Published:Updated:

உங்களின் மனிதநேயத்துக்கு கோடி நன்றிகள்! #EdudharmaUpdate

நான்கு அக்காக்கள் கொண்ட குடும்பத்தில் கடைசி பிள்ளை துரை. விவசாயக் கூலியான துரையின் தந்தை திருமையா வாங்கும் 300 ரூபாய் தினக்கூலி வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாகிவிடும்.

Edudharma
Edudharma

அரியவகை ஒவ்வாமை...

* 'இப்படிப்பட்ட கொடிய நோய் யாருக்கும் வரக்கூடாது! #NeedHelp' - இந்தத் தலைப்பைத் தாங்கிய கட்டுரை ஒன்று கடந்த வருட நவம்பர் மாதத்தில் இங்கு வெளியாகியிருந்தது. திருப்பூரைச் சேர்ந்த, 12ஆம் வகுப்பு படிக்கும் பூஜா ஷன்மதி'யைத் தாக்கிய 'ஸ்டீவென்ஸ்-ஜான்சன்ஸ் சின்ட்ரோம்' எனும் மிகக்கொடூரமான அரியவகை ஒவ்வாமை நோய் குறித்தது அந்தச் செய்தி. காய்ச்சலுக்காக மருந்துகள் எடுத்துக்கொண்ட பூஜாவை இந்த அரியவகை நோய் பாதிக்க, உடல் முழுதும் ரணங்களுடன் அடையாளம் தெரியாத விதத்தில் பூஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோயின் தீவிரம் குறையும் வரை பல நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் பூஜாவை வைத்திருக்க தேவையான மருத்துவ நிதி உதவி வேண்டி பூஜாவின் பெற்றோர் Edudharma இணையதளத்தை நாட, விகடனில் செய்தி வெளியானது. பலனாக, 36 மணி நேரத்திற்குள் மருத்துவத்துக்குத் தேவையான 6 லட்ச ரூபாயை மக்கள் வாரி வழங்கினர். பல வார சிகிச்சைக்குப் பின் பூஜா நலமடைந்தார், மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கும் திரும்பியுள்ளார் என்பத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்! (பூஜாவின் பெற்றோர் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் தற்போதைய படம் வெளியிடப்படவில்லை).

Edudharma
Edudharma

இதய அறுவை சிகிச்சை வேண்டிய குழந்தை...

* வெங்கட்ராமன், சுதா தம்பதியினர் நாம் அன்றாடம் பார்க்கும் சாமானியர்கள். தங்கள் ஒன்றரை வயதுக் குழந்தை ஸ்ரீனிவாசனின் இதயத்தில் இருக்கும் துளையை அடைக்க ஆபரேஷன் செய்வது கட்டாயம் என மருத்துவர்கள் கூறிவிட திணறிப்போனார்கள் இந்தப் பெற்றோர். பிஞ்சு மகன் பிழைக்க ஓடியாடி கடன் வாங்கினாலும் இந்த ஏழைக் குடும்பத்துக்கு 3.60 லட்ச ரூபாய் பணம் யாரிடமும் கிடைக்காமல் போனதால் Edudharma இணையதளத்தை நாடினர். ஜூன் 2018-இல் 'குழந்தை பிழைக்கணும்... மனிதநேயம் ஜெயிக்கணும்...' என இதுகுறித்த செய்தி வெளியானது. நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு 10 நாட்களில், தேவையான பணத்தை Edudharma மூலமாக நல்ல உள்ளங்கள் வழங்கிட, மருத்துவர்கள் சொன்ன கெடுவுக்குள் குழந்தை ஸ்ரீனிவாசனின் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது. தற்போது குழந்தை நலமாக ஓடியாடித் திரிகிறான்!

துரையின் கண்ணீர் கலந்த நன்றிகள்...

* நான்கு அக்காக்கள் கொண்ட குடும்பத்தில் கடைசி பிள்ளை துரை. விவசாயக் கூலியான துரையின் தந்தை திருமையா வாங்கும் 300 ரூபாய் தினக்கூலி வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாகிவிடும். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பில்1151 மதிப்பெண் எடுத்த துரையரசனுக்கு தனியார் மருத்துவ சீட் கிடைத்தாலும், வருடம் 4 லட்ச ரூபாய் கல்விக்கட்டணம் என்கிற சேதி பெரும் வருத்தத்தைத் தந்தது. இருப்பினும் படிப்பில் கெட்டியான துரைக்கு கல்வி உதவித்தொகை கிடைக்க முதல் வருட படிப்பை முடித்தார். ஆனால் விதி விடவில்லை, அவர் படித்து வந்த கல்லூரியின் உரிமம் ரத்தானது. இதனால் அவரின் கல்வி பாதிக்கப்பட்டது. பல மாத போராட்டங்களுக்குப் பின் மதுரை அரசு மருத்துவ கல்லூரிக்கு துரை மாற்றப்பட, நிம்மதி வந்து சேர்ந்தது. இருப்பினும் தனியார் கல்விக் கட்டணத்தை இங்கும் செலுத்த வேண்டும் என்றது உயர்நீதிமன்றம். இடிந்துபோனார் துரை. கடனும் கல்வி உதவித் தொகையும் கைகொடுக்க இரண்டாம் ஆண்டு முடித்து, மூன்றாம் ஆண்டு செல்லுவதற்கு கட்டணம் செலுத்த முடியாததால் வீட்டிலேயே முடங்கிப்போனார். இதுகுறித்த செய்தி இந்த மார்ச் மாதம் வெளியானது. ஏழை மாணவரின் கல்விக்கு நூற்றுக்கணக்கானவர்கள் 8 லட்ச ரூபாய் பணத்தை நன்கொடையாக Edudharma தளம் மூலம் வழங்கினர். அடுத்த வருட படிப்புக்கும் சேர்த்து பண உதவி செய்தவர்களுக்கு நன்றி கூறி கண்ணீர் வடித்த மாணவர் துரை தற்போது மகிழ்ச்சியாக மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருகிறார்!

கஞ்சிவாக்கதின் முதல் டாக்டர்!

* 12ஆம் வகுப்பில் 1171 மதிப்பெண் எடுத்து, நீட் தேர்விலும் தேர்ச்சி பெற்ற மாணவி மலர்விழி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலி குமரேசனின் மகள். கவுன்சிலிங் மூலம் மலர்விழிக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்தாலும், கல்விக்கட்டணம் 5 லட்ச ரூபாய்க்கு எங்கு போகும் அந்த ஏழைக்குடும்பம்?அவ்வளவு பணத்தை மொத்தமாகக் கூட கண்டிராத ஏழை மாணவி மலர்விழி தனது மருத்துவ ஆசை நிராசையானதென்ற முடிவுக்கே சென்றுவிட்டார். இருப்பினும் இந்தத் தகவல் Edudharma இணையதளத்துக்குத்தெரியவர, இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டு மலர்விழிக்காக மக்களிடம் நிதி திரட்டும் நடவடிக்கை ஆரம்பமானது. அமைந்தகரை முதல் அமெரிக்கா வரை எட்டிய இச்செய்தியைப் பார்த்து ரூபாயாகவும், டாலர்களாகவும் வந்து சேர்ந்தன உதவிகள். சில தினங்களில் உதவி கிடைத்திட, மாணவியின் கல்வி உறுதியானது. இன்று கஞ்சிவாக்கம் கிராமத்தின் முதல் மருத்துவர் மலர்விழி!

இக்கட்டான சூழ்நிலையில் மனித உயிரைக் காத்து, கல்விக்காக கையேந்தி நின்ற ஏழை மாணவர்களின் கண்ணீர் துடைத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஒவ்வொரு மாமனிதருக்கும் Edudharma இணையதளம் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறான ஒவ்வொரு நிதி திரட்டலுக்கும் பின்னால் ஆயிரமாயிரம் நபர்களின் பங்கு அடங்கியுள்ளது.

"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது"

- திருக்குறள், 102

சரியான நேரத்தில் உதவி செய்து, இந்த உலகத்தை விட உயர்ந்து நிற்கும் உங்கள் ஒவ்வொருவரின் மனிதநேயத்துக்கும் கோடி நன்றிகள்! வையகம் தழைக்க தங்களின் சேவை தொடரட்டும்!