Published:Updated:

` 30 ஆண்டுகளாக அதே சீரியல் நம்பர்!' - 60 மில்லியன் அமெரிக்க டாலர்களை வென்ற லாட்டரி மேன்

பிரேம் குமார் எஸ்.கே.

30 வருடமாக லாட்டரி சீட் வாங்கி வந்தவருக்கு இறுதியாக அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அவருக்கு லாட்டரியில் விழுந்த தொகை 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

Bon Truong
Bon Truong ( @GlobalEdmonton )

நாள் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை லாட்டரியில் செலவு செய்து வாழ்க்கையை இழந்த பலரை செய்திகளில் பார்த்திருப்போம். கனடா நாட்டைச் சேர்ந்த அந்த நபருக்கு மட்டும் லாட்டரியில் பணம் விழாமல் இருந்திருந்தால் அவரும் மேற்கண்ட பட்டியலில் சேர்ந்திருப்பார். அவருக்கு அடித்திருப்பது `ஜாக்பாட் லாட்டரி' என்றுதான் சொல்ல வேண்டும்.

Bon Truong
Bon Truong
@GlobalEdmonton

வாழ்க்கையில் பொறுமை என்பது மிக முக்கியம். அப்படியொரு பொறுமைதான் பான் ட்ரூங்-க்கு ஜாக்பாட் லாட்டரியை பெற்றுக்கொடுத்துள்ளது. இது வெறும் `லக்’ தான். ஆனாலும் பான், லாட்டரியைக் கையாண்ட விதம் சற்று வித்தியாசமானது. கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் வியட்நாம் நாட்டிலிருந்து கனடா வந்தார் .

கனடா வந்தது முதல் வாரா வாரம் லாட்டரி சீட்டுகளை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சுமார் 30 ஆண்டுகள் இதைப் பழக்கமாகக் கொண்டுள்ளார். அது மட்டுமல்லாது எல்லா முறையும் 2, 3, 4, 8, 9, 20, 30 ஆகிய எண்களிலே அவர் லாட்டரிகளை வாங்குவார். இது அவரது குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களின் பிறந்தநாள்கள் என்பது கூடுதல் சிறப்பு.

30 வருடமாக லாட்டரி பெற்று வந்தவருக்கு இறுதியாக அந்த லக் கிடைத்தது. அவருக்கு லாட்டரி விழுந்த தொகை 60 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் 4,29,21,30,000 (சுமார் 430 கோடி ரூபாய்). இந்த லாட்டரி தனக்குக் கிடைத்துவிட்டதை கடந்த வருடம் அக்டோபர் மாதமே பான் அறிந்துள்ளார்.

Bon Truong
Bon Truong
@GlobalEdmonton

ஆனாலும், அவர் குறிப்பிட்ட தொகையை வாங்குவதற்காக 10 மாதங்கள் கழித்தே வந்துள்ளார். இது தொடர்பாக பான் ட்ரூங் கூறுகையில், ``தேர்வான லாட்டரி எண்ணை நகல் எடுத்து எனது வீட்டில் வைத்து சில மணிநேரம் மீண்டும் மீண்டும் இரண்டிலும் இருக்கும் எண்களை சரிபார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை.

வெற்றிபெற்றிருக்கிறேன் என்பதை அறிந்ததும் இது எனது குடும்பத்துக்கு எந்த வகையில் உதவும் என்பதை சிந்தித்துப் பார்த்தேன். இது எங்களின் வாழ்கையை மாற்றப்போகிறது என்பதை என்னால் உணர முடிந்தது. அதற்கு முன்னால் அந்த மாற்றத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோமா என்பதை உறுதி செய்ய வேண்டி இருந்தது. அதனால்தான் 10 மாத கால தாமதம் ஏற்பட்டது” என்கிறார் உற்சாகத்துடன்.

55 வயதாகும் பான் ட்ரூங்-யிடம், வெற்றிபெற்ற தொகையை கொண்டு என்ன செய்ய உள்ளீர்கள் என்று கேட்கப்பட்டபோது, ``இன்னும் எதையும் உறுதியாக முடிவு செய்ய வில்லை. வாங்கிய கடன்களை அடைக்க வேண்டும். குடும்பத்துக்காக ஒரு வீடு வாங்க வேண்டும். விடுமுறைக்கு குடும்பத்தினரை சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும். மீதம் இருக்கும் பணத்தை எதிர்காலத்துக்காக சேமிக்க வேண்டும்” என்கிறார்.

இந்த உலகச் சுற்றுலாவை முடித்துவிட்டு மீண்டும் எனது பணிக்குத் திரும்பிவிடுவேன் எனச் சொல்லும் பான், தான் வெற்றிபெற்ற விஷயத்தை தன்னுடைய இளம் குழந்தைகளிடம் இருந்து மறைக்கவும் திட்டமிட்டுள்ளார். அதனால் அவர்கள் தொடர்ந்து கடினமாக உழைப்பார்கள் என்றார்.

`கன்னத்தில் அறைந்த ஓட்டுநர்; திருப்பி அடித்த சுங்கச்சாவடி பெண் ஊழியர்’ -வைரல் வீடியோ