இரண்டு வாரம் முன்பு வாட்ஸ்அப்பில் ஒரு பிரியாணிக் கடையின் விளம்பரம் வந்தது. அதில், `அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினத்தை முன்னிட்டு தொப்பி வாப்பா பிரியாணிக் கடையில் 5 பைசா நாணயத்தைக் கொடுத்து பிரியாணியை வாங்கிச் செல்லுங்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது, அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால், நேற்றும் இன்றும் ஏராளமான வாட்ஸ்அப் குரூப்களில் வெவ்வேறு நபர்கள் இதே விளம்பரத்தை அனுப்பியிருந்தனர். எல்லா பக்கமும் `உங்களிடம், 5 பைசா இருக்கா?' என்ற கேள்விகள் வேறு.

` அட, இப்படியொரு விளம்பரமா?' என குறிப்பிட்ட உணவகத்தின் நிர்வாகிகளைத் தொடர்புகொண்டோம். நம்மிடம் பேசிய உமர் என்பவர், ``அக்டோபர் 16-ம் தேதி (நாளை) உலக உணவு தினம். இந்த தினத்தின் நோக்கமே உணவு வழங்கல்தான். இதற்காக பல உணவு நிறுவனங்கள் ஆஃபர்களை அறிவிப்பார்கள். ஆனால், அது வழக்கமானதாக இருக்கும். அதனால் வேறு மாதிரி யோசிக்கலாம் என நினைத்தோம்.
எங்களின் நோக்கம் உலக உணவு தினத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். ஆஃபர் போட்டால், அதோடு கடந்துவிடுவார்கள். முதலில் இலவசமாகப் பிரியாணி கொடுக்கலாம் என நினைத்தோம். அப்போதும் அது சரியாக இல்லை என்று தோன்றியது. அதனால்தான் பழைய, செல்லாத 5 பைசாவுக்கு பிரியாணி வழங்கலாம் என முடிவு செய்தோம்.

நமது வீட்டில் சுத்தப்படுத்தாத பகுதி இருந்தால் அங்கு அந்த 5 பைசா காசு இருக்கும். அல்லது தாத்தா பாட்டியிடம் இருக்கும். அவர்கள் மறைந்துவிட்டாலும் அவர்கள் பயன்படுத்திய பெட்டிகளில் இந்த 5 பைசா காசு இருக்கும். இதன்மூலம் வீட்டில் ஓர் உரையாடல் நடக்கும். தேடல் இருக்கும். இதையெல்லாம் மனதில் வைத்து இப்படியொரு விளம்பரத்தைத் கொடுத்தோம். இதுபோன்று வித்தியாசமாக விளம்பரம் செய்வது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரே சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவியபோது, பிரியாணி வாங்கினால் ஒரு கேன் தண்ணீர் இலவசம் என நடைமுறைப்படுத்தியிருக்கிறோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது” என்றார்.
` இந்த விளம்பரத்துக்கு மக்கள் மத்தியில் இருந்து என்ன மாதிரியான வரவேற்பு கிடைத்தது?' என்றோம்.
``தொடர்ச்சியான போன்கால்கள். எங்களால் போனை கீழே வைக்க முடியவில்லை. சென்னையைத் தாண்டி வெளி மாவட்ட மக்களிடமும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளி மாவட்டத்திலிருந்து அழைத்த நபர் ஒருவர், தன்னிடம் நூறு 5 காசுகள் இருப்பதாகவும் நூறு பிரியாணி தருவீர்களா என்றார். அதற்கு, `இந்த விளம்பரத்தின் நோக்கம் உலக உணவு தினம். சென்னையில் 4 கிளைகள் இருக்கின்றன. ஒரு கிளைக்கு 50 பேர் வீதம் முதலில் வரும் 200 பேருக்கு வழங்குவதுதான் திட்டம். தவிர நபருக்கு ஒரு பிரியாணிதான் வழங்குவோம்’ என்றோம். ஒருகட்டத்தில் உலக உணவு தினத்தை இது மறைத்துவிடுமோ என்ற எண்ணமும் எங்களுக்கு ஏற்பட்டது.

உலக உணவு தினம் என்பதுதான் உண்மையான நோக்கம். வேறு சிலர் இதை வேறு மாதிரி கிளப்பிவிடுகிறார்கள். அதாவது ஒரு நபர், `OLX மூலம் பழைய காயின்களை ரூ.500-க்கு மேல் விற்பதாகவும் மக்களிடமிருந்து பெறப்படும் பழைய செல்லாத காசுகளைக் கொண்டு வேறு திட்டம் போடுவதாகவும் கிளப்பி விடுகிறார்கள். இது ஒரு சதி வேலை’ எனவும் கிளப்பி விடுகிறார்கள்.
அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். கிடைக்கும் காசுகளை உங்களிடமே தருகிறேன். அதைப் பணமாக மாற்றி உங்களால் முடிந்த நல்லதைச் செய்யுங்கள். வேறு என்ன சொல்ல?” என்றவர்,

``நான் என்னடைய நண்பர்கள் எல்லோருமே சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இதையொட்டி பல ஊர்களுக்குச் செல்லும்போது பெரும்பாலும் உணவு, பயணம், தங்கும் விடுதி ஆகியவற்றுக்குத்தான் பெரிய செலவு ஏற்படும். அதில் உணவை நம்மால் முடிந்தவரையில் சரி செய்யலாம் என்பதற்காக உணவகம் தொடங்கினோம். இப்போது சமூகப் பணிக்காக சென்னை வரும் தோழர்களுக்கு உணவு கொடுக்க முடிகிறது” என நெகிழ்ச்சியுடன் பேசி முடித்தார்.