Published:Updated:

`ஐரோப்பிய கட்டமைப்பு; மண் தெரியாத சாலைகள்!’- பிரமிக்க வைக்கும் பவுன்ட்ஷோலிங் நகரம் #MyVikatan

பூடான் நுழைவுவாயில்

சிலிகுரியைக் கடந்தவுடன் இமயமலை தொடங்குகிறது. டீஸ்டா ஆற்றை ஒட்டி வளைந்து, வளைந்து பாதை செல்கிறது. இரண்டரை மணி நேரப் பயணத்தில் கலிம்பாங் ஊரை அடைகிறோம்.

`ஐரோப்பிய கட்டமைப்பு; மண் தெரியாத சாலைகள்!’- பிரமிக்க வைக்கும் பவுன்ட்ஷோலிங் நகரம் #MyVikatan

சிலிகுரியைக் கடந்தவுடன் இமயமலை தொடங்குகிறது. டீஸ்டா ஆற்றை ஒட்டி வளைந்து, வளைந்து பாதை செல்கிறது. இரண்டரை மணி நேரப் பயணத்தில் கலிம்பாங் ஊரை அடைகிறோம்.

Published:Updated:
பூடான் நுழைவுவாயில்

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

புத்த கயாவில் இருந்து புறப்பட்டு மீண்டும் வடக்கு நோக்கிப் பயணித்தோம். கங்கையின் கரையில் அமைந்துள்ள பாட்னா நகரைக் கடந்தோம். போக்குவரத்து நெருக்கடியும் மக்கள் நெருக்கடியும் மிகுந்த நகரம். உலகத்தின் மிகத் தொன்மையான நகரங்களில் ஒன்று பாட்னா. பாடலிபுத்திரம் என்றழைக்கப்பட்டது. ராமாயணத்திலும் மகாபாரதத்திலும், அதர்வண வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நகரம். கி.மு 490-ம் ஆண்டு அஜாதசத்ருவால் நிர்மாணிக்கப்பட்டது. அசோகப் பேரரசர் பிறந்த இடம். மகதப் பேரரசின் தலைநகரம்.

பாட்னா நகர்
பாட்னா நகர்

இந்த நகரத்தின் மேல் எனக்கு தனிப்பட்ட பாசம் இருப்பதற்கு வேறு ஒரு காரணமுண்டு. சமூகநீதிப் போராட்ட வீரர்களில் ஒருவரான லாலு பிரசாத் யாதவ் ஆட்சி செய்த ஊர் இது. மிகப்பெரிய ஊழல்வாதியாகச் சித்திரிக்கப்பட்டு, மூன்று முறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் வாடுகிறார் லாலு. அவருடைய ஊழலின் அளவு, பஞ்சாபில் திருமண வரவேற்புகளுக்குச் செய்யப்படும் செலவை விடச் சிறியது என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடப்பட்டது. ஊழலில் சிறியது, பெரியது என்று எதுவும் கிடையாது. ஊழலுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் லாலு தண்டனை பெற்றது, அவர் எடுத்த அரசியல் நிலைப்பாடுகளுக்காகத்தான் என்பது என்னுடைய சொந்தக் கருத்து.

கூட்டத்தை ஈர்க்கக்கூடிய அற்புதமான பேச்சாளர் லாலு. 22 வயதில் பாட்னா நகர அனைத்துக் கல்லூரி மாணவர் சங்கத்தின் தலைவராக உயர்ந்தார். 42 வயதில் முதலமைச்சரானார். அத்வானி, பீகார் வழியாக ரத யாத்திரை சென்றபோது அதைத் தடை செய்தார். அதையும் மீறி அத்வானி சென்றபோது அவரைக் கைது செய்தார். வேறு எந்த மாநிலத்திலும் ரதயாத்திரைக்காக அத்வானி கைது செய்யப்படவில்லை. லாலு ஒரு மக்கள் தலைவர்.‌ டில்லியில் அமைச்சர்கள் உயரமான, பூட்டப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் வசிப்பார்கள்.

பெரிய கதவின் பக்கம் இருக்கும் சிறிய கதவின் வழியாகவே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அமைச்சர்களைப் பார்ப்பதற்கு, முன்பே நேரம் வாங்கியிருக்க வேண்டும். துப்பாக்கி ஏந்திய போலீஸார் கண்காணிப்பின் கீழே நீங்கள் செல்ல வேண்டும். ஆனால் லாலுவின் வீடு வித்தியாசமானது. தோட்டம் நிறைய பீகாரிகள் உட்கார்ந்திருப்பார்கள். சிலபேர் சமையல் செய்துகொண்டிருப்பார்கள். அறையில் தனியாக இருக்க மாட்டார். சுற்றிலும் ஆட்கள் இருப்பார்கள். சில பேர் வந்து கொண்டும், போய்க்கொண்டும் இருப்பார்கள். எளிமையின் சிகரம் லாலு.

பூட்டான் பயணம்
பூட்டான் பயணம்

புத்த கயாவிலிருந்து முசாஃபர் நகர் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருந்தது. பல இடங்களில் சாலைப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. இரவு முசாஃபர் நகரில் தங்கிவிட்டு காலை புறப்பட்டோம். நாங்கள் மிகக் குறைவான பொருள்களை எடுத்துச் சென்றோம். கார் இருக்கிறது என்பதற்காக பெரிய, பெரிய பெட்டிகளை எடுத்துக்கொள்ளவில்லை. பயணத்தின்போது எவ்வளவு பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது ஒரு கலை.

ரிக் ஸ்டீவ்ஸ் என்ற அமெரிக்கப் பயண எழுத்தாளர் 23 ஆண்டுகளாக ஐரோப்பாவுக்குச் சுற்றுப்பயணம் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறார். பயணம் செல்லும்போது இரண்டு, மூன்று பைகள் எடுத்துச்செல்லக் கூடாது என்கிறார். இரண்டு வாரமாக இருந்தாலும், இரண்டு மாதங்களாக இருந்தாலும் அவர் கொண்டு போவது ஒரே ஒரு கைப்பை. அவருடைய காணொலியில் பயணத்துக்கு எப்படிப்பட்ட பைகளை எடுத்துச் செல்வது என்பதைப் பற்றி விளக்கியிருப்பார்.

முசாஃபர் நகரிலிருந்து சிலிகுரி செல்லும் சாலை மிக நன்றாக இருந்தது. நான்கு வழிச்சாலை. இருபுறமும் கண்ணுக்கெட்டிய வரை பச்சைப் பசேலென்ற கோதுமை வயல்கள். இடையிடையே கடுகு வயல்கள். சிலிகுரியை நெருங்கும்போது இரண்டு பக்கமும் தேயிலைத் தோட்டங்கள்.‌ இந்தத் தோட்டங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை. பொதுவாக தேயிலைத் தோட்டங்கள் மலைப்பாங்கான பகுதிகளில் இருக்கும்.

மலைச்சரிவில் இருப்பதால் வேர்களில் தண்ணீர் தேங்காது. அப்படி இருப்பது தேயிலைப் பயிருக்கு அவசியம் என்று நான் அறிவேன். ஆனால், இந்தப் பகுதியில் தேயிலைத் தோட்டங்கள் நெல் வயல்கள் போல சமதரையில் காணப்படுகின்றன. தேயிலை ஒரு மரப் பயிர். அதனுடைய கொழுந்துகளைத் தொடர்ந்து வெட்டிக்கொண்டே இருப்பதால் அவை போன்சாய்கள் ஆகிவிடுகின்றன.

பூடான் பயணம்
பூடான் பயணம்

சிலிகுரியைக் கடந்தவுடன் இமயமலை தொடங்குகிறது. டீஸ்டா ஆற்றை ஒட்டி வளைந்து, வளைந்து பாதை செல்கிறது. இரண்டரை மணி நேரப் பயணத்தில் கலிம்பாங் ஊரை அடைகிறோம். சில்லென்ற தட்பவெட்ப நிலை. மறுநாள் எங்கள் காருக்கு மாசு சான்றிதழ் வாங்குவதற்காக கடைகளைத் தேடினோம். அன்று ஞாயிற்றுக்கிழமை. கடைகளுக்கு விடுமுறை. பெயர்ப் பலகையில் இருந்த கைப்பேசி எண்ணை வைத்து ஒருவரை அழைத்தோம். அவரும் உடனடியாக வந்தார். ஆனால், அவருடைய கணினியில் எங்கள் கார் பதிவைக் கண்டறிய முடியவில்லை. அதனால் மாசு சான்றிதழ் வாங்க முடியவில்லை.‌ சிலர் பூடானின் நுழைவாயிலான பவுன்ட்ஷோலிங் நகரிலேயே மாசு சான்றிதழ் வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

மேற்குவங்காளத்தில் நாங்கள் பார்த்தவர்கள் எல்லோரும் சரளமாக ஆங்கிலம் பேசினார்கள். நாங்கள் கேட்க வேண்டியதை எளிதாகக் கேட்டு, பெற வேண்டியதை எளிதாகப் பெற முடிந்தது. தெலுங்கு பேசுவதில் எனக்கு சிரமமில்லை. அதனால் ஆந்திராவிலும் சிரமமில்லை.‌ மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இந்தி மட்டும்தான் பேசுமொழி.

ஆங்கிலம் கொஞ்சம்கூடத் தெரியாது. அப்படியானால் வட இந்தியாவில் பயணிப்பதற்கு இந்தி மிகவும் அவசியமா? கண்டிப்பாக இந்தி தெரிந்தால் நன்றாக இருக்கும்.‌ பயணங்களின்போது நாம் அதிகம் பயன்படுத்தக்கூடிய சொற்கள் ஐம்பது இருக்கலாம். ஒரு மொழியில் தினசரி உரையாடல்களை நடத்துவதற்கு, அதிகபட்சமாக 100 சொற்களே தேவைப்படும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒரு மொழியில் ஆயிரம் சொற்களை அறிந்தால் அந்த மொழியில் இலக்கியம் படிக்கலாம்.

பூடான் பயணம்
பூடான் பயணம்

பயணத்தின்போதோ அல்லது வேறு அலுவல் நிமித்தமாகவோ உரையாடுவதற்கான நூறு சொற்களைக் கற்றுக்கொள்வதற்காக, பல்வேறு மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்ட இந்தியக் குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்திலிருந்து இந்தி கற்பிக்க வேண்டும் என்று சொல்வது அபத்தம். இணையம் தகவல் தொடர்பை எளிதாக்கியிருக்கிறது.

'முசாபர் நகர் போகும் வழி எது?' என்று கேட்க, அதை தட்டச்சு செய்து, இந்தியில் என்ன சொல்ல வேண்டும் என்று கூகுளைக் கேட்டால் பதில் கிடைத்துவிடும். இந்தி பேசும் மாநிலங்களுக்குப் போகும்போது மட்டுமல்ல, வெளிநாடுகளுக்குச் சென்றாலும் கூகுளைப் பயன்படுத்தி பேசலாம். அந்தந்த நாட்டு மொழிகளில் பேசுவது, அவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். தகவல் தொடர்பை எளிமையும் இனிமையுமானதாகவும் மாற்றும்.

அடுத்த நாள் காலை கலிம்பாங்கிலிருந்து பவுன்ட்ஷோலிங் நகரை நோக்கிப் பயணித்தோம். கலிம்பாங்கிலிருந்து மீண்டும் தீஸ்தா நதி வரை இறங்கி, அதன் ஓரத்திலேயே சென்று, கொரொனேசன் பாலம் வழியாக தீஸ்தா நதியைக் கடந்து வடக்கு நோக்கிப் பயணிக்கிறோம். நன்றாகப் போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை. வழி நெடுகிலும் நெல்வயல் போன்ற சமதரையில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்கள். மாலை 4 மணிக்கு பவுன்ட்ஷோலிங் நகரை அடைந்தோம்.

பூடான் வாயில் நம்மை வரவேற்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நுழைகிற அத்தனை பேருக்கும் காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதித்து அனுப்புகிறார்கள். பவுன்ட்ஷோலிங் நகரின் அமைப்பு பிரமிக்க வைக்கிறது.‌ ஐரோப்பிய கட்டமைப்போடு உள்ள நகரம் இது. சிறிதும் மண் தெரியாமல் அமைக்கப்பட்ட சாலைகள். தெளிவாக வரையப்பட்ட சாலைக் குறியீடுகள். சாலையின் இருபுறமும் பாதசாரிகளுக்கான நடைமேடைகள். முழுவதும் மூடப்பட்ட கழிவுநீர் வாய்க்கால்கள், நகரின் நடுவில் பூங்காக்கள், பௌத்த கோயில்கள், நவீன விளையாட்டு மைதானம்.‌

பூடான்
பூடான்

ஆட்டோக்கள் இல்லை. இருசக்கர வாகனங்கள் மிக மிகக் குறைவு. யாரும் ஹார்ன் அடிப்பதில்லை. நம்மையறியாமல் நாமும் சாலை விதிகளை முழுமையாக கடைப்பிடிக்கத் தொடங்குகிறோம். 1990-களுக்கு முன்பு தாய்லாந்து, வியட்நாம், கொரியா போன்ற நாடுகள் இந்தியாவைப் போலதான் இருந்தன. உலகமயமாக்கலுக்குப் பிறகு பெற்ற அபரிதமான பொருளாதார வளர்ச்சியை அந்த நாடுகள், அடிப்படை கட்டுமானத்தைப் பெருக்குவதற்குப் பயன்படுத்தின.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு வருவாயும் கடந்த 28 ஆண்டுகளில் பல மடங்காகியிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் தாய்லாந்து, வியட்நாம், கொரியா ஆகிய நாடுகள் தங்கள் நகரங்களை ஐரோப்பிய நகரங்களைப் போல கட்டமைத்திருக்கின்றன. இந்திய நகரங்களைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை! இந்திய அரசாங்கங்கள் சொல்லும் `உலகத்தரம் வாய்ந்த சாலைகளின்' உண்மையான தரத்தை அறிந்துகொள்ள, மற்ற நாடுகளில் உள்ள சாலைகளைப் பார்க்க வேண்டும்.

இந்தியாவின் பிரச்னை ஊழலா அல்லது அறிவியல் கண்ணோட்டமில்லாமல் இருப்பதா என்பது மேடைகள் போட்டு விவாதித்துக்கொண்டே இருக்க வேண்டிய விஷயம்!

இரவு `தி ஆர்சிட்' என்ற விடுதியில் தங்கினோம். விடிந்தவுடன் குடியேற்ற அலுவலகத்துக்குச் சென்று எங்களுக்கும், எங்கள் காருக்கும் அனுமதிக் கடிதங்கள் வாங்க வேண்டும்!

பிறகு பாரோ நகரத்துக்குப் பயணம்!

- மருத்துவர் இரா.செந்தில் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தர்மபுரி தொகுதி)

கட்டுரையாளரின் முந்தைய பயணக் கட்டுரைகளைப் படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

முதல் நாள் - https://www.vikatan.com/news/travel/travel-on-the-road-and-live-the-life

இரண்டாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/story-of-william-lambton-who-measured-india

மூன்றாம் நாள் - https://www.vikatan.com/news/miscellaneous/william-henry-sleeman-suppressed-criminal-gangs-known-as-thuggee

நான்காம் நாள் - https://www.vikatan.com/lifestyle/travel/know-about-the-dhamek-stupa-at-sarnath-and-buddhas-preaching

ஐந்தாம் நாள் - https://www.vikatan.com/lifestyle/miscellaneous/reader-shares-gaya-travel-experience

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/