Published:Updated:

'சரியான கண்ணோட்டத்துடன் அணுகினால் வெற்றி'; புதிய கல்விக்கொள்கை குறித்து டாக்டர் மரியஸீனா ஜான்சன்

Dr. Mariazeena Johnson
Dr. Mariazeena Johnson

கல்வித்துறையில் உள்ள தற்கால போக்கை கருத்தில்கொண்டு, எந்தத் துறைகளில் தேவை அதிகரிக்குமோ, அவற்றை அறிந்து, ஆராய்ந்து பின்னர் உயர் படிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நான் அறிவுறுத்தும் செய்தியாகும்

34 ஆண்டுகளுக்குப் பின், நிறைய மாற்றங்கள் அடங்கிய புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆராய்ந்து, அதுகுறித்த அறிக்கையை வழங்கிட கல்வி நிபுணர்களின் குழு ஒன்றை சமீபத்தில் அறிவித்தது தமிழக அரசு.

சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் மரியஸீனா ஜான்சன் இக்குழுவில் இடம்பிடித்துள்ளார். அவரிடம் சில கேள்விகள்...

அரசுப் பள்ளிகளுடன் சத்யபாமா இணைந்து பணியாற்றுவது குறித்து...

அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அவற்றுக்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளையும், தகுதியுள்ள ஏழை மாணவர்களுக்கு மேற்படிப்புக்கான உதவிகளையும் செய்து வருகிறது சத்யபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழகம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேவையை நேரடியாக பூர்த்தி செய்வதற்கு இதுவொரு சிறந்த வழியாக திகழ்கின்றது. சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் இதுவரை 20-ற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் தத்தெடுத்துள்ளோம்.

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் செய்தி என்ன?

கல்வித்துறையில் உள்ள தற்கால போக்கை கருத்தில்கொண்டு, எந்தத் துறைகளில் தேவை அதிகரிக்குமோ, அவற்றை அறிந்து, ஆராய்ந்து பின்னர் உயர் படிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நான் அறிவுறுத்தும் செய்தியாகும்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கனவுகள் மிகவும் பெரிதாக விரிந்துள்ளன. அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் விதமாக கல்வி நிறுவனங்களும் தங்களின் தரத்தை மேம்படுத்தி, செயல்பாடுகளில் தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும்.

'சரியான கண்ணோட்டத்துடன் அணுகினால் வெற்றி'; புதிய கல்விக்கொள்கை குறித்து டாக்டர் மரியஸீனா ஜான்சன்

சத்யபாமா பல்கலைக்கழகத்தின் வருங்காலத் திட்டங்கள் என்ன?

தரமான கல்வி வழங்குவதில் உலகத்தரத்தை எட்டியுள்ளது சத்யபாமா பல்கலைக்கழகம். இருப்பினும் கல்வி வழங்கிடும் முறைகளைப் பொறுத்தவரை, 'சிறந்தது இதுவே' என எந்த முறையையும் வரையறுத்து கூறிவிட முடியாது. எப்போதும் புதிய விஷயங்களை உள்வாங்கிக்கொண்டு, நிறுவன இயக்கத்துக்குத் தேவையான திட்டங்களை மறுசீரமைத்தும், நம்முடைய அர்ப்பணிப்பை மேம்படுத்திக்கொண்டும் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த வழியில் சென்றாலே வருங்காலம் சிறப்பாக இருக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.

புதிய கல்விக்கொள்கையை ஆய்வு செய்யும் தமிழக நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளீர்கள். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்பது என்னுடைய கருத்தாகும். மாணவர்களை வேலைக்கு தயார் செய்வது மட்டும் ஒரு கல்வி நிறுவனத்தின் கடமை அல்ல, அவர்களை நிறைவான மனிதர்களாக்க வேண்டியதும் நம் கடமையே. இதற்கு புதிய கல்விக் கொள்கை கைக்கொடுக்கும் என்பது எனது நம்பிக்கையாகும். மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்ப்பதற்கும், படைப்பாற்றலை அதிகரிக்கவும், பயிற்சி ரீதியிலான கல்வியை வழங்குவதற்கும் புதிய கல்விக்கொள்கை வழிவகுக்கக் கூடியது. மத்திய அரசு எடுத்திருக்கும் இந்த முயற்சியின் ஆரம்பகட்ட பலன்களைக் கண்டிட ஆவலாக இருக்கிறேன்.

எதிர்காலத்துக்கான கல்வி முறை குறித்து உங்கள் கருத்து/கண்ணோட்டம் என்ன?

நீண்ட நாளாக விவாதமாக மட்டுமே இருந்த வந்த கல்விக்கொள்கை மாற்றம் தற்போது அமலாகியுள்ளது, இதனால் தெளிவான பாதை ஒன்று பிறந்துள்ளது. புதிய கல்விக்கொள்கையை சரியான கண்ணோட்டத்துடன் அணுகி, வளர்ச்சிக்கு தேவையான வகையில் செயல்பட்டால் நிச்சயம் மிகச்சிறந்த பலன்களைப் பெற முடியும்!

அடுத்த கட்டுரைக்கு