`என் குட்டி மகளுக்கு மகாத்மா காந்தியை அறிமுகப்படுத்தியது இப்படித்தான்!' - வாசகர் பகிர்வு #MyVikatan

குழந்தைகளிடம் காந்தி பற்றிய புத்தகங்களை வாசிக்க வைப்பது கடினம்...
பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!
``புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக, தோழா ஏழை நமக்காக" என்பது காவியக் கவிஞர் வாலியின் பாடல் வரிகள். புத்தர், ஏசுவுக்கு இணையாக காந்தி போற்றப்படுவார் என்று மவுன்ட்பேட்டன் சொன்னதைப் பாடலில் கொண்டுவந்தார் வாலி. இன்றைக்கு, காந்தியை அவதூறு செய்வது போற்றப்படும் நிகழ்வாக உருவாகியிருக்கிறது. காந்தியைப் பலர் படித்து புரிந்து கொண்டனர் நான் உட்பட. மாறிவிட்ட இந்தியச் சூழலில் காந்தியைக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

குழந்தைகளை காந்தி பற்றிய புத்தகங்களை வாசிக்க வைப்பது கடினம். ``I hear and I forget. I see and I remember. I do and I understand" என்பது சீன நாட்டின் அறிஞர் கன்ஃபூசியஸ் வாக்கு. அந்த வகையில் வரலாற்றை குழந்தைகளுக்கு எளிமையாக விளக்குவதற்கான வாய்ப்பை வழங்குவது அருங்காட்சியகங்கள். மகாத்மா காந்தி தொடர்புடைய இரண்டு அருங்காட்சியகங்கள் பற்றிய தகவல்களை எழுதுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். அதன் ஊடாக வரலாற்றின் ஒரு சில பக்கங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
``இந்திய விடுதலையை அடைவோம் அல்லது அதற்கான முயற்சியில் மரணமடைவோம். அடிமைத்தனம் தொடர்வதைக் காண வாழ மாட்டோம்" என்று மகாத்மா 1942-ல் முழங்கினார். வெள்ளையனே வெளியேறு இயக்கத் தீர்மானம் 14 ஜூலை 1942-ல் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நாடு தழுவிய போராட்டம் 1942 ஆகஸ்ட் 8 -ல் பாம்பேயில் தொடங்கியது. உடனடியாக காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். பண்டித நேரு, மௌலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் சர்தார் படேல் ஆகியோர் மகாராஷ்டிராவின் அஹமது நகர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மகாத்மாவைக் கைது செய்து மகாராஷ்டிராவின் புனேவுக்கு அழைத்து வந்தனர். அங்கே உள்ள ஆகாகான் மாளிகையில் கஸ்தூர்பா காந்தி மற்றும் மகாதேவ் தேசாய் ஆகியோருடன் சிறை வைக்கப்பட்டார் மகாத்மா. ஆகாகான் மாளிகை 1892-ல் சுல்தான் முஹம்மது ஷா ஆகாகான் என்பவரால் கட்டப்பட்டது. இது, புனேயின் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காகக் கட்டப்பட்ட மாளிகை .
கஸ்தூர்பா காந்தியை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். மகாதேவ் தேசாய் மகாத்மாவின் செயலாளர். இவர்தான் காந்தியின் சுயசரிதையை குஜராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். தேசாய், மகாத்மாவின் வாழ்வில் மிக முக்கியமானவர். தேசாய் 1917 நவம்பர் 13 முதல் நாட்குறிப்பு எழுத ஆரம்பித்தார். அதில் மகாத்மா பற்றிய முக்கியமான குறிப்புகள் இருக்கின்றன. உலகின் மிகச்சிறந்த நாட்குறிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுவது தேசாயின் நாட்குறிப்புகள். தேசாய் கடைசியாக நாட்குறிப்பு எழுதியது 1942 ஆகஸ்ட் 14. அதற்கடுத்த நாள் மாரடைப்பால் காலமாகிவிட்டார். ``தேசாயும் நானும் ஈருடல் ஓருயிர்" என்று காந்தி சொல்லும் அளவுக்கு காந்தியின் வாழ்வின் அங்கமாக இருந்தவர் தேசாய். அவரது இறுதிச்சடங்கை நடத்துவதற்கும் பிரிட்டிஷ் அரசோடு போராடினார் மகாத்மா.

தேசாய் இறந்ததை அவர் குடும்பத்தாருக்கு தந்தியாகக் கொடுக்கச் சொல்லி எழுதிக் கொடுத்தார் மகாத்மா. அதை, பிரிட்டிஷ் அதிகாரிகள் கடிதமாக அனுப்பிவிட்டனர். எனவே, தேசாய் இறந்த செய்தி பல நாள்களுக்குப் பின்புதான் அவருடைய குடும்பத்துக்குத் தெரிய வந்தது. ஆகாகான் மாளிகையில் மகாத்மாவே தேசாய் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்த அனுமதியளித்தது பிரிட்டிஷ் அரசாங்கம். மகாத்மா தீச்சட்டியுடனும் தேசாய் உடலுடனும் நடந்து சென்று தகனம் செய்த பாதை இன்றும் உள்ளது. அதன் வழியாக நாமும் நடந்து சென்று அஞ்சலி செலுத்தலாம்.
ஆகாகான் மாளிகையின் மூலையில், தேசாயின் உடலை தகனம் செய்தார் மகாத்மா. தேசாயின் அஸ்தி கலையம் ஆகாகான் மாளிகையில் புதைக்கப்பட்டு சமாதி எழுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகு கஸ்துரிபா காந்தி 1944 பிப்ரவரி 22 இல் காலமானார். கஸ்தூர்பா உடலைத் தன் மகன்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார் மகாத்மா. பிரிட்டிஷ் அரசாங்கம் அதை ஏற்க மறுத்துவிட்டது. அதனால், அவரையும் தேசாய் தகனம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே தகனம் செய்தார் மகாத்மா. அவருடைய அஸ்தி தேசாய் சமாதி அருகே புதைக்கப்பட்டுள்ளது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் மகாத்மா சிறையில் இருந்த 22 மாதக் காலத்தில் அவர் வாழ்வின் முக்கிய அங்கங்களாக இருந்த கஸ்தூரிபா மற்றும் தேசாயை இழந்தார். பின்னர் நாதுராம் கோட்ஸேவால் மகாத்மா படுகொலை செய்யப்பட்ட பின், அவரது அஸ்தியின் ஒரு பகுதி ஆகாகான் மாளிகையில் புதைக்கப்பட்டு சமாதி எழுப்பப்பட்டுள்ளது.

புனே நகருக்கு வருபவர்கள் அவசியம் ஆகாகான் மாளிகைக்குச் சென்று இந்தியச் சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முக்கியப் பக்கங்களை உணர்வதோடு, சுதந்திரப் போரில் முக்கியப் பங்கு வகித்தவர்களுக்கு அஞ்சலியும் செலுத்த வேண்டும். இங்கேதான், சரோஜினி நாயுடுவும் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பது கூடுதல் தகவல். என்னைச் சந்திக்க வரும் விருந்தினர்களை இங்கே அழைத்துச் செல்வது வழக்கம். ஜெர்மனியிலிருந்து பேராசிரியர் குன்டர் விட்ஸ்டாக் மற்றும் அவர் மனைவி மரியேன் ஸ்கேஃபர் ஆகியோர் என்னைச் சந்திக்க வந்தனர். அவர்களை ஆகாகான் மாளிகைக்கு அழைத்துச் சென்றேன். மரியேன் கையில் கேமரா வைத்திருந்தார். அதைப் பார்த்த மாளிகை பணியாளர்கள், கேமராவில் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். செல்போனில் எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஆலோசனையும் சொன்னார்கள்! குன்டரும் மரியேனும் என்னை விநோதமாகப் பார்த்தார்கள். நான் சிரித்தேன், அவர்களும் சிரித்தார்கள், உள்ளே போய்விட்டோம்.
இந்த அனுபவம் இருந்த காரணத்தால், மதுரை காந்தி மியூசியத்தில் செல்போனில் புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டேன். புகைப்படம் எடுக்க ஐம்பது ரூபாய் கட்டணம் என்று சொன்னார் அங்கிருந்த பணியாளர். டிஜிட்டல் இந்தியா பிறப்பதற்கு முன்பிருந்தே, அதாவது 2010 ஆம் ஆண்டு முதல் அட்டைகளைப் பயன்படுத்தி பழகிவிட்டது. எனவே, பொதுவாக என்னிடம் ரூபாய் தாள்கள் இருக்காது.

அன்றைக்கு ஐம்பது ரூபாய் தாள் என்னிடம் இல்லை. எனவே புகைப்படம் எடுக்க வேண்டாம், சுற்றிமட்டும் பார்ப்போம் என்று அனிச்சத்திடம் சொன்னேன். No, I need photographs to recall and refresh my memory. Please pay என்று அனிச்சம் வாதிட ஆரம்பித்தார். இதை என் அருகில் இருந்து கவனித்த ஒருவர், ஐம்பது ரூபாயை அன்பளிப்பாக வழங்கினார். அவர் யாரென்று தெரியவில்லை. அவருக்கு நன்றி. மதுரை காந்தி அருங்காட்சியகம் செல்பவர்கள், புகைப்படம் எடுக்க விரும்பினால் ஐம்பது ரூபாய் தாள் எடுத்துச் செல்லுங்கள். இந்த அருங்காட்சியகத்தை பண்டித நேரு அவர்கள் திறந்து வைத்திருக்கிறார்.
உள்ளே, பல அரிதான புகைப்படங்கள், வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. அருங்காட்சியகத்தின் தொடக்கம் பிளாசி போர் பற்றிய தகவல்களைச் சொல்கிறது. வேலு நாச்சியார், மருது பாண்டியர், ஹைதர் அலி, திப்பு சுல்தான் என்று ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்ட வரலாறு புகைப்படங்கள் வாயிலாக விரிகிறது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்களின் பங்கும் விவரிக்கப்பட்டுள்ளது. என் 10 வயது மகள் அனிச்சத்தையும் அங்கு அழைத்துச் சென்றிருந்தேன்.

அரோபிந்தோவையும் தாகூரையும் பார்த்த அனிச்சம், இவர்கள் இருவரும் உறவினரா என்று கேட்டார். அருகில் இருந்த அருங்காட்சியக மேலாளர் சிரித்துவிட்டு எப்படி இப்படிச் சிந்திக்கிறார் என்று கேட்டார். தொடர்ந்து அனிச்சம் கேட்ட கேள்விகளைக் கவனித்த அவர், இவ்வளவு கேள்வி கேட்கிறாரே என்று ஆச்சர்யப்பட்டார். கேள்வி கேட்பது நல்லது. எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகளின் கேள்விகளைத் தடுக்கவோ ஒதுக்கவோ கூடாது என்று சொன்னேன். ``வாயை மூடு" என்று கேள்வி கேட்கும் குழந்தைகளிடம் சொல்லாதீர்கள். தொடர்ந்து அருங்காட்சியகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். தந்தை பெரியாரின் அறிய புகைப்படம் ஒன்றும் உள்ளது. மகாத்மாவின் தமிழ்க் கையெழுத்து உள்ளது. மகாத்மாவின் உடை மாற்றத்திற்கு வித்திட்ட சம்பவம் அடங்கிய தகவல் பலகை பயனுள்ளது.
மகாத்மா சுடப்பட்ட பொழுது அணிந்திருந்த உடை மதுரை அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்திய அருங்காட்சியகங்களில் உள்ளவற்றில் மிக முக்கியமானது இந்த உடை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. மகாத்மா ஹிட்லருக்கு எழுதிய கடித நகல் அங்கே உள்ளது. நீங்கள் தொடங்க நினைக்கிற போரால் மனித குலத்திற்குப் பேரழிவு ஏற்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஹிட்லர் தொடங்கிய இரண்டாம் உலகப்போரால் அதுதான் நடந்தது. எந்நேரமும் போரைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் தலைவர்களும் தொண்டர்களும் அதிகரித்து வருகிறார்கள். அவர்கள், காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தையும், இரண்டாம் உலகப்போரின் விளைவுகளையும் படித்துத் தெரிந்துகொள்வது மனித குலத்திற்கு நல்லது.
- கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.