Published:Updated:

ஆஸ்திரேலியா: வீட்டில் திடீர் தீ - உறங்கிக்கொண்டிருந்த உரிமையாளரைக் காப்பாற்றிய கிளி!

கிளி
கிளி ( Representational Image )

ஆஸ்திரேலியாவில், வீட்டில் தீப்பற்றியது தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்த உரிமையாளரை எழுப்பி, அவரது செல்லப்பிராணி கிளி ஒன்று காப்பாற்றிய நிகழ்வு நடந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரத்தைச் சேர்ந்தவர் ஆன்டன் குயென் (Anton Nguyen). அவர், தன் வீட்டில் செல்லப்பிராணியாக எரிக் என்ற கிளியை வளர்த்துவருகிறார். புதன்கிழமை அன்று குயென் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென அவருடைய கிளியான எரிக் சத்தம்போடத் தொடங்கியிருக்கிறது. இதனால் தூக்கம் கலைந்த ஆன்டன், அறையின் வெளிப்புறம் சென்று பார்த்தபோது, தன் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது கிளி தீப்பிடித்த ஆரம்பநிலையிலேயே எச்சரித்ததால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். அவருடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டால் எச்சரிக்கும் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. அந்தக் கருவி எச்சரிக்கை செய்வ்தற்கு முன்னரே எரிக், தன் உரிமையாளரை எச்சரித்துவிட்டது. இதனால் தீப்பிடித்த இடத்திலிருந்து வெளியேற அவருக்கு போதுமான நேரம் கிடைத்தது.

தீ
தீ
representational image

``நான் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் என்னுடைய செல்லப்பிராணி கிளி (எரிக்) கத்திக்கொண்டிருந்தது. அதனால்தான் எனக்குத் தூக்கம் கலைந்தது. அறையிலிருந்து வெளியே வந்து பார்த்த பிறகுதான், எங்கள் வீட்டில் தீப்பற்றியிருந்ததை உணர்ந்தேன்’’ என்று ஆன்டன் குயென் கூறினார். விபத்து ஏற்பட்டுவிட்டது என்று கூறிய ஆன்டன், தீ விபத்து எச்சரிக்கைக் கருவியின் அலாரம் சத்தம்கூட தனக்குக் கேட்கவில்லை என்றும் கூறினார்.

மேலும் அவர், `நான் எரிக்கோடு, கதவைத் திறந்து வீட்டின் பின்புறம் சென்று பார்த்தேன். அங்கே தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. அதன் பிறகு வீட்டிலிருந்து சில பொருள்களை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டேன்’’ என்றும் கூறினார்.

கிளி
கிளி
Representational Image

இது குறித்துப் பேசிய குயின்ஸ்லாந்து தீயணைப்புத்துறை ஆய்வாளர் கேமரூன் தாமஸ், `எரிக் மிகவும் புத்திசாலிக் கிளி. அதனுடைய உரிமையாளர் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில், அவரை எச்சரிக்கை செய்து காப்பாற்றியிருக்கிறது. அவரை உறக்கத்திலிருந்து எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் மீண்டும், `ஆன்டன், ஆன்டன்...’ என்று தனது உரிமையாளரைப் பார்த்து சத்தமிட்டுக்கொண்டேயிருந்திருக்கிறது. அதனால்தான் அந்தக் கிளியுடன் சேர்ந்து உரிமையாளரும் காப்பற்றப்பட்டார்’’ என்றார்.

விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் அருகிலிருக்கும் மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், அது குறித்து விசாரித்துவருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு