
''அரசு இவரைப் போன்ற ஆட்களை விட்டுவைக்கக்கூடாது'' என்பதோடு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
'தமிழ்நாடு வெதர்மேன்’ என அறியப்படுபவர் பிரதீப் ஜான். வானிலையைக் கணித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த தன்னார்வலரான இவர் 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது மக்களிடையே மிகவும் பிரபலமானார். கடந்த வாரம் நிவர் புயலின் போதும் கூட இவரது கணிப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் தமிழக மக்கள். லட்சக்கணக்கானோர் இவரை சமூக வலைதளங்களில் பின்தொடர்கிறார்கள். இவர், தன்னை பற்றித் தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டுவருவதாக வேதனை தெரிவித்து நேற்று பதிவிட்டிருக்கிறார்.

"சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரனைப் பற்றி வேண்டுமென்றே அவதூறு பரப்பிவருகிறார் பிரதீப் ஜான். அவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவுசெய்யவேண்டும்'' என இளங்கோ பிச்சாண்டி என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட அதை மேற்கோள் காட்டி சிலர் தன்மீது வன்மத்தை கொப்பளித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் பிரதீப் ஜான். அந்தப் பதிவில் "பிரதீப் ஜான் ஒரு ஏமாற்றுகாரர், நிவர் புயலின் போதும் அவரது கணிப்பு தவறாகத்தான் இருந்திருக்கிறது" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பகிர்ந்த ராமச்சந்திரன் ராமநாதன் என்பவர், "அரசு இவர் போன்ற ஆட்களை விட்டுவைக்க கூடாது. பொதுவெளியில் மக்கள் மத்தியில் இவர் கொல்லப்படவேண்டும்'' என்று பதிவிட்டிருக்கிறார்.
இப்படி தன்னை பற்றி அவதூறு பரப்பும் கணக்குகளை மேற்கோள் காட்டி பதிவிட்டிருக்கும் பிரதீப் ஜான், தன்னை பற்றி மக்களிடையே பல பொய்கள் பரப்பப்படுகின்றன என அவற்றுக்கு விளக்கமும் அளித்திருக்கிறார். "நான் மதமாற்றத்துக்கு ஆதரவு அளித்து எந்த பதிவுமே வெளியிட்டதில்லை. எந்த மதமாக இருந்தாலும் அதை நான் ஆதரிப்பதும் இல்லை. அப்படி என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே போலியானவை.
என்னை எதிரியாகப் பார்த்தாலும் கடினமான விஷயங்களைச் சரியாகக் கணிக்கும்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தைப் பாராட்டி பதிவுகளிட்டிருக்கிறேன். எனது அனைத்து நேர்காணல்களிலும் இந்திய வானிலை ஆய்வு மையத்திற்கு எனது ஆதரவைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறேன்.
என்னைப் பின்தொடருங்கள் என நான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. எனது பதிவுகள் பிடிக்கவில்லை என்றால் அதைப் புறம் தள்ளிவிட்டு மற்ற வேலைகளைப் பாருங்கள். நான் ஒரு அரசு நிறுவனத்தில் பணிபுரியும் சாதாரண மனிதன். எனக்குக் கிடைக்கும் நேரத்தில் மக்களுக்கு இந்த தகவல்களை வழங்குகிறேன். இது நானாக ஆர்வம் எடுத்துச் செய்யும் ஒரு வேலை. என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்கும் இது போன்ற பதிவுகளைப் பார்த்து மனமுடைகிறேன். என் மீது வெறுப்புணர்வை கக்கும் ரிப்ளைகள் பலவற்றையும் அந்த பதிவில் என்னால் பார்க்க முடிகிறது. நான் கொல்லப்பட வேண்டும் என்று எல்லை மீறிவிட்டார்கள்' என்று பதிவிட்டிருக்கிறார் பிரதீப் ஜான்.
இவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வதா என்றும் யோசித்துக்கொண்டிருப்பதாகவும் இந்த பதிவில் அவர் தெரிவித்திருந்தார். இது குறித்துப் பேச அவரைத் தொடர்பு கொண்டோம். "இதைப் பற்றி மேலும் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை" என்றார்.