Published:Updated:

`ஸ்டார் ஹோட்டலில் விருந்து; மெட்ரோ ரயிலில் பயணம்!'- சென்னை புறப்பட்ட பழங்குடியின குழந்தைகள் குஷி

tribe children's
tribe children's

ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த அந்தப் பழங்குடியின குழந்தைகளின் கண்களில் `வாழ்வில் ஒரு மிகப்பெரிய பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறோம்’ என்கின்ற உற்சாகமும், உள்ளூற ஒருவிதமான பதற்றமும் தெரிந்தது.

சாதாரண உடை, எண்ணெய் வைக்காத தலை, செருப்பில்லா கால்களுடன் ஒரு 50 பழங்குடியின குழந்தைகள் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்தனர். அவர்களுடைய கண்களில் ஆச்சர்யமும், பதற்றமும் ஒருசேர தெரிந்தன. வாழ்வில் முதல் முறையாக ஒரு பெரும் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். அதுவும் இதுவரை பார்க்காத ரயிலில் என்றால் இருக்காதா என்ன? ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா பர்கூர் மலைப்பகுதியின் கடைக்கோடியில் வசிக்கும் பழங்குடியினக் குழந்தைகள் அவர்கள். சமீபத்தில்தான் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு பேருந்து வசதியே கிடைத்தது.

tribe children's
tribe children's

காட்டிலும், மேட்டிலும் நடந்த இந்த பிஞ்சுக் கால்களின் ரேகைகள், நிச்சயமாக அந்த மலையைத் தாண்டி பெரிதாக வேறு எங்கும் பதிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளை, ‘நீ வாழும் இந்த மலை மட்டுமல்ல உலகம். இந்த மலைக்கு கீழே எவ்வளவு பெரிய உலகம் இருக்கிறது பார்’ என ஒரு 50 பழங்குடியின குழந்தைகளை ரயிலில் சென்னைக்கு அழைத்துச் சென்று அசத்தியிருக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த நட்ராஜ் என்பவர்.

``இந்த உலகம் இவ்ளோ பெருசா..!’’ - நீதிக்காக பழங்குடியின இளைஞரின் முதல் ரயில் பயணம்

மத்திய அரசாங்கத்தினுடைய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் `தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் சுடர் அமைப்பைச் சேர்ந்த எஸ்.சி.நட்ராஜ் என்பவர் ஈரோடு மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் 7 இடங்களில் `குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி’களை கடந்த 10 ஆண்டுகளாக நடத்திவருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக, சிறப்புப் பள்ளியில் பயிலும் பழங்குடியின குழந்தைகளை சென்னைக்கு அழைத்துச் சென்று, பல இடங்களைச் சுற்றிக்காட்டி அழைத்துவருகிறார். `இந்தப் பழங்குடியின குழந்தைகளுக்கு, வாழ்வின் மறுபக்கத்தைக் காட்ட வேண்டுமென்பதற்காகவே இப்படியான பயணத்தை வருடா வருடம் மேற்கொள்கிறோம்’ என்னும் சுடர் நட்ராஜிடம் பேசினோம்.

tribe children's
tribe children's

``வெறும் பாடப்புத்தகத்தில் மட்டுமே கல்வியைக் கற்கும் இந்த பழங்குடியின குழந்தைகளை, சமுத்திரம் போன்று பரந்து விரிந்திருக்கும் இந்தச் சமூகப் பரப்பில் ஒரு நான்கு நாள்களுக்கு உலவ விடுவதன் மூலம் பல நேரடி அனுபவங்கள் அவர்களுக்குக் கிடைக்கின்றன. இந்த நான்கு நாள் சென்னைப் பயணத்தில் மெரினா பீச், அண்ணா நூலகம், கிண்டி அருங்காட்சியகம், சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு பயணம் போன்றவற்றை மேற்கொள்ளவிருக்கிறோம். குழந்தைகள் தங்குவதற்காக மண்டபம், பயணச் செலவுகள், சாப்பாடு போன்றவற்றிற்காக சமூக ஆர்வலர்களான நண்பர்கள் பலர் உதவிகளைச் செய்கின்றனர். நண்பர் ஒருவர் மூன்று நட்சத்திர ஹோட்டலில் ஒருநாள் குழந்தைகளுக்கு விருந்து கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த சென்னைப் பயணம் பழங்குடியின குழந்தைகளுக்கு ஒரு பெரும் விசித்திரமாக இருக்கிறது. இதில் ஒருசிலரைத் தவிர மற்ற குழந்தைகளுக்கு இதுதான் முதல் ரயில் பயணம். ரயிலைப் பார்த்து உற்சாகமடைகிறார்கள். காட்டுக்கு வெளியே இவ்வளவு பெரிதாக உள்ள உலகத்தைப் பார்த்து ஆச்சர்யமடைகிறார்கள். மாடர்ன் உலகத்தை உற்றுநோக்குகிறார்கள்.

tribe children's
tribe children's
Vikatan

கடலை பார்த்து `என்ன சார், இந்த ஆறு இவ்ளோ பெருசா இருக்குது எப்படி?’ என்பன போன்ற பல கேள்விகளைக் கேட்கிறார்கள். கல்வியைப் பெறுவதன் மூலமாகத்தான் இப்படியான உலகில், இந்த வசதிகளையெல்லாம் அனுபவிக்க முடியும் என்பதை உள்ளாற உணர்கின்றனர். சென்னையிலிருந்து திரும்பியதும் ஒரு ஆறு மாத காலத்துக்கு, இந்த நினைவுகளை அசைபோடுகின்றனர். அந்தவகையில், இந்தக் குழந்தைகளுக்கு இந்தப் பயணம் ஒரு பெரும் பாடத்தைச் சொல்லாமல் சொல்லிக் கொடுக்கிறது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு