Published:Updated:

காரசார விவாதத்தில் தந்தை; குழந்தையைக் கவனித்த சபாநாயகர்! - வைரலான நாடாளுமன்ற புகைப்படம்

Trevor Mallard with kid
Trevor Mallard with kid ( Twitter/@SpeakerTrevor )

நாடாளுமன்ற உறுப்பினர் காஃபே, ஒரு தன்பாலின ஈர்ப்பாளர். அவர் ஸ்மித் என்பவரை திருமணம் செய்துள்ளார். தற்போது இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்றங்களில் அனல் பறக்கும் விவாதங்களுக்குப் பஞ்சமே இருக்காது. எல்லா நேரங்களிலும் நாடாளுமன்றத்தில் இருந்து காரசாரமான விவாதம் குறித்த செய்திகள்தான் வர வேண்டும் என்பதில்லை. சில நெகிழ்ச்சியான செய்திகளும் அரங்கேறலாம்.

Trevor Mallard with kid
Trevor Mallard with kid
Twitter/@SpeakerTrevor

நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்திலிருந்து அப்படியான ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் தனது இருக்கையில் அமர்ந்தபடியே ஒரு குழந்தைக்குப் பாட்டில் மூலம் பாலூட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ``பொதுவாக இந்த இருக்கை அவையின் தலைமை அதிகாரிகளுக்குதான் ஒதுக்கப்படும். ஆனால், இன்று என்னுடன் ஒரு வி.ஐ.பி-யும் இருந்தார்” எனப் பதிவிட்டார்.

சபாநாயகர் ட்ரேவோர் மல்லார்டின் ட்வீட்டுக்கு வேற லெவல் வரவேற்பு வழங்கியுள்ளனர் நெட்டிசன்கள். அவர் பராமரித்தது நாடாளுமன்ற உறுப்பினர் காஃபேவின் 6 வார குழந்தையைத்தான். அன்றுதான் தந்தைக்கான பேறுகால விடுப்பு முடிந்து காஃபே நாடாளுமன்றம் வந்தார். வரும்போது பிறந்து 6 வாரமே ஆன தனது குழந்தையையும் நாடாளுமன்றத்துக்கு எடுத்து வந்திருந்தார்.

Viral Kid
Viral Kid

எரிபொருள் விலையேற்றம் தொடர்பான விவாதத்தில் காஃபே பேசும்போது, `குழந்தையை நான் கவனித்துக்கொள்கிறேன். நீங்கள் பேசுங்கள்' என்று கூறிய சபாநாயகர், குழந்தையைப் பால் அருந்த வைத்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய காஃபே, ``எனது சக அலுவலக நண்பர்கள் எனது குழந்தையை நன்றாகக் கவனித்துக் கொள்கிறார்கள்” என்றார் உற்சாகத்துடன்.

நாடாளுமன்ற உறுப்பினர் காஃபே, ஒரு தன்பாலின ஈர்ப்பாளர். அவர் ஸ்மித் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். தற்போது இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுள்ளனர். இந்தக் குட்டிக் குழந்தைதான் நியூசிலாந்து நாடாளுமன்றத்தின் தற்போதைய வைரல். அனைத்து உறுப்பினர்களும் குழந்தையை மாறி மாறி கொஞ்சி விளையாடி வருகின்றனர்.

Dads with surrogate mother and baby
Dads with surrogate mother and baby

நெட்டிசன்கள் பலர், `தொடர்ச்சியாக வலம் வரும் சர்ச்சை செய்திகளுக்கு மத்தியில் ஒரு நெகிழ்ச்சியான பாசிட்டிவ் செய்தி இது’ எனப் பாராட்டி வருகின்றனர். இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல்முறை இல்லை. நியூசிலாந்து நாட்டின் பிரதமர் அர்டெர்ன், ஐ.நா-வில் தன்னுடைய முதல் உரையின்போது தன்னுடைய கைக்குழந்தையுடன் சென்று உலகத்தின் கவனத்தை ஈர்த்தார்.

அடுத்த கட்டுரைக்கு