Published:Updated:

`2020 டிப்ஸ் சேலஞ்ச்!’- பெண் பணியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கப் பாடகர்

டிப்ஸ் சேலஞ்சு
டிப்ஸ் சேலஞ்சு

டிப்ஸ்-சேலஞ்சைப் பலரும் செய்து வருகையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் அமெரிக்கப் பாடகர் வால் பெர்க்.

சமூக வலைதளங்களில் தினந்தோறும் புதுப்புது சேலஞ்ச்கள் ட்ரெண்டாகி வருகின்றன. பாட்டில் கேப் சேலஞ்சு, 10 இயர்ஸ் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச்.... என சமூக வலைதளங்களில் இணையவாசிகளால் விதவிதமான சவால்கள் விடப்படுகின்றன. அந்த சேலஞ்சுகளை முடிக்கும் நோக்கில் இளைஞர்கள் பலரும் அவற்றை முடித்து வீடியோ எடுத்துப் பதிவேற்றம் செய்து வருவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

அந்த வகையில் சமீபத்திய வைரல் சேலஞ்ச் என்றால் அது 2020 டிப்ஸ் -சேலஞ்ச்தான். பொதுவாக உணவகங்களுக்குச் செல்பவர்கள் சாப்பிட்டு முடித்த உடன் தங்கள் உணவுக்கான தொகையுடன் சேர்த்து தங்களுக்கு உணவு பரிமாறிய சர்வருக்கு டிப்ஸ் என்ற பெயரில் சிறு வெகுமதி வழங்குவது வாடிக்கை. சிலர் கொடுப்பார்கள் சிலர் கொடுப்பதில்லை, இந்த விஷயத்தை மையக்கருத்தாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த `2020 டிப்ஸ் -சேலஞ்ச்’.

டிப்ஸ் சேலஞ்சு
டிப்ஸ் சேலஞ்சு

இந்த `2020 டிப்ஸ் சேலஞ்ச்’ இணையத்தில் வலம் வரத் தொடங்கியதிலிருந்தே இதற்கு நல்ல வரவேற்பு எனலாம். உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டு விட்டு உணவுக்கான பில் தொகையுடன் சேர்த்து உணவு பரிமாறிய பணியாளருக்கு டிப்ஸ் கொடுப்பதே இந்த சேலஞ்ச். ஒரு விஷயத்தை எல்லாருமே செய்தாலும் கூட, யார் அதைப் பிரமாண்டமாகச் செய்தது என்பதுதான் முக்கியம், அந்த வகையில் இந்த டிப்ஸ் சேலஞ்சைப் பலரும் செய்து வருகையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் அமெரிக்கப் பாடகர் வால் பெர்க். ஹோட்டலுக்குச் சென்று உணவருந்திய வால் பெர்க், பில் தொகையுடன் 2020 டாலர்களை (இந்திய மதிப்பில் ரூபாய் 1.4 லட்சம் ) டிப்ஸாகக் கொடுத்து உணவகப் பணியாளரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

வால் பெர்கிற்கு உணவு பரிமாறிய பெண் பணியாளர் கொடுத்த பில்லில் #2020 டிப்ஸ் `சேலஞ்ச் அக்செப்டட்’ என்று எழுதி 2020 டாலர்களை அந்தப் பணியாளருக்கு வெகுமதியாகக் கொடுத்துள்ளார் வால் பெர்க். இது பற்றி ஒரு செய்தி நிறுவனத்திடம் கூறிய அந்தப் பெண் பணியாளர் ஃபிரான்சோனி ``இதுபோன்ற விஷயங்கள் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு போதும் நடக்காது" என்று கூறி மகிழ்ச்சி ததும்பினார்.

மேலும், ஃபிரான்சோனி அந்தப் பணத்தைக்கொண்டு தன் குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளதாகவும், தங்குவதற்கு ஒரு வீடு வாங்க உள்ளதாகவும், இது தனக்கு நடக்கும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். இதில் ஹை-லைட் என்னவென்றால் இந்த 2020 டிப்ஸ்-சேலஞ்சு 2019ஆம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31 அன்று நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாடகரின் இந்தச் செயல் இணையவாசிகள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

அவர்களும், வால் பெர்க் செய்ததைப் போலவே உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டு விட்டு மறக்காமல் தங்களால் முடிந்த தொகையை சர்வர்களுக்குக் கொடுத்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்தும் வருகின்றனர். சிலர் அதில் வால் பெர்க் அளவிற்கு என்னால் கொடுக்க இயலாது. ஆனால், நானும் அவர்களுக்கு என்னால் முடிந்ததைக் கண்டிப்பாகக் கொடுப்பேன் என்றெல்லாம் உறுதி பூண்டுள்ளனர்.

அமெரிக்கப் பாடகர் வால் பெர்க்
அமெரிக்கப் பாடகர் வால் பெர்க்

சமூக வலைதளங்களில் நாம் அன்றாடம் காண்பவற்றில் 10 க்கு 8 தேவை இல்லாததுதான் என்றாலும் கூட, சில நல்ல விஷயங்களும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

லட்சக்கணக்கில் வால் பெர்க்கைப் போன்று டிப்ஸ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், உணவு பரிமாறுபவர்களின் குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரப் பின்னடைவு முதலியவை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நம்மால் முடிந்ததைக் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த #2020 டிப்ஸ்-சேலஞ்சு.

அடுத்த கட்டுரைக்கு