Published:Updated:

’டிக் டாக்’ திருமணம்... வேகம் பிடித்த பைக் பயணம்... - போலீஸிடம் சிக்கிய புதுமணத் தம்பதி!

representational image
representational image

டிக் டாக் மூலம் பழக்கமான பெண்ணை தேவாலயத்துக்கு அழைத்துச் சென்று திருமணம் முடித்துக்கொண்டு திரும்பி வரும்போது, புதுமணத் தம்பதிகள் போலீஸில் சிக்கிக்கொண்டனர்.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்குமாறு அரசு தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. கடுமையான சிரமங்களுக்கு இடையே காவல்துறையினர் பணியாற்றிவருகிறார்கள்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆனால், எந்தக் கவலையும் இல்லாமல் ஒரு சிலர் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார்கள். ஊரெல்லாம் கொரோனா பீதியில் இருக்கும் சூழலில், கேரளாவில் ஓர் இளம் பெண்ணும் இளைஞரும் டிக் டாக் திருமணம் செய்து காவல்துறையிடம் சிக்கியிருக்கிறார்கள்.

சோர்வடைவதில் இருந்து தப்பிக்க வழி! - க்வாரன்டீனில் இருப்பவர்களுக்கு புத்தகம் வழங்கும் காவல்துறை

திருச்சூர் மாவட்டம் கோரட்டி காவல் நிலையத்துக்கு உள்ளிட்ட சாலையில் காவல்துறையினர் வழக்கமான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். கொரோனா காலம் என்பதால் அவசியமின்றி சாலையில் சுற்றித்திரிவோர் மீது வழக்குப்பதிவு செய்வதற்காக இந்தச் சோதனை நடந்தது.

காவல்துறை சோதனை
காவல்துறை சோதனை

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பி.கே.அருண் தலைமையிலான போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, விலை உயர்ந்த பைக்கில் ஓர் இளம் பெண்ணுடன் இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவரது பைக்கை நிறுத்துமாறு போலீஸார் கையைக் காட்டியபோதும் அதைக் கண்டுகொள்ளாமல் பைக் வேகமாகச் சென்றுவிட்டது.

பைக்கின் நம்பரை வைத்து அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்த போலீஸார், அவரை காவல்நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். அதனால் அச்சம் அடைந்த அந்த இளைஞர், தனக்குப் பதிலாக வேறொரு இளைஞரை அனுப்பிவைத்தார். 

representational image
representational image

பைக்கில் சென்ற இளைஞரின் உடையை அணிந்தபடி வந்த அந்த இளைஞரிடம் போலீஸார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவரை வழக்கமான முறைப்படி விசாரித்ததும், தான் உண்மையான நபர் அல்ல என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதன் பின்னர், அந்த இளைஞரை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, பெங்களூருவில் நர்ஸிங் படிக்கும் இளம் பெண்ணுடன் தனக்கு டிக் டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவருக்குத் திருமண வயது வரும்வரை காத்திருந்ததையும் தெரிவித்துள்ளார்.

டிக் டாக்
டிக் டாக்

தற்போது அவருக்கு உரிய வயது வந்துவிட்டதால், இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். தங்களின் திருமணத்தை டிக் டாக் செயலியில் பதிவேற்ற முடிவெடுத்த இருவரும், அருகில் உள்ள தேவாலயத்துக்குச் சென்று தாங்களாகவே திருமணம் செய்துகொண்டதுடன், அதை டிக் டாக் செயலியில் பதிவேற்றமும் செய்துள்ளனர்.

திருமணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வரும்போது போலீஸார் மறித்ததால், தப்பிச் சென்றதாகவும் அந்த இளைஞர் ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர், அந்த இளம் பெண் மற்றும் இரு குடும்பத்தினரையும் அழைத்துப் பேசிய போலீஸார் இருவரையும் எச்சரித்து அனுப்பிவைத்தனர். 

`போதைக்கு அடிமையான 15 வயது மகன்!’ - தந்தையின் செயலைப் பாராட்டிய கேரள போலீஸ்

காவல்துறையினர் அழைத்து தெரிவித்த பின்னரே, இரு குடும்பத்தினருக்கும் அவர்களின் திருமண விவரம் தெரிய வந்திருக்கிறது. அவர்களின் திருமண வீடியோ இணையத்தில் வைரலாகிவருவது கூடுதல் தகவல்.

அடுத்த கட்டுரைக்கு