்த பட்டியல் மிக நீளம்.

Representational Image
Representational Image

எப்போதாவது பார்க்கலாம் என்ற நிலை மாறி, மறந்து... எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற நிலையே அந்தச் சாபம். வருடம் முழுதும் அமர்ந்து (அல்லது நின்றோ!) பார்த்தாலும் பார்த்து மாளாத, முடியாத, முடிவில்லா இந்தப் புலி வாலை, தலைமுறை வித்தியாசங்களைக் கடந்து நாம் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறோம் நம் உள்ளங்கைக்குள்.

தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் மட்டுமே சாத்தியப்பட்ட இந்த மாற்றத்துக்கு நாம் கொடுக்கும் விலை சற்றே பெரியதுதான். 'காலம்' பொன் போன்றது என்ற பழமொழி உலக மக்கள் அனைவரும் அவரவர் மொழிகளில் நன்றாக அறிந்த ஒன்றே.

ஆம், நாம் கொடுத்திருக்கும் விலை அந்தக் காலத்தையும் நேரத்தையும்தான். அதன் விளைவுகள் வாழ்க்கை முறை மாற்றம், பழக்க வழக்கம், பயணம், அறிவு, அரசியல், உறவு, குடும்பம், காதல், காமம், சிந்தனை, வேலை, ஆரோக்கியம், கலாசாரம், சமுதாயம், இயற்கை, கனவு etc... என நீண்டுகொண்டே செல்லும் ஒரு முடிவிலி.

Representational Image
Representational Image

இவை அனைத்தும், நாம் வாழும் வாழ்க்கையின் இடையேதான் பொழுபோக்கு, அதுவும் கணினியும் ஸ்மார்ட் பேசியும், திரைகளையும் தாண்டியே பசுமையாக, இயற்கையாக உள்ளன என்று உணரும் நொடிகள் வரை மட்டுமே... அது வரை நாம் இந்தத் தொழிநுட்பம் என்ற எஜமானின் அடிமைகளே!

- பிரசன்னா சண்முகம்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு