Published:Updated:

உணர்ச்சிக் கடிதமும் நெகிழ்ச்சி பதிலும்! #Myvikatan

மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளி மாணவர்கள் இஸ்ரோ தலைவர் சிவனுக்குத் தங்கள் கனவு குறித்து நெகிழ்ச்சிக் கடிதம் எழுதியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருப்பூர் மேட்டுப்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நால்வர் இஸ்ரோ தலைவர் திரு.சிவன் அவர்களுக்கு தாங்கள் விண்வெளியை அறிந்துகொள்ளும் முறை குறித்து உணர்ச்சி பொங்க கடிதம் அனுப்பியுள்ளனர். கடிதத்திற்கு இஸ்ரோ தலைவரும் நெகிழ்வுடன் பதில் அனுப்பி ஊக்குவித்துள்ளார்!

Representational Image
Representational Image

மாணவர்களின் கடிதம் : அன்புள்ள ஐயா, வணக்கம். நாங்கள் இஸ்ரோவின் தீவிர ரசிகர்கள். விண்வெளி எங்களை எப்போதும் கவர்ந்திழுக்கக் கூடியதாகவே இருந்து வருகிறது. அதிலும் நீங்கள் இஸ்ரோ தலைவர் ஆன பின்பு விண்வெளி ஆய்வுகள் மேலும் வேகம் எடுத்துள்ளன. எங்களுக்கு விண்வெளியில் ஆர்வம் ஏற்பட்டதற்கு நீங்களும், எங்கள் பள்ளியும், ஆசிரியர் திரு.சரவணன் அவர்களுமே முக்கியக் காரணம்.

ஒவ்வொரு முறை இராக்கெட் செலுத்தப்படும் போதும் எங்கள் கணினி அறையில் அதை நாங்கள் நேரடி ஒளிபரப்பாகக் காண்போம். 10....5,4,3,2,1 என்று கவுன்டிங்கை நாங்கள் எண்ணி ஆர்ப்பரிப்போம். வெற்றிகரமாக ராக்கெட் பாய்ந்ததும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து, இனிப்புகள் வழங்கியும் எங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வோம்.

ராக்கெட் குறித்தும், அதில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் குறித்தும், ராக்கெட் ஏவுதலுக்கு முன்னும் பின்னும் எங்கள் ஆசிரியர் எங்களுக்கு விவரிப்பார். அன்றைய மற்றும் அடுத்த நாள்கள் செய்தித்தாள்களில் ராக்கெட் குறித்து வரும் செய்திகளைச் சேகரித்து நாங்கள் படத்தொகுப்பு தயாரித்து சமர்ப்பிப்போம். அறிவியலின் உச்சம் விண்வெளி அறிவியல். மருத்துவம் கூட கண்முன்னே இருப்பதையே ஆய்கிறது. ஆனால், கண்ணால் பார்க்க முடியாத கோடிக்கணக்கான கி.மீ க்கு அப்பால் உள்ளவற்றை ஆராய்கிறது விண்வெளி அறிவியல்.

இது பெரும் ஆச்சர்யம் ஊட்டுவதாய் எங்களுக்கு இருக்கிறது. திரையில் மட்டுமே ராக்கெட்டுகளைப் பார்த்தால் போதாது. அதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதற்காக சந்திரயான் 2 ஏவுதலுக்கு 10 நாள்கள் முன்பு அது குறித்த கட்டுரை போட்டி பள்ளியில் நடைபெற்றது. சந்திரயான் 2 குறித்து இணையதளத்தில் தேடி கட்டுரை எழுதினோம்.

சந்திரயான் 2
சந்திரயான் 2

எங்கள் பள்ளியில் 100 மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் சிறப்பாக கட்டுரை சமர்ப்பித்த 4 மாணவர்கள் (நாங்கள் நால்வர்)தேர்வு செய்யப்பட்டு, சந்திரயான் 2 ஏவுதலை நேரில் காண எமது ஆசிரியர் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டா அழைத்து வரப்பட்டோம். தங்களால் உருவாக்கப்பட்ட Launch view gallery அருமையாக இருந்தது. Rocket garden,Space musium ஆகியவையும் சிறப்பாக இருந்தன.

அங்கு சந்திரயான் 2 குறித்து தெளிவாக விளக்கப்பட்டது. ஏவுதல் தள்ளிவைக்கப்பட்ட போது சற்று ஏமாற்றமாக உணர்ந்தோம். சற்று அழுகை கூட வந்தது. ஆனால் அடுத்த வாரமே கோளாறு சரி செய்யப்பட்ட தகவல் அறிந்து பெரும் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் உண்டாயின. இரண்டாம் முறை மீண்டும் நாங்கள் ஸ்ரீஹரிக்கோட்டா வந்தோம். சந்திரயான் 2 வெற்றிகரமாக ஏவப்பட்டது. அந்தக் கணத்தின் உணர்வுகளை எங்களால் விவரிக்கவே முடியாது. அப்போதும் கண்களில் நீர் வந்தது. ஆனால் அது ஆனந்தக் கண்ணீர்!

`விண்வெளித் துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு!' - இஸ்ரோவின் சிறப்பு கோடைக்கால பயிற்சி முகாம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் குறித்து எல்லாம் எங்கள் நண்பர்களுக்கு விளக்கினோம் ``நமது இலக்கு வலிமையாக இருக்குமாயின் தவிர்க்க இயலாதவை தோல்விகள்" என்பர். அந்த வகையில் இஸ்ரோவின் இலக்கு வலிமையானதாக இருந்தது வெற்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளது! நீங்கள் சோர்வடைந்து விட வேண்டாம். இந்தியாவே உங்களுக்கு ஆதரவாய் இருக்கிறது. குறிப்பாக இளைய தலைமுறை உங்களுடன் இருக்கிறது. நாங்கள் உங்களை உற்று நோக்குகிறோம். உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளோம், கற்றுக்கொள்ள உள்ளோம்.

மங்கள்யான் 2, ககன்யான், ஆதித்யா L1 மற்றும் சந்திரயான் 3 ஆகியவை முழுமையாக வெற்றியடைய வாழ்த்துகள். இனி வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு முறையும் Launch view gallery வருவோம். அரசுப் பள்ளி மாணவர்களாக, தமிழர்களாக, இந்தியர்களாக உங்களால் பெருமை கொள்கிறோம்! விண்வெளியிலும், சந்திரனிலும், செவ்வாயிலும் இந்தியர்களின் காலடிகள் படும் நாள் வெகு தொலைவில் இல்லை. அந்தக் காலடிகள் எங்களுடையதாகவும் இருக்கலாம், உங்களால்! நன்றி ! மணிகண்டன். ஹரி கிருஷ்ணா. முஹமது தாஹிர். சந்தோஷ்.

இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன்

இஸ்ரோ தலைவர் திரு.சிவன் அவர்களின் பதில் கடிதம் : அன்பார்ந்த மாணவச் செல்வங்களே, (ச.ஹரிகிருஷ்ணா ,லோ.மணிகண்டன், அ.முஹம்மது தாஹிர் மற்றும் கா.சந்தோஷ்) உங்கள் அன்புக்கடிதம் கிடைக்கபெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சந்திரயான்-2 திட்டத்தை தொடர்ந்து கவனித்து அதைப்பற்றி எழுதி இருக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி.

சந்திரயான்-2 லேண்டர் வெற்றிகரமாக தரையில் இறங்காமல் இருந்தாலும், சந்திரயான்-2 ஆர்பிட்டர் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. சந்திரயான்-2 ஆர்பிட்டர், அதனுடைய கருவிகள் மூலம் அறிவியல் ரீதியான தகவல்களை, ஒரு வருட திட்ட ஆயுட்காலத்தை தாண்டி ஏழு வருடக் காலத்திற்கு அனுப்பும். நீங்கள் சந்திரயான்-2 பற்றிய கட்டுரை போட்டியில் வென்று ஸ்ரீஹரிகோட்டா view gallary-க்கு இரண்டுமுறை வந்து சென்றதை அறிவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கும், உங்கள் பள்ளி ஆசிரியர் திரு.சரவணன் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் அன்பாலும் ஆதரவாலும் நம் இந்திய விண்வெளித்துறை மேன்மேலும் வளர்ந்து பல சாதனைகளைப் படைக்கும். நீங்கள் அனைவரும் நன்கு படித்து வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டுமென மற்றும் உங்களின் விண்வெளிப் பயண லட்சியம் கைகூட வேண்டுமென வாழ்த்துகிறேன். உங்கள் அன்புடன், கை.சிவன்

இந்தக் கடிதங்கள் இந்தியாவின் விண்வெளி ஆய்வுகள் மற்றும் எதிர்காலம் குறித்து பெரிதும் நம்பிக்கை ஊட்டுகின்றன!

- அகன்சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு