Published:Updated:

``வணக்கம் நல்லா இருக்கீங்களா?''- மோடியுடன் என்ன பேசினார் `சலூன் லைப்ரரியன்' மாரியப்பன்

தூத்துக்குடியில் சலூன் கடையில் நூலகம் அமைத்து நடத்தி வரும் பொன் மாரியப்பனிடம் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழில் உரையாடியதுடன் நூலகம் நடத்தி வருவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தன் கடைக்கு முடிவெட்ட வருபவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, சலூன் கடைக்குள் சிறிய நூலகத்தை அமைத்துள்ளார், தூத்துக்குடியைச் சேர்ந்த பொன்.மாரியப்பன். தூத்துக்குடி, மில்லர்புரத்தில் உள்ளது இவரது நூலக முடி திருத்தகம். சினிமா குத்துப்பாடல்கள், அரசியல், நையாண்டி, ஊர்கதைகள் என எதற்கும் இடம் கொடுக்காத இவர் கடைக்குள் மினி லைப்ரரியை அமைத்துள்ளார். நாளிதழ்கள், வார இதழ்களுடன் கதை, சிறுகதை, கவிதை, வரலாறு, இலக்கியம், ஆன்மிகம், நாவல்... என சுமார் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
முடி திருத்தும் பொன் மாரியப்பன்
முடி திருத்தும் பொன் மாரியப்பன்

சில சலூன் கடைகளில் பளிச்சிடும் சினிமா நடிகைகளின் படங்களுக்குப் பதிலாக திருவள்ளுவர், அப்துல் கலாம், மகாத்மா காந்தி, விவேகானந்தர், மகாகவி பாரதி போன்றோரின் படங்களே இந்தக் கடையின் சுவரை அலங்கரிக்கின்றன. செல்போனில் மூழ்கிக் கிடக்கக்கூடாது... அடிக்கடி செல்போன் பார்ப்பதால் ஏற்படும் விபரீதம் குறித்து நாளிதழ்களில் வெளியான தகவல்களையும் கட்டுரைகளையும் அனைவரின் பார்வையிலும்படும்படி ஒட்டி வைத்துள்ளார்.

வாடிக்கையாளர்கள், முடிவெட்டுவதற்காகக் காத்திருக்கும் நேரத்தில், புத்தகங்களை ஆர்வத்துடன் எடுத்துப் படிக்கிறார்கள். பேச்சு, சினிமா பாடல்கள் என எந்த சத்தமுமின்றி, முடிவெட்டும் கத்தரிக்கோல் சத்தம் மட்டுமே கேட்கிறது. 8-ம் வகுப்பு வரை படத்திருக்கும் மாரியப்பன், சில ஆண்டுகள் வேறு சில வேலைகளைச் செய்து வந்த நிலையில் கடந்த ஏழு ஆண்டாக தன் அப்பா செய்துவந்த முடி திருத்தும் தொழிலையே செய்து வருகிறார். புத்தகங்கள் குறித்தும், வாசிப்புப் பழக்கம் குறித்தும் எஸ்.ராமகிருஷ்ணன், சுகி.சிவம், நெல்லை கண்ணன், தமிழருவி மணியன், பர்வீன் சுல்தானா போன்றோரின் சொற்பொழிவுகளை தினமும் ஒலிப்பரப்பி வருகிறார்.

கடை முன்பு பொன் மாரியப்பன்
கடை முன்பு பொன் மாரியப்பன்

”புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கணும், குறைந்தபட்சம் முடிவெட்ட வந்திருக்கும் நேரத்துலயாவது புத்தகங்களைப் படிக்க வைக்கணும் என்பதுதான் என் நோக்கம்" என்கிறார். முடிதிருத்தும் கட்டணம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்துகொண்டு செல்லும் நிலையிலும், இந்த ஆறு வருடத்தில் ஒரு ரூபாய்கூட இவர் கட்டணத்தை உயர்த்தியதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆண்டு கட்டணத்தை உயர்த்தச் சொல்லி மற்ற கடைக்காரர்கள் நிர்பந்தித்தபோதிலும், 50 ரூபாயாக இருந்த கட்டணத்தை, 80 ரூபாயாக மற்ற கடைக்காரர்களின் வற்புறுத்தலை ஏற்று பெயருக்கு உயர்த்தி அறிவித்தார். அதே நேரத்தில் பிடித்த புத்தகத்தில் 25 பக்கங்கள் தொடர்ந்து வாசித்தால் 30 ரூபாய் கட்டணக் குறைப்பு என அறிவித்து, மீண்டும் அதே 50 ரூபாயைத்தான் கட்டணமாகப் பெறுகிறார் பொன் மாரியப்பன்.
பொன் மாரியப்பன்
பொன் மாரியப்பன்

தூத்துக்குடியில் பிரபலமான இந்த லைப்ரரி சலூனை பலரும் பாராட்டி வருவதுடன், தங்களின் பங்களிப்பாக புத்தகங்களையும் அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், ’மன் கி பாத்’ என்ற 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாடி வரும் பிரதமர் மோடி, பொன் மாரியப்பனிடம் தமிழில் உரையாடினார். இதுகுறித்து பொன் மாரியப்பனிடம் பேசினோம், “என்னோட லைப்ரரி சலூனைப் பாரட்டி பல தலைவர்களும் எனக்கு வாழ்த்து தெரிவிச்சுட்டு வர்றாங்க. பிரதமர் மோடி ஐயா என்கிட்டப் பேசுவாங்கன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை. என்னால நம்பவேமுடியலை.

மன் கி பாத்: `சலூனில் நூலகம்; உங்களுக்கு பிடித்த நூல்?’ - தூத்துக்குடி தமிழரிடம் தமிழில் பேசிய மோடி

'வணக்கம் நல்லா இருக்கீங்களா?' என தமிழிலேயே பேசினார். 'சலூனில் நூலகம் அமைக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?' எனக் கேட்டார். வாழ்க்கையைப் படிப்பதற்காக நூலகம் அமைத்தேன். படிப்பவன் சிந்திக்கிறான், சிந்திப்பவன் முன்னேறுகிறான். சிந்தனை என்பது படிப்பினால் வரக்கூடியது. சிந்தனையைத் தூண்டுவது படிப்பு மட்டும்தான். இதற்காகவே நூலகம் அமைத்தேன் என பதில் சொன்னேன்.

பொன் மாரியப்பன்
பொன் மாரியப்பன்

'உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது?' எனக் கேட்டார். திருக்குறள் புத்தகம் ரொம்ப பிடிக்கும் என்றேன். 'ஏன்?' எனக் கேட்டார். மனித வாழ்வு குறித்த அனைத்து தகவல்களும் இரண்டடி குறள்களில் அடங்கியுள்ளது என்றேன். 'உங்களுக்கு எனது வாழ்த்துகள்' என்றார். பிரதமர் என்னிடம் பேசியது எனக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார் நெகிழ்ச்சியுடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு