Published:Updated:

`திரும்ப எங்க ஊர்ப்பக்கம் வந்திராத மகாராசா..!’ - மலைப்பாம்புக்கு ஆரத்தி எடுத்த கிராம மக்கள்

வாணியம்பாடி அருகே, கோழியை விழுங்கிய மலைப்பாம்பைப் பிடித்து, கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வேண்டிக்கொண்ட நிகழ்வு, அச்சம் கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

மலைப்பாம்புக்கு ஆரத்தி எடுத்த மக்கள்
மலைப்பாம்புக்கு ஆரத்தி எடுத்த மக்கள்

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், நசீர் அகமது. இவர், தன் தோட்டத்தில் கோழிகள் வளர்க்கிறார். திடீரென, கோழிகள் வழக்கத்துக்கு மாறாகக் கொக்கரிக்கும் சத்தம் கேட்டு, நசீர் அகமதுவின் குடும்பத்தினர் தோட்டத்துக்குச் சென்று பார்த்தனர். 

மலைப்பாம்பு
மலைப்பாம்பு

அப்போது, 10 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு, கோழி ஒன்றை கவ்விப் பிடித்து, விழுங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து திகைத்துப் போயினர். உடனே, வாணியம்பாடியை அடுத்த ஜாப்ராபாத்தைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் இளைஞர் இலியாஸ்கான் என்பவரை அங்கு வரவழைத்தனர். 

பாம்பின் வாய்க்குள் சிக்கி உயிரிழந்த கோழியை, அவர் பிடுங்கினார். பாம்பு, வாழைத் தோட்டத்துக்குள் வேகமாக ஊர்ந்துசென்றது. இலியாஸ்கான், அதை விரட்டிச்சென்று லாகவமாகப் பிடித்தார். மலைப்பாம்பைப் பார்க்க ஊர் மக்கள் திரண்டுவந்தனர். திடீரெனப் பெண் ஒருவர் ஆரத்தித் தட்டுடன் அங்கு வந்தார். 

ஆரத்தி எடுத்த பெண்
ஆரத்தி எடுத்த பெண்

மலைப்பாம்பைப் பார்த்து, ‘‘நல்லா இருப்ப மகா ராசா... இனிமேல் எங்க வீட்டுப் பக்கம் வராதே; எங்களுக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்திடாதே’’ என்று பயபக்தியுடன் வேண்டிக்கொண்டு, கற்பூரம் ஏற்றி பாம்புக்கு ஆரத்தி எடுத்து வணங்கினார். 

வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்தப் பாம்பை, அந்தப் பெண் உட்பட, மேலும் சிலர் கையெடுத்துக் கும்பிட்டு வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு, அச்சம் கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

மலைப்பாம்பு
மலைப்பாம்பு

பாம்பு பிடிக்கும் நபரான இலியாஸ்கான், இதுநாள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட கொடிய விஷப் பாம்புகளைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்திருக்கிறார். பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர். இரண்டு நாள்களுக்கு முன்புகூட, ஒரு வீட்டுக்குள் புகுந்த இரண்டு நாகப்பாம்புகளைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.