Published:Updated:

மிஸ் இந்தியாவில் 21, யு.பி.எஸ்.சி-யில் 93... மாடல் ஐஸ்வர்யா ஷெரன் ஐ.ஏ.எஸ் ஆன கதை!

மாடல் அழகி ஐஸ்வர்யா ஷெரன் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கதை
மாடல் அழகி ஐஸ்வர்யா ஷெரன் ஐ.ஏ.எஸ் அதிகாரியான கதை

2016-ம் ஆண்டின் மிஸ் இந்தியா போட்டியில் இறுதிக்கட்டப் போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா, இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் (யு.பி.எஸ்.சி) 93-வது இடத்தைப் பெற்றிருக்கிறார்.

இதற்காக எந்தப் பயிற்சிக்கும் செல்லவில்லை. முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றிபெற்று சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறார் 23 வயதேயான ஐஸ்வர்யா.

``எனக்கு ஐஸ்வர்யா என்று என் அம்மா பெயர் வைத்ததற்கு காரணம் ஐஸ்வர்யா ராய் பச்சன் போல் அழகிப் போட்டிகளில் நான் பங்கேற்க வேண்டும் என்பதற்காகத்தான். என் அம்மா என் மீது வைத்திருக்கும் அன்பு, அவர் எனக்காகச் செய்த தியாகங்கள் ஆகியவற்றுக்காக அவரின் ஆசையை நிறைவேற்றினேன். அதற்காகக் கடுமையாக உழைத்து மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் முதல் 21 இடத்துக்குள் வந்தேன்.

யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராவதற்கு முன்னரே மாடலிங் புராஜெக்ட் எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்துவிட்டேன். இப்போது மாடலிங்கை முழுமையாக நிறுத்திவிட்டேன். மாடலிங் என் ஹாபிதானே தவிர, அது என்னுடைய பணி அல்ல. திரும்பவும் மாடலிங் துறைக்குச் செல்லும் எண்ணமும் இல்லை. எனக்கு முன்மாதிரி என் தம்பிதான்.

Aishwarya sheron
Aishwarya sheron
யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகும்போது கவனச் சிதறல் இல்லாமல் இருக்க 2 மாதங்களுக்கு முன்பே சமூக வலைதளங்களின் பயன்பாட்டை நிறுத்திவிட்டேன்.
ஐஸ்வர்யா ஷெரன்

அவன் ஒரு கிரிக்கெட் பிளேயர். அவன் படிப்பையும் விளையாட்டையும் சரியாக பேலன்ஸ் செய்வதைப் பார்த்து, நானும் அதைப் பின்பற்றத் தொடங்கினேன். என்னுடைய ரோல் மாடல் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி. ஆணாதிக்கம் உள்ள துறையில் பெண்களுக்கான வாசலைத் திறந்தவர் அவர்தான்" தெள்ளத் தெளிவாகப் பேசுகிறார் ஐஸ்வர்யா.

புகழும் பணமும் நிறைந்த மாடலிங் துறையில் முக்கிய இடத்தைப் பிடித்த பிறகும் யு.பி.எஸ்.சி தேர்வெழுத முடிவெடுத்தது ஏன் என்று கேட்டபோது, ``சிறுவயதிலிருந்தே ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதுதான் என் கனவு. பள்ளியில் மாணவத் தலைவியாக இருந்தேன். பள்ளி விழாக்களுக்கு பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வருவார்கள்.

அவர்களின் உரைகளைக் கேட்கும்போதும், இந்தச் சமூகத்தை மாற்றுவதற்கான சக்தி அவர்களிடம் இருந்ததைக் கண்டும், ஐ.ஏ.எஸ்தான் என் லட்சியம் என்று முடிவு செய்தேன். டெல்லியிலுள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில் பொருளாதாரம் ஹானர்ஸ் படித்து, 2017-ம் ஆண்டில் பட்டம் பெற்றேன்.

10+8+6 கோட்பாடு!

யு.பி.எஸ்.சி தேர்வுக்காக மே 2018 முதல் தயாரானேன். எழுத்துத் தேர்வை மே 2019-ல் எழுதினேன். எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்று தேர்வு நடைமுறைகள் ஒரு வருடத்துக்கு நீண்டன. தேர்வுக்குத் தயாராக எந்தப் பயிற்சி மையத்துக்கும் செல்லவில்லை. இணையத்தைப் பார்த்துப் படித்தேன்.

இணையத்தின் வாயிலாகவே மாதிரித் தேர்வுகள் எழுதிப் பழகினேன். தேர்வுக்கு நான் பின்பற்றிய தாரக மந்திரம் 10 + 8 + 6 கோட்பாடு. அதாவது, 10 மணி நேரம் படிப்பு, 8 மணி நேரம் உறக்கம், 6 மணி நேரம் இதர வேலைகள் என்று பிரித்துக்கொண்டேன். இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றித்தான் தேர்வுக்குத் தாயாரானேன்.

தேர்வுக்குத் தயாராகும்போது கவனச் சிதறல் இல்லாமல் இருக்க இரண்டு மாதங்களுக்கு முன்னரே சமூக வலைதளங்களின் பயன்பாட்டை நிறுத்திவிட்டேன். தொழில்நுட்பத்தைப் பயனுள்ளதாக உபயோகிக்க முடிவு செய்தேன். படிக்கும்போது செல்போன் அருகில் இருந்தால் அதைத் திரும்பத் திரும்ப எடுத்துப் பார்க்கத் தூண்டப்படுவோம். அதைத் தவிர்க்கவே சமூக வலைதளங்களில் இருந்து நான் வெளியேறினேன். அதன் காரணமாக என் முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன்" என சக்சஸ் சீக்ரெட் பகிர்கிறார்.

With family
With family

3 டிப்ஸ்!

ஐ.ஏ.எஸ் கனவுடன் இருக்கும் மாணவர்களுக்கு மூன்று டிப்ஸ் வழங்குகிறார் ஐஸ்வர்யா.

``யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்காக நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் முன், தேர்வின் நடைமுறைகள் குறித்த புரிந்துணர்வு தேவை. தேர்வுக்கான பாட வரைமுறை, தேர்வில் நம்மிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது ஆகியன குறித்த தெளிவும் தேவை.

இரண்டாவதாக நம்மைப் பற்றி நாம் நன்கு அறிய வேண்டும். நம்முடைய திறமைகளை உணர வேண்டும். சுயமாகவே தேர்வுக்குத் தயாராக முடியும் என்றால் அதைச் செய்யலாம். இல்லையென்றால் பயிற்சி மையத்துக்குச் செல்லுங்கள். ஒவ்வொருவர் படிக்கும் முறையும் தனித்துவமாக இருக்கும். இந்த விஷயத்தில் மற்றவர்களைப் பின்பற்றாதீர்கள். கடைசியாக ஒழுக்கம் மற்றும் தொய்வற்ற முயற்சி மிக அவசியம்" என்கிறார்.

வாட் நெக்ஸ்ட்?

விரும்பியது போல் வெற்றி கிடைத்துவிட்டது. அடுத்து என்ன பிளான் என்றதற்கு, ``யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்றது என் லட்சியத்தின் இறுதி அல்ல, தொடக்கம் மட்டுமே. இந்த வாய்ப்பின் மூலம் சமூகத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறேன். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றம், கல்வி இரண்டிலும் மாற்றங்களை கொண்டுவரப் பாடுபடுவேன்" நிதானம் தொனிக்கப் பேசுகிறார்.

Aishwarya
Aishwarya
``பையன் ஐ.ஏ.எஸ் ஜெயிச்சதும் ரஜினி சார் போன்ல சொன்ன விஷயம்?!'' - சின்னி ஜெயந்த்

``நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் என்னுடைய குடும்பத்தின் ஆதரவு நிறைந்து இருக்கும். லட்சியங்களைப் பின்தொடர்வதற்கான முழு சுதந்திரத்தையும் எனக்கு வழங்கியிருக்கின்றனர். இதே சுதந்திரம் அனைத்துப் பெண்களுக்கும் அவர்கள் குடும்பங்களிடமிருந்து கிடைக்க வேண்டும்.

பெற்றோர் ஆதரவு, அன்பின் மூலம் எதையும் சாதிக்கலாம். யு.பி.எஸ்.சி தேர்வெழுத விரும்பும் பெண்கள், தங்களைத் தாங்களே நம்ப வேண்டும். பலர் உங்களை முயற்சிகளிலிருந்து கீழே இழுக்கப் பார்ப்பார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இலக்கை நோக்கி முன்னேறினால் வெற்றி சாத்தியமே" நம்பிக்கையுடன் நிறைவு செய்தார் ஐஸ்வர்யா ஷெரன்.

அடுத்த கட்டுரைக்கு