Published:Updated:

யானையும் எண்ணெயும்: இந்தியாவில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வேடிக்கையான கதை!

1901-ம் ஆண்டு, அஸ்ஸாம் மாநிலம் டிக்பாய் பகுதியில் அமைக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்தான், ஆசியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாகப் புகழ்பெற்று நிற்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

19-ம் நூற்றாண்டின் மத்திய காலம். உலகம் முழுவதும், எங்கள் நாட்டில் பெட்ரோல் கிடைக்காதா என போட்டி போட்டுக்கொண்டு பூமியைத் தோண்டிக்கொண்டிருந்த நேரம். அதிர்ஷ்டவசமாக, அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் தோண்டிய எட்வின் டிரேக் (Edwin Drake) என்பவருக்குக் கிடைத்தது, அந்த திரவப் புதையல். விளைவு, 1859-ம் ஆண்டு எட்வின் டிரேக் நவீன முறையில் தோண்டிய அந்த எண்ணெய்க் கிணறுதான், உலகின் முதல் நவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக வானுயர்ந்தது. அதில் கிடைத்த உத்வேகம், உலக நாடுகளின் எண்ணெய் தேடும் முயற்சியை இன்னும் கூர்தீட்டின.

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் கீழ் இருந்த இந்தியாவும், அதற்கு விதிவிலக்கல்ல. அப்போது, கல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட Mr. Goodenough என்பவரின் McKillop Stewart & Co நிறுவனம், இந்தியாவின் வடகிழக்கு பகுதியில், பெட்ரோல் தேடி அலைந்தது. இறுதியாக, 1866-ம் ஆண்டு அப்பர் அஸ்ஸாமின் ஜெய்பூர் (Jaypore,Upper Assam) பகுதியில், 100 அடி ஆழத்தில் கைக்கருவிகளால் ஒரு எண்ணெய் கிணற்றைத் (Hand dug well) தோண்டியது. எண்ணெய் இருப்பு உறுதிசெய்யப்பட்டாலும், அதற்கு மேல் Goodenough-ஆல் எதுவும் செய்ய முடியாமல் போக, அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

Oil
Oil
Image by drpepperscott230 from Pixabay

அதன் பின்னர் இரண்டாவது முயற்சியாக, 1867-ம் ஆண்டு மார்ச் 26-ம் நாள் அஸ்ஸாமின் மகும் (Makum,Upper Assam) பகுதியில், இம்முறை இயந்திரங்கள் உதவியோடு மூன்று எண்ணெய் கிணற்றைத் தோண்டினார் Goodenough. அதில் பலனும் கிடைத்தது. சொல்லும்படியான எண்ணெயையும் எடுத்துக்கொண்டார். ஆனால், இவையெல்லாம் மிகவும் சிறிய அளவிலான முயற்சியாகவே அப்போது கருதப்பட்டன. அதன் பிறகு பெரிய அளவிலான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமலேயே இருந்தன. இருப்பினும், அது இந்தியாவின் ஒரு மாபெரும் பெட்ரோல் கண்டுபிடிப்புக்கானத் தொடக்கப்புள்ளியாகவும், முன்னோடியாகவும் அமைந்தது.

ஆம், அந்தப் பெரும் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது 1867-ம் ஆண்டு. எலி வேட்டைக்குச் சென்றவன், புலியோடு திரும்பி வந்த கதையாக, வேடிக்கையாக அமைந்த சுவாரஸ்யமான அந்தச் சம்பவத்தைப் பார்ப்போம்.

காடு
காடு

1867-ம் ஆண்டு, அஸ்ஸாமின் திப்ருகாரில்-இருந்து (Dibrugarh to Margherita) மார்கெரிட்டா வரை, ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்தது அஸ்ஸாம் ரயில்வே வர்த்தக நிறுவனம் (Assam Railways & Trading Company (AR&T)). இந்தத் திட்டத்தின் செயல்பாட்டுக்காக, இத்தாலியப் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் சேர்ந்து இந்தியத் தொழிலாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர். காடுகள், மலைகளின் ஊடாகச் செல்லும் ரயிவே பாதை அது. நிச்சயம் மனிதனால் மட்டுமே தனியாக அந்த வேலையைச் செய்ய முடியாது என்பதால், யானைகளும் உதவிக்கு கொண்டு வரப்பட்டன. அந்தக்காலத்தில் பெரும்பாலான ரயில்வே பாதைகள், கட்டடங்கள், கோயில்கள் அமைக்க என அனைத்துக் கடினமான பளுதூக்கும் பணிகளிலும் யானைகள்தான் ஈடுபடுத்தப்பட்டன என்பது வரலாறு.

பெட்ரோல்: `பாபிலோன் தொடங்கி தற்போதுவரை!' - மனிதனுக்குப் பயன்பட்ட வரலாறு! ஒரு பார்வை
உணவுக்காக கிளை, தழைகளை அள்ளிச்செல்லும் யானை
உணவுக்காக கிளை, தழைகளை அள்ளிச்செல்லும் யானை

அது அஸ்ஸாமின் டின்சுகியா (Tinsukia) மாவட்டம். டெஹிங் (Dehing) நதிக்கரையின் ஓரம். விலங்குகள், பறவைகளைத் தவிர, வெளியாட்களின் கால்தடம் பதியாத நிலம். எங்கும் கொசுக்கள் நிறைந்திருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதி. அங்குதான், ரயில்பாதை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. அயல்நாட்டுப் பொறியாளகளும், இந்தியத் தொழிலாளர்களும் தற்காலிகக் கூடாரங்கள் அமைத்து, காட்டுக்குள் தங்கியபடியே தங்களின் பணிகளில் மும்முரமாகினர். உடன் கொண்டுவரப்பட்ட யானைகளின் தும்பிக்கையும் அவர்களின் வேலைக்கு வலுசேர்த்தது. அன்றைய தினம், எப்போதும்போல பணியை முடித்துவிட்டு, இருட்டுவதற்குள் முகாம்களுக்குத் திரும்பினார்கள் தொழிலாளர்கள். இரவு நேரம். தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொண்டு வருவதற்காக, காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்ட யானைகளும் திரும்பி வந்தன. உணவோடு வந்த யானைகளின் கால்களில் கறுப்பு நிற சகதி ஒட்டியிருந்ததைப் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு தொழிலாளியின் கூக்குரலோடு விடிந்தது மறுநாள் காலை. ஆங்கிலேய அதிகாரியின் இருப்பிடம் நோக்கி வேகமாக ஓடிவந்த அவன், யானைகளின் கால்களில் வித்தியாசமான கருப்பு நிற சகதிகள் ஒட்டியிருப்பதைப் பற்றிக் கூறினான். ஆச்சர்யத்தோடு கேட்டுக்கொண்ட ஆங்கிலேயர், யானைகளின் இருப்பிடம் நோக்கி நகர்ந்தார். முழுக்க நெடி. மூக்கில் கைவைத்தவர் அந்தக் கறுப்புச் சகதி என்னவென்று கண்டுகொண்டார். யானைகள் பயணித்த கால்தடங்களைப் பின்பற்றி, தொழிலாளர்களுடன் சேர்ந்து ஓடுகிறார். இறுதியில் ஓர் இடத்தில் அவர்கள் அனைவரும் எதையோ கண்டு நிற்கிறார்கள். ஆம், அவர் நினைத்தது உண்மைதான். அவை அனைத்தும் பூமியிலிருந்து வெடித்து வெளிவந்த கச்சா எண்ணெய்க் குமிழ்கள். மழையில் ஊறிய சேற்றைப்போல பரவிக்கிடந்தது.

nigeria பெட்ரோல்
nigeria பெட்ரோல்

ஆச்சர்யத்திலும், ஆர்வத்திலும் மூழ்கிப்போன அந்த ஆங்கிலேயர், அங்கிருந்த இந்தியத் தொழிலாளர்களைப் பார்த்து `Dig boy dig', `தோண்டு பையா தோண்டு...' என ஆங்கிலத்தில் உற்சாகமாகக் கட்டளை இடுகிறார். அந்தப் பகுதி முழுவதும் ஆழமாகத் தோன்றப்படுகின்றன. அப்படி தோண்டப்பட்ட குழிதான், பின்னாள்களில் ஆசியாவின் முதல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக வரலாற்றில் இடம்பெற்றது. ரயில்பாதை அமைப்பதற்காகச் சென்றவர்கள், `கறுப்புத் தங்கம்’ என்ற கச்சா எண்ணெய் புதையலைக் கண்டெடுத்து வந்தனர். 1889-ம் ஆண்டு, 178 அடி ஆழத்தில் இந்தியாவின் முதல் எண்ணெய்க் கிணறு அமைக்கப்பட்டது. அதன்பிறகு, AR&T என்றிருந்த அஸ்ஸாம் ரயில்வே நிறுவனம், AOC- Assam Oil Company என்ற புதிய எண்ணெய் நிறுவனத்தை ஆரம்பித்தது. மார்க்கெரிட்டா காட்டுப்பகுதி, ஆங்கிலேயர் அழைத்த `Dig boy dig' என்ற சொல்லிலிருந்து மருவி, டிக்பாய் (Digboi) எண்ணெய் நகரமாக உருமாறியது.

1893-ம் ஆண்டில் டிக்பாய் (Digboi) பகுதி முழுவதும் 10 எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு, நாளொன்றுக்கு 757 லிட்டர் (757.08 litres/day) கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டது. பின்னர், 1901-ம் ஆண்டு அதே பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, ஆசியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக பெயரும் பெற்றது. இந்த எண்ணெய்க் கிணறுகள், முதல் உலகப்போரின்போது, சுமார் 7,000 பேரல் (7,000 barrels per day) அளவிலான கச்சா எண்ணெயை நாளொன்றுக்கு உற்பத்தி செய்தன. அதன் பின்னர், ஆயிரக்கணக்கான எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டு, இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல்களாக அந்தப் பகுதி முழுவதும் காட்சி அளித்தது.

காஸிரங்கா தேசியப் பூங்கா
காஸிரங்கா தேசியப் பூங்கா

தற்போது, 130 ஆண்டுகள் கடந்தும், நாளொன்றுக்கு 240 பேரல் (240 barrels per day) அளவுக்கான கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. ஒப்பீட்டளவில் முன்பைக்காட்டிலும் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்திருந்தாலும், இந்த டிக்பாய் எண்ணெய்க் கிணறுதான் உலகின் மிகப்பழைமையான இயங்கும் எண்ணெய்க் கிணறு.

அஸ்ஸாம் தீ விபத்து
அஸ்ஸாம் தீ விபத்து

டிக்பாயின் நூற்றாண்டு தினத்தைக் கொண்டாடும் வகையில், 1989-ம் ஆண்டு, இந்திய அஞ்சல்துறை ஸ்டாம்ப் வெளியிட்டது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), கீழ் இயங்கும் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மற்றொரு பகுதியில், கடந்த 2020-ம் ஆண்டு கச்சா எண்ணெய் கசிந்து, பெரிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது. மூன்று பேரை பலிகொண்ட இந்தத் தீ விபத்தை, சுமார் ஐந்து மாதங்கள் தொடர் போராட்டத்துக்குப் பின்னர்தான் இந்திய அரசால் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.

பெட்ரோலின் சுவாரஸ்யமான வரலாறு குறித்துத் தெரிந்துகொள்ள இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும் பெட்ரோல்: `பாபிலோன் தொடங்கி தற்போதுவரை!' - மனிதனுக்குப் பயன்பட்ட வரலாறு! ஒரு பார்வை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு