Published:Updated:

"மொத்த சிஸ்டமும் ஃபெயிலியர்!" - வங்கிகள் தொடர்ந்து சரிவதற்கு என்ன காரணம்?

yes bank
yes bank

பொதுவாக, வங்கிகளில் அரசியல் தலையீடு இருக்கத்தான் செய்யும். அரசியல் கட்சிகளுக்கான நிதி ஆதாரங்களை தனியார் நிறுவனங்களே தருகின்றன.

டிஜிட்டல் இந்தியா, கேஷ்லெஸ் இந்தியா... இந்த வார்த்தைகளெல்லாம் அடித்தட்டு இந்தியன் வரை உச்சரிக்கும் வார்த்தைகள் ஆகிவிட்டன. கேட்கத் தேனாக இனிக்கின்றன இந்த வார்த்தைகள். எல்லா பணப்பரிவர்த்தனைகளும் வங்கி மூலமாகவே நடைபெற வேண்டும் என்ற அரசின் இலக்கு மெல்ல மெல்ல நிறைவடையும் தருணம், நாட்டின் ஐந்தாவது பெரிய தனியார் வங்கியான யெஸ் பேங்க் பற்றி வெளிவரும் செய்தி மொத்த நம்பிக்கையையும் தகர்த்தியிருக்கிறது. வங்கிகள் தொடர்ந்து சரிவதற்கு என்ன காரணம்?

"ரிசர்வ் வங்கியின் முறையான கண்காணிப்பு இல்லாததுதான் முக்கிய காரணம். பி.எம்.சி வங்கி திவாலானபோது கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டை குற்றம் சுமத்தினார்கள். ஆனால் தற்போது, பெரிய வங்கிகளில் ஒன்றான தனியார் வங்கி திவாலாகி யுள்ளது. ரிசர்வ் வங்கி சரியாகச் செயல்பட்டிருந்தால் முன்கூட்டியே இதை சரிசெய்திருக்கலாம்" என்கிறார் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ.

"பொதுத்துறை வங்கியோ தனியார் வங்கியோ வழங்கும் கடன்களைக் கண்காணிக்கும் பொறுப்பு, ரிசர்வ் வங்கியிடம் இருக்கிறது. குறிப்பாக, மிகப்பெரிய கடன்களை வழங்கும்போது ரிசர்வ் வங்கி அதை ஆய்வுசெய்து, வழங்கப்படும் நிறுவனத்தின்மீது நல்ல மதிப்பீடு இல்லையென்றால் தடுக்க முடியும். சிறிய அளவிலான கடன்களை அதிக எண்ணிக்கையில் வழங்குவதற்கு ஊக்கப்படுத்த முடியும். யெஸ் பேங்கைப் பொறுத்தவரை, ஐ.எல்.&எஃப்.எஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் உள்ளிட்ட சரியாக இயங்காத பல நிறுவனங்களுக்கு பெரிய தொகையை கடனாக வழங்கியிருக்கிறது. இத்தகைய கடன்களை வழங்கும்போதே ரிசர்வ் வங்கி எச்சரித்துத் தடுத்திருக்கலாம். மத்திய அரசின் தலையீடு பெருமளவு இருப்பதால் ரிசர்வ் வங்கி செயலற்று இருந்திருக்கிறது.

"மொத்த சிஸ்டமும் ஃபெயிலியர்!" - வங்கிகள் தொடர்ந்து சரிவதற்கு என்ன காரணம்?

தற்போதுள்ள மத்திய அரசுக்கு பொருளா தாரத்தைச் சீர்திருத்தும் எண்ணமே இல்லை. 2016-ம் ஆண்டில் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த எதையுமே இன்று வரை அமல்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, 2017-ம் ஆண்டில் எஃப்.ஆர்.டி.ஐ (Financial Resolution and Deposit Insurance) மசோதாவை நிறைவேற்ற முயன்றது. அதன்படி, ஒரு வங்கி திவாலாகும் நிலைக்கு வந்தால், அதை சரிசெய்ய அரசாங்கம் நிதி செலவிடத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அந்த வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளை எடுத்துப் பயன்படுத்தி வங்கியை சரிசெய்யலாம். வங்கி நல்லநிலைக்கு வரும்போது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் டெபாசிட்டுகளை அளித்தால் போதும் என்றிருந்தது. அப்போது அந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு வந்ததால் நிறைவேற்றவில்லை. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2IFzAQN

தற்போது திரும்பவும் அதே மசோதாவை, சற்று வார்த்தைகளை மாற்றி எஃப்.எஸ்.டி.ஆர் (Financial Sector Development and Regulation bill) என்ற பெயரில் கொண்டுவரவுள்ளது. ஏற்கெனவே இருந்த மசோதாவில் 'பெயில்-இன்' (bail-in) என்ற வார்த்தை இருந்தது. தற்போது அதற்குப் பதிலாக 'தீர்ப்பாயம்' என்பதைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன்படி, வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளைப் பயன்படுத்துவது குறித்து தீர்ப்பாயம் முடிவெடுக்கும். அந்தத் தீர்ப்பாயத்தை மத்திய அரசே நியமிக்கும். ஆக, 'புதிய மொந்தையில் பழைய கள்ளு' என்பதுபோல் அதே மசோதாவைக் கொண்டுவந்துள்ளார்கள். அவர்களுக்கு தற்போது பெரும்பான்மையிலும் பெரிய சிக்கலில்லை என்பதால், இந்த மசோதாவை நிறைவேற்ற வாய்ப்பிருக்கிறது. அப்படி புதிய சட்டம் அமலுக்கு வந்தால் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும். எனவே, அந்த மசோதாவைச் சட்டமாக்க அனுமதிக்கக் கூடாது. மேலும், தனியார்மயமாக்கும் கொள்கையை விட்டுவிட்டு தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளாக மாற்ற வேண்டும். வங்கிக் கிளைகளையும் அதிகரிக்க வேண்டும்” என்கிறார் அவர்.

இதுகுறித்து ஆடிட்டர் ம.சத்யகுமாரிடம் பேசினோம். "2008-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் எல்லோருக்கும் கடனை அள்ளிக் கொடுத்திருக்கிறது யெஸ் பேங்க். இவர்கள் கடனுதவி செய்த ஐ.எல் & எஃப்.எஸ், திவான் ஹவுஸிங், ஜெட் ஏர்வேஸ் போன்ற நிறுவனங்கள் லாபகரமாக இயங்காதவை. இந்தத் தவறுகளுக்குக் காரணம், வங்கியை நிர்வகித்தவர்கள்தான். ரிசர்வ் வங்கி விதிமுறைகளைத்தான் வகுக்க முடியும். வங்கிகள் வழங்கும் ஒவ்வொரு கடனையும் தணிக்கை செய்துகொண்டிருக்க முடியாது.

"மொத்த சிஸ்டமும் ஃபெயிலியர்!" - வங்கிகள் தொடர்ந்து சரிவதற்கு என்ன காரணம்?

பொதுவாக, வங்கிகளில் அரசியல் தலையீடு இருக்கத்தான் செய்யும். அரசியல் கட்சிகளுக்கான நிதி ஆதாரங்களை தனியார் நிறுவனங்களே தருகின்றன. குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வரும்போது அந்தக் கட்சிக்கு ஆதரவான நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் கொடுக்கிறார்கள். அரசியல் கட்சிகள் முதல் வங்கிகள் வரை மொத்த சிஸ்டமும் ஃபெயிலியர் என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோன்ற தவறுகள் வருங்காலங்களில் நடக்காமல் தவிர்க்க, அரசாங்கம் மிகக்கடுமையான விதிமுறைகளைக் கொண்டுவர வேண்டும். வங்கிகளை ஆடிட் செய்வதில் தற்போதுள்ள முறையை மாற்றி, ஃபாரென்சிக் ஆடிட்டிங் எனும் நுட்பமான ஆடிட்டிங் முறைகளைக் கையாள வேண்டும். ஆடிட்டிங் விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும். ஆடிட்டிங் செய்பவர்களுக்கு தொழில்நுட்ப அறிவும் கட்டாயம் தேவை" என்றார்.

- எப்படிச் சரிந்தது யெஸ் பேங்க்? யெஸ் பேங்க்கைக் காப்பாற்ற அரசு வைத்திருக்கும் திட்டங்கள் என்னென்ன? குடும்பப் பகையால் வீழ்ந்ததா யெஸ் பேங்க்? - இந்தக் கேள்விகளுக்கான விரிவான விடை சொல்லும் ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > திருட்டுத் தலைவர்கள்... திவாலாகும் வங்கிகள்... கொள்ளை போகும் மக்கள் பணம்! https://www.vikatan.com/news/general-news/yes-bank-will-bankruptcy

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு