Published:Updated:

``உசுரக் கொடுத்தாவது 3 மகள்களையும் படிக்க வைப்பேன்!” - கொத்தடிமையிலிருந்து மீண்ட தந்தையின் போராட்டம்

மூத்த மகள்கள் இருவருடன் சஞ்சீவி
மூத்த மகள்கள் இருவருடன் சஞ்சீவி

படிப்பறிவு இல்லாமல் கொத்தடிமைகளாக இருந்து மீண்ட குடும்பம் இவருடையது. அந்த வேதனையில் தன் மூன்று மகள்களையும் படிக்க வைக்கப் பெரும் பாடுபடுகிறார் சஞ்சீவி.

பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய இருளர் சமூகத்துக்கு இன்றளவும் கல்வி எட்டாக்கனியாகவே இருக்கிறது. அரசுப் பள்ளியின் இலவசக் கல்வியைப் பெறுவதிலும்கூட அவர்களுக்கு ஏராளமான தடைகள் இருக்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அத்தகைய இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தின் தலைவர்தான் சஞ்சீவி. படிப்பறிவு இல்லாமல் கொத்தடிமைகளாக இருந்து மீண்ட குடும்பம் இவருடையது. அந்த வேதனையில் தன் மூன்று மகள்களையும் படிக்க வைக்கப் பெரும் பாடுபடுகிறார்.

இவரின் இரண்டு மகள்கள் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்கும் நிலையில், இளைய மகள் தேவிகா 600-க்கு 425 மதிப்பெண் பெற்று பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். இருளர் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்வதென்பது அரிதாகவே நடக்கும். அந்த வகையில், சஞ்சீவியின் மகள்கள் கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் ஆவலுடன் உள்ளனர். அதைவிடவும் சஞ்சீவிக்குத்தான் அதிக மகிழ்ச்சி. திருத்தணி அருகிலுள்ள பட்டாபிராமபுரத்தில் அமைந்திருக்கிறது அந்த இருளர் குடியிருப்பு. அதில், சிறிய வாடகை வீட்டில் வசித்துவரும் சஞ்சீவி, கொத்தடிமைகளாக இருந்து மீண்டு வந்த கதையைக் கண்ணீருடன் பகிர்ந்தார்.

``என் பூர்வீகம், திருவள்ளூர் மாவட்டம் காவேரி ராசபுரம். விவரம் தெரியிற பருவத்துக்கு முன்பே அம்மா இறந்துட்டாங்க. நான் ஸ்கூல் படிப்பை முழுசா முடிக்கலை. மளிகைக் கடை வேலைக்குப் போனேன். அப்பா இறந்த பிறகு தனியா வாழ்ந்தேன். 24 வயசுல கல்யாணம். என் மனைவியும் நானும் கூலி வேலைக்குப் போனோம். எங்களுக்கு வருமானம் போதலை. அதனால, கணக்கம்மாசத்திரம் என்ற ஊரில் இருந்த ஒரு ரைஸ் மில்லுக்கு மாமனார், மச்சான் குடும்பத்துடன் நாங்களும் வேலைக்குப் போனோம்.

நிரந்தரமா எல்லா நாளும் வேலை தர்றதா சொல்லி, மில்லுல இருந்த ரூம்லயே எங்களைத் தங்கிக்கச் சொன்னாங்க. பகல்ல நெல்லை ஊற வெச்சுட்டு, அதை இரவுல அவிச்சு காயவைக்கிற வேலை. தொடர்ச்சியா மூணு நாள் ஓயாம வேலை செஞ்சா, ஆறு பேருக்கும் சேர்த்து 400 ரூபாய்தான் கொடுப்பாங்க. சொன்னதுக்கு மாறா, மாசத்துல எல்லா நாளும் வேலை இருக்காது. அதனால ரைஸ் மில்ல வேலைச் செஞ்சாலும், அரிசி வாங்கவே காசில்லாம மில் முதலாளிகிட்ட கடன் வாங்குவோம். கடன் கொடுப்பார். ஆனா, எங்களுக்குச் சம்பளம் கொடுக்கிறப்போ கடனுக்குக் கொஞ்சம் பணத்தைப் பிடித்தம் செஞ்சுப்பார்.

ஒருகட்டத்துல மூணு குடும்பமும் வாங்கின மொத்தக் கடன் முப்பதாயிரமா ஆகிடுச்சு. எங்களுக்குப் பெரிசா படிப்பறிவும் அனுபவ அறிவும் இல்லை. எங்களைக் கொத்தடிமைகளா நடத்தினார், அந்த மில் முதலாளி. பிடித்தம் செஞ்ச பணம் எவ்வளவுனு எங்களுக்கு முறையா சொல்ல மாட்டார். அவருக்கு அஞ்சு வருஷத்துக்கு மேல கடன் கட்டினோம். செய்யிற வேலைக்கு உரிய வருமானமும் கிடைக்கலை. அசிங்கமா பேசுவார். ஒருகட்டத்துலதான் நாங்க கொத்தடிமைகளா அங்க இருப்பது தெரிஞ்சது. வெளி வேலைக்குப் போறோம்னா, வாங்கின கடனை கட்டிட்டுத்தான் வெளிய போகணும்னு ரொம்பவே அழுத்தம் கொடுத்தார். அங்க சுத்துவட்டாரத்துல குடியிருப்புகள் எதுவுமில்லை. யார்கிட்டயும் புகார் சொல்ல முடியாம கஷ்டத்துலயே வாழ்ந்தோம்” என்பவர் கொத்தடிமைகளாக இருந்த காலகட்டத்தில் எதிர்கொண்ட வலி மிகுந்த தருணங்களைப் பகிர்ந்தார்.

``உடம்பு சரியில்லைனாக்கூட அந்த மில் முதலாளி ஆஸ்பத்திரிக்கு அனுப்ப மாட்டார். அங்கிருக்கும்போது எங்க ரெண்டாவது பொண்ணு பிறந்தா. மனைவியைப் பிரசவத்துக்குக்கூட ஆஸ்பத்திரிக்கு அனுப்பலை. நடுராத்தியில் மில்லுலயே குழந்தைப் பிறந்துச்சு. முதலாளிகிட்ட கெஞ்சிக் கேட்டு அனுமதி வாங்கி, பக்கத்துல இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காலையிலதான் என் மனைவியைக் கூட்டிட்டுப்போனேன். அங்க மனைவிக்கு ஆறுதலா கொஞ்சநேரம்கூட இருக்க என் முதலாளி நேரம் தரலை. உடனடியா வேலைக்கு வந்துட்டேன். அப்ப என் பெரிய பொண்ணுக்கு மூணு வயசு. நல்ல துணிகூட இல்லாம எங்களுக்கு ஒத்தாசையா தரையைக் கூட்டுட்டு திரியும்.

நைட்டு சோறாக்கி, அதையே அடுத்த நாள் மதியம் வரைக்கும் வெச்சிருந்து சாப்பிடுவோம். அந்தச் சாப்பாடுகூட இல்லாம எங்க ரெண்டு பொண்ணுங்களும் பசியில அழுதிருக்கு. ஒருநாளைக்கு 20 ரூபாய் இருந்தாலே காய்கறிகள் வாங்கி குழம்பு வெச்சு சாப்பிடலாம்ங்கிற ஆசையில இருப்போம். அதனால தலைக்கு எண்ணெய்கூட வாங்க முடியாது. எங்க பொண்ணுங்க தலைமுடி செந்நிறத்துல இருக்கும். அதைப் பார்த்து அழுகாத நாளில்லை. என்ன சம்பாதிக்கிறோம், எவ்வளவு கடனுக்கு எடுத்துக்கிட்டாங்க, எவ்வளவு பாக்கி இருக்குனு எதுவுமே எங்களுக்குத் தெரியாது. அங்க வேலை செஞ்ச ஆறு வருஷமும் வேதனையான காலகட்டம். கடனை அடைச்சுட்டு எப்படா வெளிய போவோம்னு தவிச்சோம்” என்கிறார் தளர்வான குரலில்.

