Published:Updated:

ஸ்பேர் வீல் ஸ்டெப்னி ஆன கதை - புறநானூற்றுப் பாடல் உணர்த்தும் உண்மை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

ஸ்டெப்னி நிறுவனம் வேகமாக வளர ஆரம்பித்தது. ஸ்டெப்னி வீல் வாகன உரிமையாளர்களிடம் பிரபலம் அடைந்தது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சாதாரணமாக ஸ்டெப்னி என்று அழைக்கப்படும் ஸ்பேர் வீல்கள் வாகனங்கள் உருவானபோது தயாரிக்கப்படவில்லை. அக்காலத்தில் குதிரை வண்டிகள் ஏராளமாகப் புழக்கத்தில் இருந்தன. அவை செல்லக்கூடிய தரத்திலேயே சாலைகளும் இருந்தன. மேலும், ஓடும்போது குதிரைகளின் நகங்களும் சாலைகளில் ஆங்காங்கே விழுந்தன.

Representational Image
Representational Image

குதிரைகளின் நகங்கள் குத்தி வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகின. வாகனங்கள் வந்த புதிதில் இது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. மேற்கத்திய அரசுகள் இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. குதிரைகள் மற்றும் குதிரை வண்டிகள் வைத்துக்கொள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அரச குடும்பங்கள் செல்லும் பாதைகளின் ஓரம் வரிசையாக அடிமைகள் நிறுத்தப்பட்டு சாலைகளைப் பெருக்கச் செய்து கார்களின் சக்கரங்கள் பஞ்சர் ஆவதைத் தடுக்க முயற்சிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டன. ஆயினும், இது உடனே சரிசெய்ய முடியாத பிரச்னையாகவே இருந்து வந்தது. வால்டர் மற்றும் டாம் டேவிஸ் சகோதரர்கள் இந்தப் பிரச்னைக்கு புதிய முறையில் தீர்வு கண்டனர். ஆம். அவர்கள் வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆனால், மாற்றுவதற்கு என்று ஸ்பேர் வீல்களைத் தயாரித்து விற்க ஆரம்பித்தனர்.

Representational Image
Representational Image

இங்கிலாந்தின் லண்டன் நகரில் இருந்த ஸ்டெப்னி எனும் தெருவில் வால்டர் டேவிஸ் மற்றும் டாம் ஆகியோர் ஸ்பேர் வீலை முதன்முதலில் தயார் செய்து விற்றதால் தெருவின் பெயரான ஸ்டெப்னி என்பதே ஸ்பேர் வீலுக்கு வைக்கப்பட்டது. அவர்களது நிறுவனத்தின் பெயர் ஸ்டெப்னி அயன் மாங்கர்ஸ்.

ஸ்டெப்னி நிறுவனம் வேகமாக வளர ஆரம்பித்தது. ஸ்டெப்னி வீல் வாகன உரிமையாளர்களிடம் பிரபலம் அடைந்தது. அதனால் வாகன உற்பத்தி நிறுவனங்களே வாகனங்களில் ஸ்பேர் வீலை பொருத்தி வழங்க ஆரம்பித்தன. அதற்கான பெயர் ஸ்டெப்னி என்பதாகவே மாறியது. ரப்பர் தட்டுப்பாடு காரணமாக வாகனங்களில் ஸ்டெப்னி பொருத்துவதற்கு இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தடை விதிக்கப்பட்ட வரலாறும் உண்டு.

Representational Image
Representational Image

இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இந்தியா இருந்த காரணத்தால், ஸ்டெப்னி தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் எளிதாக நுழைந்தது. இந்தியாவிலும் ஸ்பேர் வீல், ஸ்டெப்னி ஆனது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதுபோல மேற்கத்திய நாடுகளில் மோட்டார் வாகனங்களில் ஸ்டெப்னி வருவதற்கு 1,000 ஆண்டுகளுக்கும் முன்பே தமிழர்கள் தேர்ச்சக்கரங்களுக்கு ஸ்டெப்னி வைத்திருந்ததை புறநானூற்றுப் பாடல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

Representational Image
Representational Image

ஸ்டெப்னி குறித்த புறநானூற்றுப் (102) பார்வை:

"கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன" - ஒளவையார்

சக்கரம் பழுதடையும் பொழுது பயன்படுத்துவதற்காகக் கூடுதலாக வண்டியில் சேமத்துக்காக - பாதுகாப்புக்காக- இணைக்கப்படுவதே சேம அச்சு. இத்தகைய சேம அச்சு போன்று மக்களுக்கு இடர் வரும் பொழுது அதைக் களையும் சேம அச்சாக மன்னன் விளங்குகின்றான் என்கிறது ஸ்டெப்னி குறித்து சங்ககால புறநானூற்றுப் பாடல்!

- அகன்சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

பின் செல்ல