‘தினமலர்’ நிறுவனர் டி.வி.ஆரின் 5 மகன்களில் மூத்தவரும், ‘தினமலர்’ நாளிதழின் திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்பாசிரியருமான டாக்டர் வெங்கடபதி, வயது மூப்பு காரணமாக இன்று காலை 7 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 91.
கன்னியாகுமரி மாவட்டம் தழுவிய மகாதேவர் கோயில் என்ற கிராமத்தில், ‘தினமலர்’ நிறுவனர் டி.வி.ஆரின் 5 மகன்களில் மூத்த மகனாகப் பிறந்தார். நாகர்கோவில் எஸ்.எல்.வி. பள்ளியில் பள்ளிப் படிப்பும், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.எஸ்.சி-யும் படித்தார். அதைத் தொடர்ந்து சென்னை எம்.ஐ.டி-யில் ஏரோநாட்டிக்கல் எஞ்ஜினீயரிங் முடித்தார். இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமும் அதே காலகட்டத்தில் இங்குப் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் வாரங்கல்லில் உள்ள ரிஜினல் எஞ்சினியரிங் கல்லூரியில் (ஆர்.இ.சி) உதவிப் பேராசிரியராக பணிபுரிந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேற்படிப்புக்காக 1956-ல் அமெரிக்கா சென்றவர், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் எஞ்சிஜினியரிங்கில் பட்ட மேற்படிப்பு முடித்தார். இதைத் தொடர்ந்து போயிங் கம்பெனியில் வடிவமைப்புத் துறையில் சில காலம் பணியாற்றியவர், முனைவர் பட்ட ஆய்வுக்காக ஜெர்மனி சென்றார். அங்கு ஹானோவர் பல்கலைக்கழகத்தில் ஸ்ட்ரக்சரல் எஞ்சிஜினியரிங்கில் முனைவர் பட்டம் பெற்று, வளைகுடா பகுதியை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பொறியியல் நிறுவனம் ஒன்றில் சில காலம் பணிபுரிந்தார். தமிழ்நாட்டில் எண்ணூரிலும் மேட்டூரிலும் பவுண்டேஷன் நிறுவனம் அமைத்திருந்த மின்னாற்றல் நிலையங்களில் வடிவமைப்பு சார்ந்த பொறியியல் ஆலோசகராகப் பணியாற்றினார்.
1970-களில் திருச்சி பெல் (BHEL) நிறுவனத்தில் வடிவமைப்பு சார்ந்த பொறியியல் ஆலோசகராகப் பணியாற்றிவந்த நிலையில், 1972-73 காலகட்டத்தில் ‘தினமலர்’ நாளிதழின் பங்குதாரர் ஆனார். இவருக்கு 3 மகள்கள், பேரன், பேத்திகள் உள்ளனர். இவருடைய மனைவி கடந்த 1997-ல் காலமானார். வயது மூப்பு காரணமாக சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த வெங்கடபதி இன்று காலை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். இன்று மாலை 4.30 மணிக்கு கண்ணம்மாபேட்டையில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.
“‘தினமலர்’ நாளேட்டின் நெல்லை, நாகர்கோவில் பதிப்பாளர் திரு.வெங்கடபதி மறைவுற்றார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ‘தினமலர்’ ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று வெங்கடபதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.