குடும்பத்துடன்
குடும்பத்துடன்

ஐ.ஜே.எம் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியால், அரசு அதிகாரிகள் ஒத்துழைப்புடன் சஞ்சீவியின் மொத்தக் குடும்பத்தினரும் அந்த அரிசி ஆலையில் இருந்து 2006-ம் ஆண்டு மீட்கப்பட்டிருக்கின்றனர்.

``கொத்தடிமையா இருந்து மீட்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கான அரசின் நிதியுதவியாக எனக்கும் என் மனைவிக்கும் தலா 20,000 ரூபாய் கொடுத்தாங்க. தவிர, ஐ.ஜே.எம் நிறுவனமும் சில உதவிகள் செய்தாங்க. அதெல்லாம் எங்க மறுவாழ்வுக்கு உதவியா இருந்துச்சு. பிறகு, திருத்தணியில் இருளர் குடியிருப்பில் குடியேறினோம். அப்போ என் மனைவிக்கு மூணாவது குழந்தை பிறந்துச்சு. மூட்டைத் தூக்குறது உட்பட பல்வேறு இடங்கள்ல கூலி வேலைக்குப் போனேன். அசராம உழைச்சேன். கொத்தடிமைகளா இருந்தப்போ, அந்த முதலாளி நாங்க வாங்கின கடன் விவரங்களை இங்கிலீஷ்லதான் எழுதுவார். அது எங்களுக்குப் புரியாமதான் ரொம்பவே கஷ்டப்பட்டோம்.

வீட்டு வேலையில் மகள்கள்
வீட்டு வேலையில் மகள்கள்

எங்கள மாதிரி ஒருபோதும் எங்க மூணு பொண்ணுங்களும் கஷ்டப்படக் கூடாது. கஷ்டப்பட்டாவது என் மகள்களை நல்லா படிக்க வெக்கணும்னு தீர்க்கமா முடிவெடுத்தேன். அதனால பணத்தைச் சேமிச்சு வெச்சு, மூத்த பொண்ணையும் ரெண்டாவது மகளையும் ஒண்ணாவே தனியார் ஸ்கூல்ல சேர்த்துவிட்டேன். மூணு மகள்களையும் அஞ்சாவது வரைதான் என்னால தனியார் ஸ்கூல்ல படிக்க வைக்க முடிஞ்சது. அப்புறம் கவர்மென்ட் ஸ்கூல்ல இங்கிலீஸ் மீடியத்துல சேர்த்துவிட்டேன். காமர்ஸ் குரூப் படிச்ச ரெண்டு மகள்களும் ப்ளஸ் டூ முடிச்சுட்டாங்க. மூத்த பொண்ணு தேவி 269 மார்க்கும், ரெண்டாவது பொண்ணு தேவிகா 425 மார்க்கும் எடுத்திருக்காங்க. மூணாவது பொண்ணு தேவயானி ஒன்பதாவது போறா” என்பவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

தந்தையை ஆசுவாசப்படுத்திவிட்டு தேவியும் தேவிகாவும் பேசுகிறார்கள். ``அப்பாவும் அம்மாவும் எங்களுக்காகப் பட்ட கஷ்டங்களைச் சின்ன வயசுல இருந்தே பார்த்து வளர்ந்திருக்கோம். ராத்திரி, பகல்னு அப்பா பட்ட கஷ்டங்களைப் பார்த்து பல நாள்கள் அழுதிருக்கோம். எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்க மாட்டாங்க. முடிஞ்ச அளவுக்கு நாங்களும் படிச்சோம். `புது புக் வேணும், டிரஸ் வேணும்’னு எது கேட்டாலும், ஒருபோதும் மறுப்பு சொல்லவே மாட்டார். உடனே ஆசைகளை நிறைவேத்தி, நாங்க சிரிக்கிறதைப் பார்த்து சந்தோஷப்படுவார். `எதைப் பத்தியும் கவலைப்படக் கூடாது. ஆசைப்பட்ட படிப்பை படிக்கிறது மட்டும்தான் நீங்க எனக்குச் செய்ற ஒரே கைம்மாறு’ன்னுதான் தொடர்ந்து சொல்வார்.

மூணு பொண்ணுங்களும் ஆசைப்பட்ட எல்லா படிப்பையும் படிச்சுட்டு, நல்ல வேலைக்குப் போய் சுய அடையாளத்தோடு வாழணும். அதுக்காக என் உசுரு இருக்கிற வரைக்கும் உழைக்கத் தயாரா இருக்கேன்.
சஞ்சீவி

ரெண்டு பேரும் ஒண்ணாவே பி.காம் படிக்க ஆசைப்படறோம். அதுக்காகப் பல காலேஜ்ல விண்ணப்பம் வாங்குறத்துக்கு அப்பா இப்போ முயற்சிகள் எடுக்கறார். ரொம்பவே ஏழ்மையான குடும்பம்தான் எங்களுது. அதனால, எங்களை காலேஜ் சேர்க்க பணத்துக்கு அப்பா ரொம்பவே கஷ்டப்படுறார். அதை நினைச்சாதான் எங்களுக்கு வருத்தமா இருக்கு. `அதைப் பத்தி நீங்க கவலைப்படக்கூடாது. நான் பார்த்துக்கறேன். காலேஜ்ல நல்லா படிக்கிறது மட்டும்தான் உங்க வேலை’ன்னு மட்டும்தான் சொல்வார். அப்பாவும் அம்மாவும் ரைஸ் மில் வேலைக்குப் போறாங்க. அப்பாவுக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. எங்களைப் படிக்க வைக்க, குடும்பக் கஷ்டத்துக்காக உடல் வலியைக்கூட கண்டுக்காம, லீவ் போடாம 15 வருஷமா ஓயாம உழைக்கிறார். நாங்க வேலைக்குப் போய், அவரை உட்கார வெச்சு சாப்பாடு போடணும்ங்கிறதுதான் எங்க ஒரே ஆசை’’ - இருவரின் கண்களும் கலங்குகின்றன.

``இப்பவரை வாடகை வீட்டுலதான் இருக்கோம். என் ஆசைப்படி சொந்த வீடு வாங்க முடியாட்டியும்கூட, பொண்ணுங்களோட ஆசையை நான் நிறைவேத்தாம விட்டதில்லை. சுத்தியிருக்கிற எங்க இருளர் சமூக மக்களின் பிள்ளைகள் சரியா ஸ்கூல் போகாம, சின்ன வயசுலயே வேலைக்குப் போகும் கஷ்டத்துல இருக்காங்க. பெண் குழந்தைகளைச் சின்ன வயசுலயே கல்யாணம் செய்து கொடுத்திடுவாங்க. ஆனா, கல்வி மட்டும்தான் எங்க சமூகத்தை மேம்படுத்தும்னு நான் உறுதியா நம்பறேன். அதனால, எங்க சமூக மக்கள் கூட்டத்துக்கு நடுவே எங்க மூணு பிள்ளைகளும் சந்தோஷமா ஸ்கூலுக்கு அனுப்பினேன்.

தாயுடன் தேவி, தேவிகா
தாயுடன் தேவி, தேவிகா

அடுத்து எங்க ரெண்டு பொண்ணுங்களும் காலேஜ் போகணும். ஆசைப்பட்ட எல்லா படிப்பையும் அவங்க படிச்சுட்டு, நல்ல வேலைக்குப் போய் சுய அடையாளத்தோடு வாழணும். அதுக்காக என் உசுரு இருக்கிற வரைக்கும் உழைக்கத் தயாரா இருக்கேன். இப்ப எங்ககிட்ட சேமிப்பு எதுவும் கிடையாது. மகள்களை காலேஜ்ல சேர்க்க கைவசம் பணம் இல்லை. ஆனாலும், காலேஜ் சேர்த்திடலாம்னு பெரிய நம்பிக்கை மட்டும் என் மனசுல நிறைஞ்சிருக்கு. அதுக்காகக் கடன் வாங்கியாவது மகள்களைப் படிக்க வைப்பேன். பொண்ணுங்க மூணு பேரும் சந்தோஷமா இருக்க எவ்வளவு கஷ்டத்தையும் எதிர்கொள்ளத் தயாரா இருக்கேன்” என்கிற சஞ்சீவியை மகள்கள் மூவரும் கட்டிக்கொள்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு