Published:Updated:

ஏழைப் பெண்ணுக்கு சீர்வரிசை;கர்ப்பிணிக்கு உதவி;இளைஞனின் உயிர் மீட்பு; இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் கதை!

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

இரும்பு இதயம் கொண்ட காக்கிகளுக்கு மத்தியில் இளகிய மனம் படைத்த ராஜேஸ்வரி இதுபோன்ற சேவைகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார்.

ஏழைப் பெண்ணுக்கு சீர்வரிசை;கர்ப்பிணிக்கு உதவி;இளைஞனின் உயிர் மீட்பு; இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் கதை!

இரும்பு இதயம் கொண்ட காக்கிகளுக்கு மத்தியில் இளகிய மனம் படைத்த ராஜேஸ்வரி இதுபோன்ற சேவைகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார்.

Published:Updated:
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை தமிழகமே கொண்டாடுகிறது. சாலையோரம் மரம் முறிந்து விழுந்ததால் இறக்கும் தறுவாயில் மழைநீரில் கிடந்த ஓர் இளைஞரை அவசரமாக மீட்டு, அநாயாசமாக தோளில் தூக்கிச் சென்று ஆட்டோவில் ஏற்றி, மருத்துவமனையில் அனுமதித்து, அவர் உயிரைக் காப்பாற்றியுள்ளார் ராஜேஸ்வரி.
சென்னை ஷெனாய் நகர் கல்லறைக்கு அருகே கிடந்த இவர் இறந்துவிட்டதாகவே மக்கள் நினைத்தனர். போலீஸுக்கும் தகவல் கொடுத்தனர். ‘‘அவர் இரவிலிருந்து அங்கிருந்த மரத்தின் அடியில் படுத்திருந்திருக்கிறார். தண்ணீரில் ஊறி மயக்கம் அடைந்துவிட்டார். உடல் விறைத்து சுய நினைவு இல்லாமல் இருந்த அவரைத் தூக்கும்போது, இறந்துவிட்டார் என்றுதான் நினைத்தேன். முதலுதவி செய்து பார்த்தபோது, அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. உடனே மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். அவர் உயிர் பிழைத்ததில் மகிழ்ச்சி’’ என்கிறார் ராஜேஸ்வரி.
இரும்பு இதயம் கொண்ட காக்கிகளுக்கு மத்தியில் இளகிய மனம் படைத்த ராஜேஸ்வரி இதுபோன்ற சேவைகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார். அதே நேரத்தில் கண்டிப்பாக சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் அதிகாரி.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

* இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கே.எச் சாலை அருகே இரவு ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது சாலையில் ஒரு மூதாட்டி பதற்றத்துடன் அழுதபடி இங்கும் அங்கும் திரிவதைப் பார்த்தார். அவரைக் கூப்பிட்டு ‘என்ன பிரச்னை’ என்று கேட்டார். சகுந்தலா என்ற அந்தப் பெண்மணி, ‘‘என் மகள் ஷீலா பிரசவ வலியால் துடிக்கிறாள். தலைப்பிரசவம், பனிக்குடம் உடைஞ்சுடுச்சு. மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல வழி தெரியவில்லை. உதவிக்கும் யாருமில்லை’’ என்று அழுதிருக்கிறார்.
ராஜேஸ்வரி உடனே ஆம்புலன்ஸுக்கு தகவல் சொன்னார். ஷீலாவின் வீடு இருந்தது, நம்மாழ்வார்பேட்டையில் ஆம்புலன்ஸ் வர முடியாத தெரு. உடனடியாக அந்தப்பெண்ணை தனது போலீஸ் ஜீப்பில் ஏற்றிவந்த ராஜேஸ்வரி, ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திருக்காமல் மருத்துவமனைக்கு விரைந்தார். ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அதன்பின் ஆம்புலன்ஸில் ஷீலாவை ஏற்றி அனுப்பிவைத்தார். அந்த இரவிலேயே ஷீலாவுக்கு சுகப்பிரசவம். அழகிய பெண் குழந்தை பிறந்தது.

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி
இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி

* செங்குன்றத்தில் வசித்தவர் 20 வயது சுகன்யா. அம்மா புற்றுநோயில் இறக்க, அப்பா தற்கொலை செய்துகொள்ள, தனது தங்கை 17 வயது பிரீத்தியுடன் உறவினர் வீட்டில் வசித்து வந்தார். விழித்திறன் குறைபாடுள்ள சுகன்யாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்தை நடத்த பணமின்றி தவித்த சுகன்யா, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை சந்தித்து உதவி கேட்டார். ராஜேஸ்வரியும், அவருடன் பணிபுரியும் சக காவலர்களும் நண்பர்களும் இணைந்து சுகன்யாவுக்கு நகை மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர். திருமணத்தையும் சிறப்பாக நடத்தி வைத்தனர்.

* சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த சகோதரிகளான ராஜேஸ்வரி, விஜயலட்சுமி மற்றும் பிரபாவதி ஆகியோர் சாலையோரத்தில் வசித்து வந்தனர். சாலையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரித்து, அவற்றை விற்பதால் கிடைக்கும் பணமே இவர்களின் வாழ்வாதாரம். கொரோனா ஊரடங்கு நாட்களில், பிரபாவதி உடல்நலமின்றி இறந்தார். கொரோனா அச்சம் காரணமாக அவரை அடக்கம் செய்வதற்குக் கூட யாரும் உதவிக்கு வரவில்லை. சகோதரிகள் இருவரும் சடலத்தை சாலையோரத்திலேயே வைத்து கண்ணீர்விட்ட நேரத்தில், இந்த விஷயம் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி கவனத்துக்குப் போனது. அவர் வந்து பிரபாவதிக்கு புதுப்புடவை அணிவித்து, முறைப்படி சடங்குகள் செய்து, உடலை ஓட்டேரி மயானத்துக்கு எடுத்துச் சென்று தகனம் செய்ய வைத்தார்.

* கடந்த ஆண்டு நிவர் புயலின்போதும் இதேபோல ஒரு மீட்புப் பணியைச் செய்திருக்கிறார் ராஜேஸ்வரி. புயல் தீவிரம் காட்டிய இரவு நேரத்தில், கீழ்பாக்கம் சாமிதாசபுரம் பகுதியில் ஒரு குறுகலான சந்தில் இடியும் நிலையில் உள்ள வீட்டில் வசித்த கணேஷ் என்ற 33 வயது நபர், வெள்ளத்தில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி போலீஸாருடன் அந்த குறுகலான சந்துக்குள் சென்று, கணேஷை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார். சில மணி நேரங்களில் அந்தப் பழமையான வீடு இடிந்து விழுந்தது. தக்க சமயத்தில் மீட்டதால் ஒரு உயிர்ப் பலி தடுக்கப்பட்டது.

கொரோனா நாட்களில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியும், அவருடன் பணிபுரியும் போலீஸாரும் இணைந்து, ஆதரவற்றோர் பலருக்கு உணவும் மருந்தும் கொடுத்திருக்கின்றனர்.
காக்கி உடையில் வலம் வரும் இந்த சேவை தேவதையை வாழ்த்துவோம்!
- விகடன் டீம்