Published:Updated:

``ஊசி, பாசி, பொம்மையெல்லாம் வீணாப்போச்சு... சாப்பாட்டுக்கே திண்டாடுறோம்”- கலங்கும் நாடோடிகள்!

நாடோடிகள் மக்கள்
நாடோடிகள் மக்கள்

"முன்னாடியெல்லாம் கொக்கு, முயல், கிளி வேட்டைக்குப் போவோம். என்கிட்ட நாட்டுத் துப்பாக்கி இருக்கு. லைசென்ஸும் வெச்சிருக்கேன். ஆனா, இப்போ ஃபாரஸ்டுக்காரங்க, போலீஸ்காரங்க வேட்டைக்குப் போக விடறதில்லை."

அரக்கோணம் அருகிலுள்ள தணிகை போளூர் கிராமத்தில் இருக்கிறது நாடோடி சமூக மக்களின் குடியிருப்பு. இங்குள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களில், 500-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தீப்பெட்டிகளை வரிசையாக அடுக்கியதுபோல, இந்த மக்களின் சிறிய குடிசை வீடுகளும் ஓட்டு வீடுகளும் அணிவகுக்கின்றன. இவர்கள் முன்பெல்லாம் முயல், கொக்கு உள்ளிட்ட பறவைகள், பிராணிகள் வேட்டைக்குச் செல்வது வாடிக்கை. அதற்குத் தடைவிதிக்கப்பட்டதால், ஊசி, பாசி, பொம்மைகள் விற்பதுதான் இவர்களின் தற்போதைய பிரதான தொழில். கொரோனா ஊரடங்கால் வேலைக்குச் செல்ல முடியாமல், பிறர் வழங்கும் சிறு உதவிகளால் நகர்கின்றன இந்த மக்களின் அன்றாட பொழுது.

நாடோடி சமூக மக்கள்
நாடோடி சமூக மக்கள்
இங்குள்ள பெற்றோர்களும் படிக்கவில்லை. தங்கள் பிள்ளைகள் கல்வி கற்பதையும் இவர்கள் உறுதிசெய்வதில்லை. இந்தக் குடியிருப்பிலுள்ள 250 குழந்தைகளில் ஒருவர்கூட முறையாகக் கல்வி கற்க பள்ளிக்குச் செல்வதில்லை என்ற விவரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே நிலை தொடர்ந்தால், இந்த மக்கள் எப்படி முன்னேற்றமடைவார்கள்?

அங்கிருந்த பத்மினியிடம் பேசினோம். “இங்கிருக்கிற எங்க மக்களுக்குத் தெரிஞ்ச ஒரே வேலை ஊசி, பாசி விக்கிறதுதான். மெட்ராஸ் பாரீஸ்ல சேட்டுங்க கடையிலதான் நாங்க விக்கிற பொருளையெல்லாம் மொத்தமா வாங்குவோம். இதுக்காக ரெண்டு வாரத்துக்கு ஒருவாட்டி மெட்ராஸ் போவோம். தெனமும் காலையில ஏழு மணிக்கு வீட்டுல இருந்து கிளம்புவோம். பக்கத்து ஊர்களுக்கும், சிலநேரம் பக்கத்து மாவட்டத்துக்கூட போவோம். வியாபாரத்தை முடிச்சுட்டு மறுபடியும் வீட்டுக்கு வர்றத்துக்கு சாயந்திரம் ஆறு ஏழு மணியாகிடும். பகல் முழுக்க வெயில்ல அலைஞ்சா, 300 ரூவா கெடைக்கும். அதுலதான் 200 ரூவா கடனுக்குப் போக, மீதி இருக்கும் 100 ரூவாய்லதான் குடும்பத் தேவை எல்லாத்தையும் பார்த்துக்கணும்.

பத்மினி
பத்மினி

கொரோனா வந்திருக்குனு வீட்ட விட்டு வெளிய வரக்கூடாதுனு சொல்லிட்டாங்க. ஒரு மாசத்துக்கு மேல நாங்க வியாபாரத்துக்குப் போகவேயில்லை. ஃபைனான்ஸ்ல கடன் வாங்கிதான் நாங்க சரக்கு (விற்பனைப் பொருள்கள்) வாங்குவோம். என் வீட்டுல பதினையாயிரம் ரூவா சரக்கு அப்படியே இருக்கு. மூவாயிரம் ரூவா பலூனெல்லாம் ஒண்ணோட ஒண்ணு ஒட்டிகிட்டு வீணா போயிடுச்சு. ஊசியெல்லாம் துருப்பிடிச்சுப்போகுது. இங்க வாழுற எல்லா மக்களோட நிலைமையும் இதுதான். என்ன பண்றதுனே தெரியலை. கடனையெல்லாம் எப்படி அடைக்கிறதுனே தெரியலை. ரொம்ப பேஜாரா இருக்குது” என்று ஏக்கத்துடன் கூறுகிறார் பத்மினி.

ஊசி, பாசி, பொம்மைகள் நாளடைவில் துருப்பிடித்து வீணாகிவருகின்றன. எனவே, அவற்றை கவரில் அடைத்து அனைவரும் அவரவர் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். இதனால், வீட்டில் இடநெருக்கடி ஏற்படுவதால், பலரும் இரவில் வீட்டு வாசலில் உறங்குகின்றனர்.

நாடோடி சமூக மக்கள்
நாடோடி சமூக மக்கள்

“ஊர் முழுக்க நெறைய ஃபேன்ஸி ஸ்டோர் கடைங்க வந்திடுச்சு. மக்கள் அதுக்குதான் அதிகம் போறாங்க. நிரந்தரமில்லாத இந்தப் பொழப்பை நம்பியே பெருவாரியான எங்க ஜனங்களெல்லாம் தவிப்புலயே வாழ்ந்துட்டிருக்காங்க. என் பையனுக்கு 18 வயசு. பொண்ணுக்கு 15 வயசு. என் வீட்டுக்காரர் உட்பட நாங்க நாலு பேருமே ஊசி, பாசி விக்கிற வேலையைத்தான் செய்றோம். ரேஷன்ல கொடுத்த பொருளெல்லாம் தீர்ந்துப்போச்சு. ஒருசிலர் எங்களுக்குக் கொஞ்சம் அரிசி, எண்ணெய் கொடுத்தாங்க. அதுவும் எத்தனை நாளைக்கு வரும்?

ரேஷன் அரிசியும் கொஞ்சம்தான் இருக்கு. அந்த அரிசியும் நல்லா இல்லை. ஆனாலும், ரெண்டு பேர் சாப்பிடவேண்டிய சாப்பாட்டை, நாலு பேர் சாப்பிடுறோம். இப்படித்தான் ஒரு மாசத்துக்கு மேல எங்க நிலைமை இருக்கு. வூட்டுல சர்க்கரை, டீத்தூள் எதுவுமில்லை. பால் வாங்கவும் காசில்லை. டீகூட குடிக்க வழியில்லை. வெறும் கஞ்சி சோத்தை மட்டும் குடிச்சுகிட்டு பொழப்பை ஓட்டுறது கஷ்டமா இருக்கு. தண்ணிக்குப் பிரச்னையில்லை. பசி வராம இருக்க நிறைய தண்ணிக் குடிச்சுக்கிறோம்.

இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் அப்பாலதான் ஸ்கூல் இருக்கு. இங்கிருக்கிற கொழந்தைங்க அவ்வளவு தூரம் நடந்து ஸ்கூல் போக சிரமப்படுதுங்க. பெத்தவங்களும் வூட்டுலயே இருந்தா, புள்ளைங்க ஸ்கூல் போவுதானு கவனிக்க முடியும். தெனமும் நாங்க வேலைக்குப் போயிடுவோம். புள்ளைங்க ஸ்கூல் போவுதா இல்லையானு யாரு கவனிப்பாங்க?
ரவி

வீட்டுல டி.வி இருக்கு. ஆனா, கேபிள் பில் கட்டி பல மாசமாச்சு. அதையும் கட் பண்ணிட்டாங்க. எங்களை வேலைக்குப் போக வுட்டா நாங்களே சம்பாதிச்சுப்போம். தெனமும் பல ஊர் போய், நெறைய மக்களைச் சந்திச்சே பழகிட்டோம். இப்போ மாசக்கணக்குல வீட்டுலயே அடைஞ்சி கிடக்க முடியலை. நிலைமை சரியாக இன்னும் எத்தனை நாளாகும்னு தெரிஞ்சா சொல்லுங்க...” - பத்மினியின் முகத்தில் பெரும் ஏக்கம் தொற்றிக்கொண்டது.

ஆடைகள்கூட இல்லாமல், மண்ணில் விளையாடிக்கொண்டிருந்தன அந்த மக்களின் குழந்தைகள். அங்கிருந்த இளைஞர்களும் கல்வி கற்காமல் பெற்றோர்களுடன் ஊசி, பாசி விற்கும் வேலைக்குச் செல்கின்றனர். அவர்கள் கூட்டாக அமர்ந்து பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தனர். இங்குள்ள 15 வயதுக்குட்பட்ட 250 குழந்தைகளில் ஒருவர்கூட முறையாக பள்ளிக்குச் செல்லாதது பெங்கொடுமை. இந்தக் குடியிருப்பிலுள்ள ஒட்டுமொத்த மக்களுமே கல்வியின் நுகர்வே இல்லாதவர்கள். அதனால் ஊசி, பாசி விற்பதைத் தவிர வேறு தொழில் செய்வது குறித்த தெளிவு இல்லை. உலக நிகழ்வுகள் எதுவுமே இந்த மக்களுக்குத் தெரிவதில்லை.

நாடோடி சமூக மக்கள்
நாடோடி சமூக மக்கள்
பொருளாதார மேம்பாட்டுடன், தங்களுக்கும் சமூகத்தில் மதிப்புமிக்க நிலை உருவாக வேண்டும் என்பது இந்த மக்களின் பல தலைமுறைக் கனவு. அதற்கு கல்வி மட்டுமே உதவும். ஆனால், தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கிடைப்பதை உறுதிசெய்ய இந்த மக்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை.

இதுகுறித்து ரவி என்பவரிடம் பேசியபோது, “முன்னாடியெல்லாம் நாங்க நாடோடிகளா இருந்தோம். வியாபாரத்தைப் பொறுத்து அப்பப்போ வெவ்வேறு ஊர்கள்ல குடில் போட்டு தங்குவோம். அதனால, பசங்களை ஸ்கூலுக்கு அனுப்ப முடியாம இருந்தோம். எங்களுக்குனு தனியா வீடும் குடியிருப்பும் கிடைச்சு கொஞ்ச வருஷம்தான் ஆகுது. இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் அப்பாலதான் ஸ்கூல் இருக்கு. இங்கிருக்கிற கொழந்தைங்க அவ்வளவு தூரம் நடந்து ஸ்கூல் போக சிரமப்படுதுங்க. பெத்தவங்களும் வீட்டுலயே இருந்தா, புள்ளைங்க ஸ்கூல் போவுதானு கவனிக்க முடியும். தெனமும் நாங்க வேலைக்குப் போயிடுவோம். புள்ளைங்க ஸ்கூல் போவுதா இல்லையானு யாரு கவனிப்பாங்க?

ரவி
ரவி

ஒரு கொழந்தை ஸ்கூலுக்குப் போகாட்டி, எல்லாக் கொழந்தையும் லீவு எடுத்துக்குது. நெறைய முறை சொல்லிப் பார்த்தாச்சு. பசங்களுக்குப் படிக்க விருப்பமேயில்லை. வேறு வழியில்லாம வெவரம் தெரிஞ்ச பத்து வயசுல இருந்து புள்ளைங்களை எங்ககூட வேலைக்குக் கூட்டிட்டுப்போயிடுவோம். எங்க குடியிருப்பு பக்கத்துலேயே அரசாங்கம் ஸ்கூலு ஒண்ணு கட்டிக்கொடுத்தா, புள்ளைங்களும் சரியா படிக்கப் போகும்.

முன்னாடியெல்லாம் கொக்கு, முயல், கிளி வேட்டைக்குப் போவோம். என்கிட்ட நாட்டுத் துப்பாக்கி இருக்கு. லைசென்ஸும் வெச்சிருக்கேன். ஆனா, இப்போ ஃபாரஸ்டுக்காரங்க, போலீஸ்காரங்க வேட்டைக்குப் போக வுடுறதில்லை. அந்தத் தொழிலையே விட்டுட்டோம். ஊசி, பாசி, பொம்மை விக்கிறதுதான் எங்க ஜன மக்கள் எல்லாத்துக்கும் ஒரே வேலை. இப்ப யாவாரம் இல்லாம ரொம்பவே சிரமத்துல இருக்கோம். யாராச்சும் முடிஞ்ச உதவியைச் செய்ங்க” என்று ஆதங்கத்துடன் வேண்டுகோள் விடுக்கிறார் ரவி.

நாடோடி சமூக மக்கள்
நாடோடி சமூக மக்கள்
பொருளாதாரச் சிக்கல், விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட காரணங்களால், இந்த மக்கள் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதைக் கண்டும் காணாமலும் இருக்கின்றனர். இதை அப்படியே கடந்துசெல்லவும் முடியாது. இந்த மக்களின் முன்னேற்றத்துக்கு, இங்குள்ள குழந்தைகளுக்கு தடையற்ற கல்வி கிடைப்பதை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உறுதிசெய்ய வேண்டும். இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
அடுத்த கட்டுரைக்கு