Published:Updated:

`நின்றுபோன கோயில் திருவிழாக்கள்!’ - வறுமையில் வாடும் இசைக் கலைஞர்கள்

நாதஸ்வர, மேளக் கலைஞர்கள்
நாதஸ்வர, மேளக் கலைஞர்கள்

ஊரடங்கு உத்தரவால் கோயில் திருவிழாக்கள் நடத்திடத் தடை விதிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடுவதாகக் கலங்குகிறார்கள் இசைக் கலைஞர்கள்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்திட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால், வரும் மே 3-ம் தேதி வரை தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தவிர்த்திடும் வகையில் திருவிழாக்கள் நடத்திடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாத்தியக் கருவிகள்
வாத்தியக் கருவிகள்

இந்நிலையில், எல்லைச்சாமிகள், சிறுதெய்வ வழிபாடுகள் ஆகியவையும் நின்று போயின. கிராமக்கோயில் திருவிழாக்களில் பக்தர்களின் முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல், கரும்புத் தொட்டிலில் குழந்தைகளைச் சுமந்து வருதல், தீ மித்தல், பொங்கலிடுதல், தீச்சட்டி எடுத்தல் போன்ற பல நேர்த்திக் கடன்களைக் காண கண் கோடி வேண்டும். இதுபோன்ற கோயில் திருவிழாக்களில் வாத்தியக் கருவிகள் மூலம் இசைக்கும் இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர்களிடம் பேசினோம், ``தென் மாவட்டைங்களைப் பொறுத்தவரையில் சித்திரை முதல் புரட்டாசி வரையிலான 6 மாதங்கள் கோயில் திருவிழாக்கள், சிறப்பு பூஜைகள், குரு பூஜைகள், கொடை விழாக்கள் என வரிசையாக நடைபெறும் இந்த மாதங்கள்தான் எங்களின் பஞ்சத்தைத் தீர்க்கும் மாதங்கள். அதனால், கிடைக்கும் திருவிழாக்களுக்கு ஓய்வில்லாமல் வாசிக்கச் செல்வோம்.

நாதஸ்வரம்
நாதஸ்வரம்

தொடர்ச்சியான திருவிழாக்களில் கலந்துகொண்டு நாதஸ்வரம் மேளம் வாசித்துவிட்டு ஒரு மாதம் கழித்துகூட சொந்த ஊர்களுக்குச் செல்வோம். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்தான் இது போன்ற கொடை விழா, திருவிழாக்கள் நடக்கும். அம்மன் கோயில்கள், சுடலை மாடன், கருப்பசாமி, முனியசாமி ஆகிய தெய்வங்களின் கோயில் கொடைதான் அதிகமாக நடக்கும்.

செவ்வாய்க்கிழமையோ, வெள்ளிக்கிழமையோ... ஒருநாளுக்கு முன்பாகவே கோயில்களுக்குப் போயிடுவோம். சுவாமி குடியழைப்பு, ஆறு, கடல் போன்ற இடங்களில் தீர்த்தம் எடுத்துவருதல், உச்சிகால பூஜை, ராக்கால பூஜை, மஞ்சள் நீராட்டு என இரண்டு, மூன்று நாள்கள் வரைகூட திருவிழா நடக்கும். ஒரு நாதஸ்வர குழுவில் இரண்டு நாதஸ்வர வித்வான்கள், இரண்டு ராஜமேளம், இரண்டு இரட்டைமேளம், ஒரு ஜால்ரா உட்பட 7 கலைஞர்கள் வாசிப்போம்.

நாதஸ்வர கலைஞர்கள்
நாதஸ்வர கலைஞர்கள்

கோயில்களில் உள்ள தெய்வங்கள், சாமியாடிகள் எண்ணிக்கையைப் பொறுத்து இரண்டு செட்டுகள், மூன்று செட்டுகளாகக்கூட ஒண்ணா சேர்ந்து வாசிப்போம். இந்த வாசிப்புல கிடைக்குற பணத்துலதான் வாங்குன கடன்களை அடைப்போம், பழுதான வாத்தியக் கருவிகளை சரி செய்வோம்.

பெண் பிள்ளைகளுக்கு நகை வாங்கி கல்யாணம் முடிச்சுக் கொடுப்போம். இப்போ ஒண்ணுக்கும் வழியில்லாமப் போச்சு. ஊரடங்கால் தினசரி வயித்துப்பாட்டைக் கழிக்கிறதே ரொம்ப கஷ்டமா இருக்கு. பெரியவங்களால பசி தாங்கிக்க முடியும். சிறு குழந்தைகள் பசி தாங்குமா? நாங்க மட்டுமல்ல, திருமணம், சடங்கு ஆகியவை எளிமையா நடக்குறதுனால டிரம்ஸ், கிளாரினெட், சாக்ஸ்சாபோன், ஆகிய இசைக் கருவிகளை இசைக்கும் இசைக் கலைஞர்களுக்கும் வேலையில்லாமப் போச்சு.

சிங்கி தட்டுகள்
சிங்கி தட்டுகள்

இதேபோல தமிழகம் முழுவதும் நாடகம் மற்றும் நாட்டுப்புறக்கலைஞர்கள் சுமார் 2 லட்சம் பேர் உள்ளனர். அவர்களும் வாழ்வாதாரமின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலரும் அடையாள அட்டை வைத்திருந்தும் அரசின் சார்பில் எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை. எனவே, எங்களைப் போன்ற கலைஞர்களுக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு