Published:Updated:

திரளியா அப்பத்தாவும் ஓசி பணியாரமும்! #MyVikatan

thiralia grandma
thiralia grandma

அதிகாலையிலேயே அடுப்பு கனகனன்னு எரியும். அடுப்பு எரிக்க அப்பத்தா ஊதும் ஊதுகுழாய் ஓசை, குடிசைக்கு வெளியிலையும் கேக்கும்.

காலைல நாலு மணிக்கே அடுப்பு எரியுதுன்னா, அது எங்க திரளியா அப்பத்தா வீடுதான்.

மாடக்குளம் மேலத்தெருவுல ரோட்டு மேல இருக்கும் எங்க அப்பத்தாவின் குடிசை. அதிகாலையிலேயே அடுப்பு கனகனன்னு எரியும். அடுப்பு எரிக்க அப்பத்தா ஊதும் ஊதுகுழாய் ஓசை குடிசைக்கு வெளியிலையும் கேக்கும்.

முற்றிலும் புகை சூழ்ந்து கருப்பாகிப்போன ஓலைகளால் ஆன குடிசை அது.

நல்லா குனிஞ்சுதான் உள்ள போகணும். அதிகாலை குளிருக்கு அப்பத்தா குடிசை சொர்க்கமா இருக்கும்.

thiralia grandma
thiralia grandma

எனக்குத் தெருஞ்சு, ரவிக்கை இல்லாம ஒரு பச்சை கலர் நூல் சேலைய சுத்திக்கிட்டு அடுப்பு பக்கத்துலயே உக்காந்திருக்கும் அப்பத்தா.

மண் சுவர் குடிசை அது. ஒரு பக்க சுவருல நாலு ஆணி இருக்கும். ஒண்ணுல முருகன் சாமி காலண்டர் அட்டை தொங்கிட்டு இருக்கும்

ரெண்டு சாமி போட்டா இருக்கும். புகை மண்டிப்போய் காய்ந்து உதிர்ந்துபோகக் காத்திருக்கும் பழைய பூ மாலைகள் இருக்கும்.

ஒரு ஆனியில மஞ்சப் பை ரெண்டுமூணு தொங்கிட்டு இருக்கும்.

ஒரு மூலையில மண் சட்டிகளும் மரக் கூடைகளும் இருக்கும். கூடவே நாலு ஈயப் பாத்திரமும். அவ்ளோதான் அந்த வீட்டுக்குள்ள நான் பார்த்தது.

குனிஞ்சு போற கூரையின் தலையில கூரைப் பூ சொருகி இருக்கும். அது ஒவ்வொரு தடவையும் தலையில தட்டும்.

வீட்டுக்குள்ளயே கொல்லைப்புறம் இருக்கும். அங்க சுத்தி... தட்டி அடைச்சி, ஒரு கழிப்பிடம் இருக்கும்.

குளிக்க சிறுநீர் கழிக்க. அவ்ளோதான். அத ஒட்டி ஒரு கொய்யா மரம் இருக்கும்.

ஒருதரம் மட்டும்தான் நான் அங்கிட்டு போயிருக்கேன்.

Representational Image
Representational Image

மத்தபடி எப்பவும் அப்பத்தாவின் அடுப்புகிட்ட இருக்கிற மிஞ்சி இருக்கும் கருப்பட்டி பால் சட்டி கிட்டத்தான், சேவல் கூவும் நேரமும் நான் அங்க இருக்கும் நேரமும் ஒண்ணா இருக்கும்.

ஒத்தரூவா கொண்டுக்கிட்டு போய்டுவேன். வேற எதுக்கு? பணியாரம் திங்கத்தேன்.

அது, திங்கத் திங்க தேன்.

சுடச்சுட அப்பத்தா சுடும் அந்த கருப்பட்டிப் பணியாரம் இருக்கே... செமையா இருக்கும்.

உள்ள போனதும் அப்பத்தா கேக்குற மொதோ கேள்வி, ஏலேய் கருவாயா, பல்லு விலக்குநியாடா தான்...

நான் பதிலே சொல்றதில்ல. எப்பவும் அதுவும் திரும்ப கேக்குறதும் இல்ல.

முதல் ஆளா நான் போய்ட்டதுனால, எனக்கு அங்க அடுப்பெறிக்கிற வேலைய குடுக்கும் அப்பத்தா.

அது, மாவு கலக்கும். இல்ல... கருப்பட்டி காச்சும். நான் அடுப்புக்கு வெளில எரிஞ்சு வர்ற குச்சிய அடுப்புக்குள்ள தள்ளிவிடணும். அதான் நம்ம வேல.

கொஞ்ச நேரத்துல வயலுக்குப் போறவங்க, நைட்டு பூராம் வயல்ல இருந்து காவ காத்துட்டு வர்றவங்க, மொதோ பஸ்ஸுக்கு போறவங்கன்னு நிறைய பேர் பணியாரம் வாங்க வந்திடுவாங்க.

Representational Image
Representational Image

அப்பத்தா பணியாரம் சுட்டு விக்க ஆரமிக்கும். இப்போ நம்ம வேல என்னன்னா...

அப்பத்தா, கருகிப்போய், பிஞ்சுபோய் வர்ற பணியாரத்த எல்லாம் விக்காம ஒரு தட்டுல போட்டுடும்.

அத எடுத்து, மிஞ்சி இருக்கிற கருப்பட்டி பால்ல தொட்டுத்தொட்டு திங்குறதுதான்.

இது, ஏழு மணி வரை தொடரும். அப்புறம், அப்பத்தா நான் கிளம்புறேன். பள்ளிகோடத்துக்கு போகணும்னு சொன்னதும்

அப்பத்தா கேக்கும், ஏண்டா பணியாரம் வாங்கலயான்னு.

வேணாம் அப்பத்தான்னு சொன்னதும், ஏண்டா ஓசி பணியாரமே வயிறு நிரஞ்சுருச்சான்னு சொல்லி பொக்கைவாய காட்டி சிரிக்கும்.

நானும் வெட்கப்பட்டுக்கிட்டே ஆமாத்தான்னு சொல்லிட்டு ஓடிருவேன்.

நாளைக்கும், விடிஞ்சதும் வாடான்னு அப்பாத்தா சொல்றது காத்துல மெதுவா கேக்கும். ரெண்டு சந்து தாண்டி ஓடுற எனக்கு...

என்றும் மறவா அனுபவங்கள்

-மாடக்குளம் இரா.மு.தனசேகரன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு