Published:Updated:

`டிராப்' சிம்பு முதல் `டக்கரு' நித்தி வரை... டாப் 2019 பரபரா பட்டியல்!

காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன். பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறேன் என வரவேற்பு அறிக்கை விட்டதிலேயே பிரின்டரில் பாதி மை தீர்ந்துபோனது.

டாப் 2019
டாப் 2019

ஜோக்கிழார் சேட்டைகள்!

எப்படியோ முதல்வரானாலும் நாற்காலியை இறுக்கிப்பிடித்து நான்காண்டுகளைக் கடத்தியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆண்டு செய்தது எக்கச்சக்க காமெடி! கோட்சூட்டின் ப்ளஸ் மைனஸ்களை கோபிநாத்திடம் கேட்டறிந்து, சூட்கேஸோடு விமானம் ஏறினார். அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் என கோபால் பல்பொடி விளம்பரம்போலச் சுற்றிக்கொண்டிருந்தவரை 'உலகம் சுற்றும் வாலிபன்' என போஸ்டர் அடித்துக் குதூகலித்தனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

`டிராப்' சிம்பு முதல் `டக்கரு' நித்தி வரை... டாப் 2019 பரபரா பட்டியல்!

"நானும் விவசாயிதான். மண்புழுபோல விவசாயிகளின் நண்பனாக நான் இருக்கிறேன்" என, தற்காலத்துத் தமிழ் சினிமா ஹீரோக்களைப்போல் விவசாய பன்ச் அடித்தவருக்கு 'கடவுள் எனும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி' என போஸ்டர் அடித்து ரத்தத்தின் ரத்தங்கள் மீண்டும் எம்.ஜி.ஆரை ஒரண்டை இழுக்க, ஈ.பி.எஸ்ஸோ, "அரசியலில் சிவாஜியின் நிலைதான் ரஜினிக்கும் கமலுக்கும் ஏற்படும்" என நேரடியாக சிவாஜியையே ஒரண்டை இழுத்தார். "டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் பொறுப்புகள் கூடியிருக்கிறது" எனப் பெருமிதப்புன்னகையை அவிழ்த்து விட்டு, மோடிக்கும் சீன அதிபருக்கும் பேனர் வைக்க நீதிமன்றத்தை நாடியதில் ரத்தத்தின் ரத்தங்கள் பலருக்கே ரத்த அழுத்தம் எகிறியது. சேலம் அமெரிக்காபோல் மாறிவருகிறது, மதுரை மங்கோலியாபோல் மாறிவருகிறது, சென்னை சோமாலியாபோல் மாறிவருகிறது என எடப்பாடி உளறிக்கொட்டியதில், மக்கள் கடுப்பில் ஜோம்பிகளாக மாறினர்.

தமிழில் பிடிச்ச வார்த்தை மன்னிப்பு!

மொரட்டு உ.பி-கள் ஸ்டாலினை பிரியாணிக் கடைக்கும் பியூட்டி பார்லருக்கும் கால்கடுக்க நடக்கவைத்து மன்னிப்பு கேட்க வைத்தார்கள். சென்ற ஆண்டில் அதிகமுறை மன்னிப்பு கேட்டவர்கள் பட்டியலில் 'அசுரன்' சிவசாமியையும் 'சூப்பர் டீலக்ஸ்' அற்புதத்தையும்விட அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார் மனிதர்.

`டிராப்' சிம்பு முதல் `டக்கரு' நித்தி வரை... டாப் 2019 பரபரா பட்டியல்!

அப்பா தலைவர் ஆனதால், மகன் இளைஞரணிச் செயலாளர் ஆனார். திருவாரூர் தேர்தலில் உதயநிதி போட்டியிடப் போவதாகக் காலையில் புரளி கிளம்பியபோது 'உதயநிதிக்கு என்ன அரசியல் தெரியும்' எனக் கடுப்பான உ.பி-கள், மாலையில், 'நயன்தாரா, சந்தானம் ரசிகர்கள் ஓட்டு போட்டாலே ஜெயிச்சுடலாம்' என மனம் மாறியதில் தெரிந்தது உதயண்ணாவின் மகத்துவம். 'விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிற்கவேண்டும்', 'விவேகானந்தா நகர் கவுன்சிலர் ஆகவேண்டும்' என விருப்ப மனுக்களையும் அடித்து நகர்த்தியதில் ஆனந்தக்கண்ணீர் விட்டார் இரண்டாம் ஸ்டாலின்.

வராத போரின் கடைசி குண்டு!

'ஈயம் பூசினமாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்' என்று எல்லாப்பக்கமும் பூசியவர் 'எனக்கு மட்டும் காவிச்சாயம் பூசாதீங்க' என்று காவி ஹோலிக்குக் கடிவாளம் போட்டார். "பொதுவான மொழி இருந்தால் நல்லது. ஆனால், மொழியைத் திணிக்கக்கூடாது" என்று சுத்தவிட்டு சுத்தவிட்டுச் சுடச்சுட சுண்ணாம்பு அடித்தார்.

`டிராப்' சிம்பு முதல் `டக்கரு' நித்தி வரை... டாப் 2019 பரபரா பட்டியல்!

காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன். பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறேன் என வரவேற்பு அறிக்கை விட்டதிலேயே பிரின்டரில் பாதி மை தீர்ந்துபோனது. தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது எனப் பத்தாயிரத்து முந்நூற்றுப் பதின்மூன்றாவது முறையாகப் பரபரப்புப் பேட்டி கொடுக்க, பிரஷர் மாத்திரையை வாயில் போட்டார்கள் ரஜினி ரசிகர்கள். "மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜுனன் போன்றவர்கள்" எனப் பேசி மகாபாரத மங்காத்தா ஆடினார். இருந்தாலும் 'வலையை விரிப்போம்; வாளை மீனு சிக்கும்' என்று வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்தது மோடி அரசு. ஆனால் ரஜினியோ, 'ச்சும்மா ஒளி' என்று ஒளிந்து விளையாடுகிறார்.

வேட்டி வேட்டி வேட்டி கட்டு!

புதுப்புது இந்தியாவாகப் பெற்றெடுத்ததாலோ என்னவோ, 'இந்தியாவின் தந்தை' என மோடிக்குப் பெயர் சூட்டி, காதணி விழாவும் நடத்திவிட்டு அனுப்பினார் டிரம்ப். தமிழ்நாட்டை வளைச்சே ஆகணும்டா விருமாண்டி என்று விதவித கெட்டப்கள் போட்டார் மோடி. தலதீவாளி வந்த மருமகன் போல வேட்டி - சட்டை கட்டி, சீன அதிபரைச் சிதறவிட்டார்.

`டிராப்' சிம்பு முதல் `டக்கரு' நித்தி வரை... டாப் 2019 பரபரா பட்டியல்!

தப்புத்தப்பாய்த் திருக்குறள் சொல்லித் தாறுமாறாய் எகிறவைத்தார். தாய்மொழிக்கெல்லாம் ஆப்புவெச்சு, தாய்லாந்தில் திருக்குறளை வெளியிட்டார். சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு 'புரட்சித்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்' என்று அவர் சூட்டிய பெயரைச் சொல்லி முடிப்பதற்குள் மூன்று ரயில்கள் கிளம்பிவிடுவது பெருஞ்சோகம். சாலியே, தமில்நாட் கோ வண்க்கம்!

காப்பி சாப்டீங்ளாண்ணா...

புதுப்படங்களின் போஸ்டர்கள், பாடல்கள், டிரெய்லர்கள் வெளியாகும் சமயத்திலெல்லாம், 'எங்கேயோ பார்த்த மயக்கம். எப்போதோ வாழ்ந்த நெருக்கம்' எனத் துப்பு துலக்கிப் பார்த்து, துப்ப ஆரம்பித்தனர் சினிமா ரசிகர்கள்.

`டிராப்' சிம்பு முதல் `டக்கரு' நித்தி வரை... டாப் 2019 பரபரா பட்டியல்!

இமான், கௌதம் மேனன், பாண்டிராஜ், அட்லீ என இந்த ஆண்டு ஜெராக்ஸ் கடைகள் ஏராளம். சென்ற ஆண்டில் அரைத்த காப்பிக்கொட்டையை யெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, புதுக் கொட்டையை வறுக்கலாம் என ரசிகர்கள் மனதைத் தேற்றிக்கொண்டு நிற்க, பாதி 'வந்தேன்டா பால்காரன்' பாடலும் மீதி 'தண்ணிக்குடம் எடுத்து' பாடலுமாகப் பாலும் தண்ணியும் கலந்து மீண்டும் காப்பி போட்டார் அனிருத். நெட்டிசன்கள் ச்சும்மா கிழிகிழித்தனர்.

வந்தா ராஜாவாத்தான், ஸாரி, வந்தாத்தான் வருவேன்!

காலையில் வருவேன், மாலையில் செல்வேன், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகளில் விடுமுறை வேண்டும் என ஷூட்டிங் செல்வதற்குக்கூட ஸ்கூல் குழந்தைகளின் டைம் டேபிளைக் கையிலெடுத்தார் லிட்டில் சூப்பர் ஸ்டார். சென்ற ஆண்டு, கால் டாக்ஸி டிரைவர்களைவிட அதிகம் டிராப் செய்தது தானைத் தலைவன் எஸ்.டி.ஆர்தான் என்கிறது ஆய்வறிக்கை!

`டிராப்' சிம்பு முதல் `டக்கரு' நித்தி வரை... டாப் 2019 பரபரா பட்டியல்!

'மாநாடு' படம் டிராப் என்ற செய்தி வந்ததும், அதற்குப் போட்டியாக அவரே 'மகா மாநாடு' என்ற படத்தை இயக்கி நடிக்கப்போவதாகச் சொன்னார். பிறகு, மாநாடு படத்தில் மீண்டும் நடிக்கப்போவதாகச் சொல்லிவிட்டு, 'மகா மாநாடு' படத்தை டிராப் செய்தார். கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் படமும் எப்போது டிராப் ஆகும், மறுபடியும் ஸ்டார்ட் ஆகும் என்பது யாருக்கும் தெரியாது. இதெல்லாம்விட போனவாரம் பாட்டுப்போட்ட பெரியாரை டிராப் பண்ணிவிட்டு, ஐயப்பனை பிக்கப் பண்ணியது அதிரடி, காமெடி சரவெடி!

டப்புச்சிக்கு தப்பு தப்பு!

சேரன் ஆர்மிக்கும் மீரா ஆர்மிக்கும் சண்டை. இடையில, இந்த பாத்திமா பாபு ஆர்மி வந்தால் கேங் வார் ஆகிடும் குமாரு' என இணையத்தில் ராணுவத்தளவாடங்கள் அமைத்து ஆர்மிகள் அடித்துக்கொண்டன. 'கவினும் லாஸ்லியாவும் காய்கறி வெட்டும்போது செய்யும் காரியத்தைப் பாருங்களேன்' என யூடியூபும் வியூவ்ஸை அள்ளிக்குவித்தது.

`டிராப்' சிம்பு முதல் `டக்கரு' நித்தி வரை... டாப் 2019 பரபரா பட்டியல்!

பெண்களெல்லாம் சேர்ந்து ஆண்களை கார்னர் பண்றதாச் சொல்லி, 'வி ஆர் தி பாய்ஸ்'னு சொல்லி ஆண்கள் தனி டீம் ஆரம்பிச்சாங்க. நூறு நாள்களில் நூடுல்ஸைவிட அதிகமாய் சிக்கல்கள் ஏற்பட்டு ஒரு நிமிடம் யோசித்துப்பார்த்து, சித்தப்பு சரவணன்போல் 'குப்'பென அமர்ந்துவிட்டது தமிழ்ச்சமூகம். கடைசியில், 'அன்பு ஒன்றுதான் அநாதை' என்பதே கதை சொல்லவரும் நீதியென கமல் கைகளைக் கட்டிப்பிடித்துச் சொல்லிமுடிக்க, சேரப்பாவைவிடக் குலுங்கிக் குலுங்கி அழுதது ரசிகர் கூட்டம். ஊ...ஊ...ஊ...

அன்னாசி, மீனாட்சி, தீவுக் கதை என்னாச்சி?

கல்கி பகவான் பல சோதனைகளில் சிக்க, இன்னொருபக்கம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் வீடியோக்களாக இறக்கி கிறுகிறுக்கவைத்தார் நித்யானந்தா. குழந்தைகளைக் கடத்தி அடைத்து வைத்ததாக வழக்கு பாய, காலாவதியான பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு கைலாசாவுக்குப் பறந்தார் நித்தி.

`டிராப்' சிம்பு முதல் `டக்கரு' நித்தி வரை... டாப் 2019 பரபரா பட்டியல்!

இப்போது, தனிநாடு, தனிபாஸ்போர்ட் எனத் தீவுக்கு நடுவிலிருந்து தண்ணிகாட்டிக்கொண்டிருக்கிறார். மாஸ் கிராஃபிக்ஸ் வீடியோக்களில் இருந்து மோட்டிவேஷனல் வீடியோவுக்கு மடை மாறினார். "நான் தாமதமாக எழுந்ததால், சூரியனைக் கொஞ்சம் தாமதமாக உதிக்கச் சொன்னேன்" வகையறா கன்றாவிகளை எல்லாம் இந்த ஆண்டும் காசா, பணமா எனக் கரியை அள்ளிப்போட்டார். கமலா கைலாசா அப்னா மேரா டக்கரு நித்தியே!

ஒரு கதை சொல்லட்டுமா ஒறவே!

விக்கரவாண்டித் தொகுதித் தேர்தல் பிரசாரத்தின்போது, "ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம்" எனப் பேசி, பக்கத்து டேபிள் பில்லுக்கும் அண்ணன் வான்டடாக வந்து மொய் வைக்க, தமிழகம் எங்கும் சர்ச்சை கிளம்பியது.

`டிராப்' சிம்பு முதல் `டக்கரு' நித்தி வரை... டாப் 2019 பரபரா பட்டியல்!

தம்பிகளெல்லாம் தட்டச்சில் களமாட, பனங்காட்டுப்படை ஹரிநாடாரைவிடக் குறைந்த வாக்குகள் பெற்று அதிர்ச்சி கொடுத்தது நாம் தமிழர் கட்சி. அண்ணன் செய்த பெருங்கூத்து, சிங்களப்பயணக் கதையின் அடுத்த சீசனை அவிழ்த்து விட்டதுதான். 'ஓங்கில் கறி வறுத்துவெச்சுருந்தாய்ங்க. ரசத்துக்குத் தொட்டுக்கிட்டேன். சம்பலைத் தொட்டு சப்பாத்தி சாப்பிட்டேன்' என மிலிட்டரி ஓட்டல் மெனுவை மனப்பாடமாக ஒப்பிக்க, தம்பிகளே டயர்டானார்கள். "நான் சாப்பிடும்போது பின்னாடி ஒருத்தர் உட்கார்ந்து லிஸ்ட் எடுத்தார்" என ஒரேயடியாய் பெரிய அணுகுண்டை வீச, மசாலா வாசம் கமகமக்க மீம்ஸ்கள் பறந்தன.

- இந்தப் பட்டியல் இதோட முடியலை. இன்னும் வேற லெவல் பரபரா நிறைய இருக்கு. முழுமையான பட்டியலை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க >https://www.vikatan.com/oddities/miscellaneous/top-25-atrocities-of-2019-ananda-vikatan

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9